கனடிய மத்திய அரசின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் பிரதம மந்திரி ஆகியோர், சிறிலங்கா அரசின் தமிழ் இன அழிப்பை நிறுத்தி, நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என்ற முழக்கங்களை பேரணியில் கலந்துகொண்டோர் எழுப்பி வருகின்றனர்.
அதனை வலியுறுத்தும் பதாகைகளையும் தாங்கி வருகின்றனர்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணியளவில் தொடங்கிய இப்பேரணியால் கென்ற் வீதி, வெலிங்ரன் வீதி, லோறியர் மற்றும் பாங்க் வீதிகள், மெற்காஃப், குயீன் போன்ற பிரதான வீதிகள் உட்பட ஒட்டாவா நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள அனைத்து வீதிகளும் மக்களால் நிரம்பியுள்ளது.
இதனால் குறித்த வீதிகளின் போக்குவரத்துகளும் இன்றை நாள் முடக்கப்பட்டுள்ளது. கனடிய காவல்துறையினர் பேரணிக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
இதேவேளையில் ரொறன்ரோவில் இருந்து புறப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பேருந்துகள் ஒட்டாவா நாடாளுமன்ற வளாகத்தை சென்றடைந்த நிலையில் தற்போது 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அங்கு திரண்டிருப்பதாக கனடிய செய்திகள் தெரிவிக்கின்றன.
பேரணியில் கனடிய எதிர்க்கட்சிகளில் ஒன்றான என்டிபி கட்சியின் தலைவர் Jack Layton கலந்துகொண்டு உரையாற்றினார்.
அவர் தனதுரையில், இலங்கைத் தீவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தமிழ் இன அழிப்பிற்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்க வேண்டும் எனவும் அதேசமயம் கனடிய அரசு எந்தவிதமான நடவடிக்கையினையும் எடுக்காது மெளனமாக இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயம் எனவும் தெரிவித்தார்.
ஆட்சியில் உள்ள அரசிற்கே இவ்வாறான பிரச்சினைகளுக்கு முடிவு கட்டவோ நடவடிக்கை எடுக்கவோ முடியும் எனவும் அவ்வாறு செய்யாது கனடிய அரசு இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயம் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் முடிந்து நீண்டகாலமாகியும் மேற்கொண்டு கனடிய அரசு எவ்விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதனையும் சுட்டிக்காட்டினார்.
மேலும் சில கனடிய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.
அதேவேளையில் ரொறன்ரோ, மொன்றியல், கியூபெக் உட்பட அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் இருந்தும் கனடியத் தலைநகரில் தற்போது ஒன்றுதிரண்டிருக்கும் மக்கள், அனைவரும் கறுப்புக்கொடிகளை ஏந்தியவாறு தாயகத்தின் அவலநிலைகளை எடுத்துக்கூறி உரக்க முழக்கமிடுகின்றனர்.
கடந்த 14 நாட்களாக கனடிய நாடாளுமன்றத்தின் முன்பாக ஏராளமான தமிழீழ தேசியக் கொடிகளைத் தாங்கி தொடர் முற்றுகைப் போராட்டத்தை நடத்திவந்த கனடியத் தமிழர்கள் இன்று இந்த மாபெரும் கவனயீர்ப்பு 'உரிமைப்போர்' பேரணியை நடத்துகின்றனர்.
இப்பேரணியை கனடிய தமிழ் மாணவர்களும், கனடியத் தமிழர் சமூகமும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
இதேவேளையில் கனடிய மைய ஊடகங்கள் கவனயீர்ப்பு நிகழ்வுகளை நேரடியாகப் பதிவு செய்த வண்ணம் உள்ளன.
- ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்
- தமிழீழ மக்களை அவர்கள் நிம்மதியாக வாழ விரும்பும் அவர்களின் பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்ற அனுமதிக்கக் கூடாது
- உடனடி போர் நிறுத்தம் வேண்டும்
- வன்னிப்பெரு நிலப்பரப்பு மக்களின் உடனடி தேவையான உணவு, மருத்துவ உதவிகள் சென்றடைவதை கனடா உட்பட அனைத்துலகம் உறுதி செய்ய வேண்டும்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மழைக்கு மத்தியில் இப்பேரணி நடைபெற்று வருகின்றது.
Comments