சமாதான அனுசரணையாளர் தகுதி நிலையில் இருந்து நோர்வே முற்றாக நீக்கம்: சிறிலங்கா அரசு அதிரடி நடவடிக்கை

சமாதான முயற்சிகளுக்கான அனுசரணையாளர் என்ற தகுதி நிலையில் இருந்து இன்று திங்கட்கிழமை நோர்வே முற்றாகவே நீக்கப்பட்டிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை முழுமையாக அழித்தொழிக்கும் நடவடிக்கையில் வெற்றிபெறும் நிலையில் தாம் இருப்பதாலும் நோர்வேயினால் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் முடிவடைந்து விட்டதாலுமே இவ்வாறான ஒரு முடிவை எடுத்திருப்பதாகவும் இது தொடர்பான தகவலை வெளியிட்ட சிறிலங்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

"சமாதானத்துக்கான அனுசரணையாளர் என்ற பாத்திரத்தை வகிப்பதற்கு நோர்வேக்கு எந்த சந்தர்ப்பமும் இல்லை என சிறிலங்கா அரசாங்கம் கருதுகின்றது" என இது தொடர்பாகத் தெரிவித்த அவர், இதற்கான அதிகாரபூர்வமான கடிதம் கொழும்பில் உள்ள நோர்வேயின் தூதுவர் ரோர் ஹற்றீமிடம் இன்று கையளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

நோர்வேயில் உள்ள சிறிலங்காவின் தூதரகம் நேற்றைய நாள் தாக்கப்பட்டு கடுமையாகச் சேதமாக்கப்பட்டதற்கான ஒரு பதிலடியாகவே இந்த நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது.

ஒஸ்லோவில் உள்ள தமது தூதரகத்தின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் நோர்வே அரசாங்கத்தினால் அலட்சியம் செய்யப்பட்டதுடன் உரிய முறையிலான பாதுகாப்பையும் நோர்வே அரசாங்கம் வழங்காமையால்தான் ஆர்ப்பாட்டக்காரர்களால் தூதரகத்தை இலகுவாகத் தாக்கக்கூடியதாக இருந்தது என சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் அல்லது விடுதலைப் புலிகளுக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் இடையில் ஒரு நடுநிலையாளராக இருந்து சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதில் நோர்வே மேற்கொள்ளக்கூடிய பங்களிப்பை சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த முடிவு இல்லாமல் செய்திருப்பதாக அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

வன்னியில் உருவாகியுள்ள மனிதாபிமான நெருக்கடிகள் தொடர்பாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக விவகாரங்களுக்குப் பொறுப்பாகவுள்ள செல்வராஜா பத்மநாதனுக்கும் ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான பணிப்பாளர் ஜோன் கோம்சுக்கும் இடையில் கடந்த வாரத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தமைக்காக நோர்வே மீது சிறிலங்காவில் உள்ள இனவாத அமைப்புக்கள் கடுமையான கண்டனத்தை முன்வைத்திருந்தன.

இதேவேளையில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான அழுத்தங்களைக் கொடுத்த அமெரிக்கா, அது தொடர்பாக கடந்த வாரத்தில் நோர்வேயின் ஊடாக விடுதலைப் புலிகள் அமைப்புடனும் பேச்சுக்களை நடத்தியிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

சிறிலங்கா அரசாங்கம் இன்று எடுத்துள்ள அதிரடி நடவடிக்கையின் காரணமாக இவ்வாறான பேச்சுக்களுக்கான ஏற்பாட்டாளராகச் செயற்பட முடியாத ஒரு நிலைமை நோர்வேக்கு ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

2000 ஆம் ஆண்டு முதல் சமாதான முயற்சிகளுடன் சம்பந்தப்பட்டுள்ள நோர்வே 2002 பெப்ரவரியில் சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றது.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் ஆகியன இதற்கு தமது ஆதரவைத் தெரிவித்திருந்தன.

இருந்தபோதிலும் போர் தொடங்கியதையடுத்து இந்த போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து கடந்த வருடம் ஜனவரி மாதம் சிறிலங்கா அரசாங்கம் அதிகாரபூர்வமாக வெளியேறியது.

இந்நிலையிலேயே சமாதான முயற்சிகளுக்கான அனுசரணையாளர் என்ற பொறுப்பில் இருந்து நோர்வேயை முழுமையாக வெளியேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இன்று முடிவெடுத்திருக்கின்றது.

Comments