வன்னி மக்கள் பேரவலம்: அமெரிக்காவின் அறிக்கைக்கு விடுதலைப் புலிகள் வரவேற்பு

வன்னியில் உள்ள மக்கள் படும் பேரவலம் தொடர்பாக அமெரிக்காவின் அரசாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையினை தமிழீழ விடுதலைப் புலிகள் வரவேற்றுள்ளனர்.

இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வன்னியில் உள்ள முல்லைத்தீவு பிராந்தியத்தில் அதிகரித்திருக்கும் மனிதப் பேரவலங்களைத் தொடர்புபடுத்தி 16 ஏப்ரல் 2009 அன்று வெளியிடப்பட்ட அமெரிக்க அரசாங்கத்தின் அறிக்கையில் உண்மையான கவலைகள் வெளிப்படுத்தியிருந்தமைக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் பாராட்டுத் தெரிவிக்கின்றது.

சிறிலங்காவின் ஆயுதப்படைகளால் பாதுகாப்பு வலயப் பகுதிகளை நோக்கி மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளில் இருந்து விபரிக்கமுடியாத துயரங்களாலும் நாளாந்த இறப்புக்களாலும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தமிழ்மக்களுக்கு மனக்குறைகளை அகற்றுகின்ற வகையில் உண்மையான பாதுகாப்பை அளிக்கின்ற கருத்துமிக்க அனைத்துலக செயற்பாட்டை நோக்கியதான முக்கியமான படிமுறையாக இந்த அறிக்கை இருக்கின்றது.

பாதுகாப்பு வலயப்பகுதியில் உள்ள பொதுமக்களின் துன்பகரமான நிலைகளுக்குப் புறம்பாக, தமிழர் தாயகத்தில் உள்ள ஏனைய பகுதிகளில் உள்ள தமிழ்மக்களும் மோசமான இராணுவ அடக்குமுறைகளுக்கும், எண்ணிக்கையற்ற அவமதிப்புகளுக்கும் முகம் கொடுத்துவருவதுடன் அவர்களுக்கான அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றது.

வவுனியாவில் உள்ள இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் தடுப்பு முகாம்களுக்குள் சிறிலங்கா அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்கள் சிறிலங்காவின் அரச படைகளால் இடையறாது தொந்தரவளிக்கப்படுவதுடன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பிரதேசங்களில் உள்ள தமிழ்மக்கள் சிறிலங்கா இராணுவம், காவல்துறை மற்றும் துணை இராணுவக் குழுக்களால் நாளாந்தம் கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.

தீவின் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் இடம்பெயர்ந்து இருப்பவர்கள் அவர்களது சொந்த வீடுகளுக்கும் கிராமங்களுக்கும் பாதுகாப்பாக திரும்புவதற்கு உதவும் வகையிலான வினைதிறன்மிக்க பொறிமுறை (Effective Mechanism) எதுவும் இல்லாது காலவரையறையற்ற ரீதியில் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இதுவரை, உலகின் ஏனைய பாகங்களில் இருக்கும் நாடுகள் குற்றச்சாட்டுக்களை பகிர்ந்துகொள்வதில் தமது கவனத்தைக் குவித்துள்ள வேளையில் சிறிலங்கா இராணுவத்தினால் பாதுகாப்பு வலயப் பகுதியில் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்படும் தமிழ்மக்களது துயரங்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் தீர்வுகளை கண்டறியும் முக்கியத்துவத்தை வற்புறுத்திக்கூறுகின்ற ஒரேயொரு அரசாங்கமாக அமெரிக்கா இருக்கின்றது.

பெரும்பான்மைச் சிங்கள அரசாங்கத்தினால் சிறுபான்மை தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இனவாதம், ஏற்றத்தாழ்வு, வேறுபாடுகளைக் கண்டறிதல் போன்றவற்றை வெளிப்படுத்தும் தேவையை வெளிப்படையாக உண்மை என்று ஒப்புக்கொண்டிருக்கின்ற ஒரேயொரு அரசாங்கமாக இருப்பது மட்டுமல்லாமல் இதுவே சுதந்திரத்துக்கான எமது போரின் அடிப்படைக் காரணம் என்பதனையும் ஒப்புக்கொண்டிருக்கின்றது.

