"இந்திய அரசு எமது மக்களை பழி தீர்த்து முதுகில் குத்திவிட்டது": த.தே.கூ.வின் சிறீக்காந்தா சீற்றம்

"சோனியா காந்தியானால் வழிநடத்தப்படுகின்ற இந்த மத்திய அரசாங்கம் எமது மக்களைப் பழி தீர்த்த்துக்கொண்டிருக்கின்றது. நயவஞ்சமாக இரட்டைவேடம் போட்டு அது எமது மக்களின் முதுகில் குத்திவிட்டது. ஆனால், நாளை வருகின்ற அரசு எமது மக்களின் மன உணர்வுகளை, அரசியல் விருப்புக்களை புரிந்து கொண்டு செயற்படும் என்கின்ற நம்பிக்கை எமக்கு உள்ளது" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் சிறீக்காந்தா தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்திய அரசாங்கத்தை சந்திப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை தாம் நிராரித்தது தொர்பாக பி.பி.சி தமிழோசைக்கு சிறீக்காந்தா அளித்த பேட்டியின் முக்கிய பகுதிகள் வருமாறு:

உங்களைச் சந்திப்பதற்கு இந்திய அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட அழைப்பை நீங்கள் நிராரித்தது ஏன்?

நாம் முன்வைக்கின்ற காரணம் - இந்த போரை சிறிலங்கா அரசாங்கம் நடத்துவதற்கு இன்றைய இந்திய மத்திய அரசாங்கம் ஆசியும், ஆதரவும், அனுசரணையும் வழங்கி வந்திருக்கின்றது என்கின்ற தவிர்க்க முடியாத ஆனால் கசப்பான உண்மை தான்.

எமது மக்கள் - கடந்த பல மாதங்களாக - சிறிலங்கா அரசாங்கத்தின் படை நடவடிக்கைளில் நாளாந்தம் கொல்லப்பட்டு வந்த வேளையில், போர் நிறுத்தத்தினை ஏற்படுத்துமாறு நாம் கோரிய போது, இந்திய மத்திய அரசாங்கம் அக்கறை எதனையும் காட்டவில்லை.

இந்த விடயத்தில் - தமிழ்நாட்டில் எழுந்திருக்கின்ற உணர்வலைகளைக் கூட மதிப்பதற்கு இன்றைய இந்திய அரசாங்கம் தவறிவிட்டது.

இந்நிலையில் - இந்திய பொதுத் தேர்தல் கதவைத் தட்டிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் - அனைத்துலக ரீதியாக எமது மக்கள் படுகின்ற மனித உரிமை அவலம் தொடர்பாக அக்கறையும் கரிசனையும் வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில் - நாம் இந்திய மத்திய அரசாங்கத்திடம் தற்போது எதிர்பார்ப்பது எல்லாம் அது இராஜதந்திர ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு உடனடியாக போர் நிறுத்தத்தினை கொண்டுவர வேண்டும் என்பதுதான்.

ஆனால் - இந்திய மத்திய அரசாங்கம் அதில் அக்கறை இல்லாமல் இருக்கின்றது.

அதேநேரத்தில், டில்லிக்கு எம்மை அழைக்கின்றனர். எதனைப்பற்றி நாம் அவர்களுடன் பேசுவது?... எம்மீது அக்கறை இருக்குமானால், முதலில், இந்த போரை நிறுத்துவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பின்னர் - இந்திய மத்திய அரசாங்கத்தின் எந்த மட்டத்துடனும் பேசுவதற்கு நாம் தயார்.

இச்சந்திப்பில் கலந்துகொண்டு இந்திய அரசாங்கத்தின் அணுகுமுறையை மாற்ற நீங்கள் முயற்சிக்கக் கூடாதா?...

எமது மண்ணில் இத்தனையும் நடைபெற்று முடிந்த பிறகு எவருடைய மனதையும் மாற்றுவதற்கான தேவையே எழவில்லை.

அடுத்தடுத்து வந்த இந்திய மத்திய அரசாங்கங்கள் 1983 இல் இருந்து இந்த பிரச்சினையில் ஈடுபட்டு வந்திருக்கின்றன.

ஆனால் - இன்றைய மத்திய அரசாங்கம் - சோனியா காந்தியினால் வழிநடத்தப்படுகின்ற இந்த மத்திய அரசாங்கம் - விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட வேண்டும் என்கின்ற ஒரேயொரு காரணத்திற்காக எமது மக்களை பழி தீர்த்ர்த்துக்கொண்டிருக்கின்றது. எமது மக்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டிருக்கின்றனர்.

