பாதுகாப்பு வலயத்தின் மீதான எறிகணைத் தாக்குதலை அரசு நிறுத்த வேண்டும்: இணைத் தலைமை நாடுகள்

பாதுகாப்பு வலயத்தின் மீதான எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா அரசாங்கம் நிறுத்த வேண்டும்; மனிதாபிமானத்தின் அடிப்படையில் இது முக்கியமானது என ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான், நோர்வே ஆகிய நாடுகளைக்கொண்ட இணைத் தலைமை நாடுகள் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வொசிங்டனில் உள்ள அமெரிக்க வெளியுறவுத் திணைக்களத்தில் இருந்து வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வன்னிப் பகுதியில் ஏற்பட்டுள்ள மனிதப் பேரவலத்தை தடுக்கும் முகமாக இருதரப்பும் போரை நிறுத்த வேண்டும். அரசாங்கம் பாதுகாப்பு பிரதேசத்தை மதித்து நடக்க வேண்டும், அங்கு உள்ள பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். விடுதலைப் புலிகள் மக்களை நடமாட அனுமதிக்க வேண்டும்.

மேலும் பொதுமக்களின் படுகொலைகளை நிறுத்தும் நோக்கத்துடன் பாதுகாப்பு பிரதேசத்தின் மீதான எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா அரசாங்கம் நிறுத்த வேண்டும். மனிதாபிமானத்தின் அடிப்படையில் இது முக்கியமானது.

பொதுமக்கள் தங்கியுள்ள பிரதேசததிற்கான மருந்துப் பொருட்கள், உணவு, குடிநீர் என்பவற்றின் விநியோகம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல்களை எவ்வாறு பேரழிவுகள் இன்றி நிறுத்தலாம் என்ற தலைப்பில் அமெரிக்காவின் தென் ஆசியா மற்றும் மத்திய ஆசியாவுக்கான வெளிவிவகார பிரதி செயலாளர் றிச்சர்ட் பௌச்சரினால் ஏற்பாடு செய்யப்பட்ட தொலைபேசி மாநாட்டின் முடிவிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Comments