இலங்கைப் போரை தடுத்து நிறுத்தாத காங்கிரசுக்கு கடும் கண்டனம்: பெண்கள் பேரணி- சாலை மறியல்

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்திபவன் நோக்கி ஊர்வலமாக செல்ல முயற்சித்த பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேவேளையில் போர் நிறுத்தம் கோ›ரி தொடர்ந்து 6 ஆவது நாளாக உண்ணாநிலைப் போராட்டம் நடத்திவரும் பெண்களின் உடல்நிலை மோசமடைந்து வருவதால் தமிழ் உணர்வாளர்களிடையே ஒருவித அச்சம், பதற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

கொலைவெறி பிடித்த சிங்களப் படையினர் நச்சுக் குண்டுகளை வீசி அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவித்து வருகின்றனர். இதற்கு தாய்த் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்து வரும் தமிழர்கள் போர் நிறுத்தம் செய்யக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழீழ படுகொலைக்கு எதிரான பெண்கள் அமைப்பு என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 13 ஆம் நாள் சென்னை கொளத்தூரில் உள்ள தியாகி முத்துக்குமாரன் இல்லம் அருகே உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினர்.

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும், உணவு, மருந்தின்றி தவிக்கும் அப்பாவி தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

கொளத்தூரில் காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், அந்த பெண்கள் அனைவரும் எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். ”

சுமார் 20 பெண்கள் 13 ஆம் நாளில் இருந்து உண்ணாநிலைப் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். இவர்களைத் தவிர மேலும் நூற்றுக்கணக்கானோர் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்த மத்திய அரசு” நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று முன்நாள் காங்கிரஸ் தலைமையிடமான சத்தியமூர்த்திபவனை முற்றுகையிட்டனர்.

தங்கள் கோரிக்கையினை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலுவை சந்தித்து வலியுறுத்தப்போவதாக அவர்கள் கூறினர். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள், சனிக்கிழமையன்று தங்கபாலு உங்களை எல்லாம் நேராகவே வந்து சந்தித்துப் பேசுவார் என்று உறுதியளித்தனர். இதையடுத்து முற்றுகைப் போராட்டம் நடத்திய பெண்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று ஏராளமான பெண்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

கே.வி.தங்கபாலு தங்களைச் சந்திக்க வருவார் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் பிற்பகல் 12:00 மணியாகியும் அவர் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சுமார் 600 பெண்கள் சத்தியமூர்த்திபவனை நோக்கி ஊர்வலமாக செல்ல முயற்சித்தனர்.

தாயகம் எதிரில் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். இதனையடுத்து அந்தப் பெண்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்களில் 146 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் புதுப்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காவலில் வைத்தனர்.

இந்தப் போராட்டத்தில் பார்வையற்றோர் சங்கத்தைச் சேர்ந்த 20 பேரும் கலந்துகொண்டனர்.

இதனிடையே தொடர்ந்து 6 ஆவது நாளாக நேற்றும் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. உடல் சோர்வு காரணமாக உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் பலரும் படுத்தபடியே கிடந்தனர்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தும் வரை தங்களின் உண்ணாநிலைப் போராட்டம் தொடரும் என்று அவர்கள் ஆவேசமாகக் கூறினர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்திற்கு வந்து உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களுடன் உரையாடினார்.

Comments