இவ்வளவு காலமும் - பல மாதங்களாக - எமது மண்ணில் மனித அவலம் அரங்கேற்றப்படுகின்ற போது - இந்திய மத்திய அரசாங்கத்திடம் இருந்து அழைப்பை எதிர்பார்த்திருந்தோம். கடந்த ஓகஸ்ட் மாதத்தில் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை வந்த போது எமது நாடாளுமன்றக் குழுவோடு பேசுவேன் என்று என்று கூறியிருந்தார்.

ஆனால், எம்மை அழைக்கவேயில்லை. தற்போது திடீரென அழைத்திருக்கின்றனர். இந்திய பொதுத் தேர்தல் நெருங்குகின்ற போது அழைத்திருக்கின்றனர் எனில் நாம் பொறுப்புணர்ச்சியுடன் - கோபத்தோடு அல்ல - முடிவு எடுக்க வேண்டும்.

இப்பிரச்சினையின் சகல பரிமாணங்களையும் - அம்சங்களையும் - அலசி ஆராய்ந்து, திட்டவட்டமாக நாம் எடுத்த முடிவு தான், "தற்போது பேச முடியாது" என்ற முடிவாகும். இந்திய மத்திய அரசாங்கம் தனது நேர்மையினை முதலில் நிரூபிக்கட்டும்.

எமது இந்த நிலைப்பாடு இந்திய அரசாங்கம் தொடர்பானது மட்டுமே; இந்திய மக்கள் தொடர்பானது அல்ல. இந்திய மக்கள் வேறு; இன்றைய இந்திய மத்திய அரசாங்கம் வேறு என்பது எமக்கு நன்றாக தெரியும்.

'நாங்கள் அவர்களை பேச அழைத்தோம்; ஆனால் அவர்கள் எமது அழைப்பை நிராகரித்தார்கள்' என ஒரு வாதத்தை நாளை இந்திய அரசு முன்வைக்கலாம் அல்லவா?

தாராளமாக முன்வைக்கட்டும். அப்போது - நாமும் பல கசப்பான உண்மைகளைத் தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் மட்டுமல்ல முழு உலகத்துக்குமே கூற வேண்டி வரும்; நாம் கூறுவோம். எப்படி இந்திய மத்திய அரசாங்கம் நயவஞ்சமாக இரட்டைவேடம் போட்டு எமது மக்களின் முதுகில் குத்தியிருக்கின்றது என்பதனை முழு உலகத்துக்கும் வெளிப்படையாக நாம் கூறுவோம்.

அவற்றை நீங்கள் இப்போது கூற முடியாதா?

இல்லை; ஏனெனில் - நாம் தொடர்ந்தும் - இன்னும் - இந்திய மத்திய அரசாங்கத்தை புறம் தள்ளவில்லை. இன்று இருக்கின்ற அரசாங்கம் எப்படியும் இருந்துவிட்டு போகட்டும்; ஆனால், நாளை வருகின்ற அரசாங்கம் எமது மக்களின் மன உணர்வுகளை, அரசியல் விருப்புக்களை புரிந்து கொண்டிருக்கின்ற அரசாங்கமாக அமையும் என்கின்ற உறுதியான நம்பிக்கை எமக்கு உள்ளது.

இங்கே ஒளிப்பதற்கோ மறைப்பதற்கோ ஒன்றும் இல்லை. வெளிப்படையாகவே நாம் பேச விரும்புகின்றோம்.

விடுதலைப் புலிகளைத் தமிழர்களின் பிரதிநிதிகள் என ஏற்றுக்கொண்டவர்கள் நீங்கள். இந்திய மத்திய அரசைச் சந்திப்பதில்லை என்ற உங்கள் முடிவு குறித்து விடுதலைப் புலிகளின் ஆலோசனை பெற்றீர்களா?

இல்லைவே இல்லை. அப்படியான தேவையே கிடையாது. நாம் - ஜனநாயக ரீதியில் - எமது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அவர்களது பிரதிநிதிகள். மக்களின் சார்பில் என்ன முடிவினை எடுக்க வேண்டும் என்பது எமக்கு தெரிந்திருக்கின்றது.

அந்த அடிப்படையில் தான் நாம் இந்த முடிவினை எடுத்திருக்கின்றோம். விடுதலைப் புலிகளுடனோ அல்லது வேறு எவருடனோ இது தொடர்பாக பேசவும் இல்லை. பேச வேண்டிய தேவையும் எமக்கு கிடையாது.

Comments