தம்மை வழிநடத்தும் முறை தொடர்பாகவும் தமக்குள்ள சமமற்ற நிலைதொடர்பாகவும் போரிட்டு வருகின்ற சமூகம் சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் அவர்களின் உறவினர்களுக்கு ஏற்பட்ட எண்ணற்ற இறப்புக்களால் உண்டான காயங்களை ஒருபோதும் மறக்கமாட்டாது.

சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்ப்பது போல இராணுவத்தீர்வின் மூலம் ஒருபோதும் இந்தப் பிரச்சனையை தீர்த்துவைக்கமுடியாது.

அமெரிக்காவினாலும் ஏனைய அனைத்துலக சமூகத்தினாலும் வற்புறுத்தப்படுவது போல எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் பேச்சுக்களுக்குச் செல்வதில் அதற்குள்ள ஈடுபாட்டை விடுதலைப் புலிகள் திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றது.

தமிழ்மக்களின் மனிதாபிமான நுழைவு (Humanitrarian access), பாதுகாப்பு (Security), நகர்வு (Movement) மற்றும் நலன்கள் தொடர்பான அனைத்து விடயங்களிலும் கருத்துமிக்க பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு விடுதலைப் புலிகள் தயாராக இருக்கின்றது.

பொதுமக்கள் வாழும் பகுதிகளுக்குள் எறிகணைத் தாக்குதல்கள், குண்டுத்தாக்குதல் உட்பட அனைத்துவிதமான இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்தை விடுதலைப் புலிகள் வற்புறுத்துகின்றது.

அத்துடன் அமெரிக்காவும் இதர அனைத்துலக சமூகமும் விடுக்கும் போர்நிறுத்தத்துக்கான அழைப்பை ஏற்றுக்கொள்ளுமாறும் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றது.

இத்தகைய போர்நிறுத்தமானது பொருத்தமான அனைத்து விடயங்கள் சார்பாகவும் பேச்சுக்களை நடத்துவதற்கு சாதகமான சூழலை உருவாக்கும் என நாங்கள் நம்புகின்றோம்.

எந்தவிதமான முன்நிபந்தனைகளையும் கேட்டுக்கொள்ளும் நிலையில் நாங்கள் இல்லை என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் அண்மைய அறிக்கைகளை நாங்கள் கவனத்தில் கொண்டிருக்கின்றோம்.

தமிழ்மக்களது அடிப்படை உரிமைகள் தொடர்ச்சியாக மறுதலிக்கப்படும் போது, எங்களது மனக்குறைகளை இராணுவ நடவடிக்கைகளின் ஊடாக (அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவருவதால் அல்ல) தீர்க்கப்பட முடியும் என சிறிலங்கா அரசாங்கம் எண்ணுகின்ற போது, ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் பிறக்காத குழந்தைகள் போன்றோர் எறிகணைவீச்சினால் கொல்லப்படுவது உள்ளடங்கலாக தமிழர்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்படும் போது, அனைத்துலக சமூகம் செவிடாக அமைதியாக அவதானித்துக்கொண்டிருக்கும் போது, சிலர் எமது சமூகத்தை அவர்களது அரசியல் விளையாட்டுக்களின் பகடைக்காய்களாக பாவிக்கும் போது, விடுதலைப் புலிகளும் சுதந்திரத்துக்கான எமது போராட்டமும் தொடர்ந்தவண்ணம் இருக்கும். வழிமுறைகள் மாறுபடலாம், ஆனால் இராணுவ வெற்றிகளால் அடையப்பட முடியும் என கற்பனை பண்ணுவது போல சிறிலங்காவினால் அமைதியாக வாழ முடியாது.

இருந்தாலும், பதிவாக, மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சமாதான வழிமுறைகளை ஆராய்வதற்கு விடுதலைப் புலிகள் எப்போதும் தயாராக இருக்கிறது என்பதை மீண்டும் அது சுட்டிக்காட்ட விரும்புகின்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments