வன்னியில் ஏற்பட்டுள்ள மனிதப்பேரவலமும் நீதி தவறிப்போன ஐக்கிய நாடுகள் சபையும்

கடந்த 15 ஆம் நாளில் இருந்து 17 ஆம் நாள் வரையில் இரட்டைவாய்க்கால் பகுதியின் ஊடாக இராணுவம் நகர்வுகளை மேற்கொண்டிருந்தது. பாதுகாப்பு வலையத்தை இரு பகுதிகளாக துண்டாடும் படையினரின் இந்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில் கடந்த 18 ஆம் நாள் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேக்கா வவுனியா படை தலைமயகத்திற்கு விஜயம் மேற்கொண்டு புதிய ஒரு களமுனையை திறக்கும் திட்டத்தை மேற்கொண்டிருந்தார்.

அதற்கமைய கடந்த திங்கட்கிழமை (20) அம்பலவான்பொக்கனை பகுதியின் ஊடாக பாரிய படை நகர்வை அரசு மேற்கொண்டுள்ளது. 300,000 மேற்பட்ட மக்கள் தங்கியுள்ள 18 சதுர கி.மீ பரப்பளவுள்ள பாதுகாப்பான பிரதேசத்தின் மீது கனரக ஆயுதங்கள் சகிதம் படைத்தரப்பு தாக்குதலை தீவிரப்படுத்தியிருந்தது.

இந்த தாக்குதலுக்கு ஏதுவாக தியத்தலாவை பகுதியில் இருந்து அதிகளிவிலான குறிபார்த்து சுடும் படையினரும், சிறப்பு படையணிகளை சேர்ந்த ஐந்து கொம்பனி துருப்புக்களும் கடந்த வராத்தின் இறுதிப்பகுதியில் வன்னிக்கு நகர்த்தப்பட்டிருந்தன.

இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.45 மணியளவில் கேணல் அத்துல கொடிப்பிலி தலைமையிலான சிறப்பு படையணிகள் ஐந்தும், கேணல் ரால்ஃப் நுகேரா தலைமையிலான இரண்டாவது கொமோண்டோ படையணி என்பன விடுதலைப்புலிகளின் மண் பாதுகாப்பு அரண்களை தாண்டி உள்நுளைய முற்பட்டிருந்தன. இரண்டாவது கொமோண்டோ படையணியின் களமுனை தளபதியாக மேஜர் சமால் சில்வா நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த படையணிகளுக்கு உதவியாக 58 ஆவது படையணியின் இரண்டு பிரிகேட்டுக்களை சேர்ந்த (58-1, 58-2) 9 ஆவது கெமுனுவோச், 8 ஆவது கஜபா பற்றலியன், 11 ஆவது இலங்கை இலகுகாலாட்படை பற்றலியன் என்பனவும் சிறப்பு படை நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டிருந்தன. புதுமாத்தளன் பகுதியில் இருந்து அம்பலவான்பொக்கணை பகுதி வரையிலான 3 கி.மீ நீளமான பாதுகாப்பு மண் அணைகளை கைப்பற்றி உள்நுளைவதே இவர்களின் திட்டம்.

வடமுனையின் தாக்குதல் திட்டம் இரண்டாவது கொமோண்டோ படையணியிடமும், 8 ஆவது கஜபா படையணியிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. முன்று பிரிவுகளாக நகர்வை மேற்கொண்ட கொமோண்டோ படையணியினை இரண்டு கப்டன் தர அதிகாரிகளும், ஒரு மேஜர் தர அதிகாரியும் வழிநடத்தியிருந்தனர்.

சிறப்பு படையணி ஒன்றுடன், 11 ஆவது இலங்கை இலகுகாலாட்படையணி தென்முனையில் அம்பலவான்பொக்கணை பகுதியில் தாக்குதலை மேற்கொண்டிருந்தது. நடுப்பகுதியில் 9 ஆவது கெமுனுவோச் தாக்குதலை மேற்கொண்டிருந்தது.

கடந்த 15 ஆம் நாளில் இருந்து 17 ஆம் நாள்வரையில் இரட்டைவாய்க்கால் பகுதியில் நடைபெற்ற சமரில் அதிகளவிலான பொறிவெடிகளையும், மிதிவெடிகளையும் எதிர்கொண்ட படைத்தரப்பு அம்பலவான்பொக்கனை பகுதியில் உள்ள மிதிவெடிகளை எதிர்கொள்ளும் பொருட்டு கடந்த 19 ஆம் நாள் அன்று இராணுவத்தின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் சென்ற மக்களில் பல நூறு மக்களை மனிதக்கேடயங்களாக பயன்படுத்தி கண்ணி வெடி வயல்களின் ஊடாக நகர்வை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது கண்ணிவெடிகளில் சிக்கிய பெருமளவான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுடன், அதிகளவான மக்கள் படுகாயமடைந்திருந்தனர். பொதுமக்களுடன் நகர்வை மேற்கொண்ட இராணுவ அணிகள் மீது தாக்குதலை மேற்கொள்வது விடுதலைப்புலிகளுக்கு மிகவும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்ததை தொடர்ந்து விடுதலைப்புலிகளின் அணிகள் தமது நிலைகளில் இருந்து பின்நகர இராணுவம் முதலாவது மணல் பாதுகாப்பு அரணை அதிகாலை கைப்பற்றி கொண்டது.

எனினும் விடுதலைப்புலிகளின் சிறப்பு தாக்குதல் படையணிகள் களமுனைக்கு நகர்த்தப்பட்டு இராணுவத்தின் சிறப்பு தாக்குதல் அணிகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டபோது அங்கு கடுமையாக சமர் மீண்டும் வெடித்திருந்தது. உக்கிர சமரை தொடர்ந்து படைத்தரப்பு அதிகளவான இழப்புக்களை சந்தித்ததுடன் கைப்பற்றிய நிலைகளில் இருந்து திங்கட்கிழமை மாலை பின்வாங்கியிருந்தனர்.

இந்த சமரின் போது விடுதலைப்புலிகளின் பகுதிக்குள் சிக்கி கொண்ட 12 பேர் கொண்ட இராணுவத்தின் கொமோண்டோ படையணி ஒன்றின் கப்டன் தர கட்டளை அதிகாரி உட்பட 11 பேர் கொல்லப்பட்டதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்திருந்தது.

மேலும் இந்த நடவடிக்கையில் 36 சிறப்பு படையினர் கொல்லப்பட்டதுடன், 50 மேற்பட்டோர் கால்களை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள படை அதிகாரிகள் கொல்லப்பட்ட இலகுகாலாட் படையினரின் இழப்புக்களை தெரிவிக்க முடியாது என கூறியுள்ளனர். விடுதலைப்புலிகளின் 14.5 மி.மீ கனரக துப்பாக்கியின் தாக்குதலில் சிக்கியும், ஆழமான குழிகளினுள் வீழந்தும், பொறிவெடிகளில் சிக்கியும் அதிகளவான படையினர் உயிரிழந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு 7 ஆவது இலகுகாலாட்படை பற்றலியன், 6 ஆவது கெமுனுவோச், 10 ஆவது, 12 ஆவது, 14 ஆவது, 20 ஆவது கஜபா பற்றலியன் படையினரும் நகர்த்தப்பட்டிருந்தனர்.

படையினாரின் இந்த நடவடிக்கையை பொறுத்தவரையில் அம்பலவான்பொக்கனை பகுதியை ஊடறுத்து கடல் பகுதியுடன் ஒரு தொடுப்பை ஏற்படுத்துவதன் மூலம் அம்பலவான்பொக்கனை பகுதிக்கும் புதுமாத்தளன் பகுதிக்கும் இடையில் உள்ள மக்களை ஒரு பெட்டி வடிவ முற்றுகைக்குள் கொண்டு வருவதே படையினரின் திட்டம்.

தாக்குதல் ஆரம்பமாகிய சில மணிநேரங்களில் படையினர் மேற்கொண்ட செறிவான எறிகணை மற்றும் கனரக ஆயுதங்களின் தாக்குதலில் சிக்கி 1500 மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதுடன், 3000 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்டவர்களில் 476 பேர் சிறுவர்கள் என்பதுடன், காயமடைந்தவர்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர்களும் அடக்கம்.

கடந்த 20 ஆம் நாளில் இருந்து 22 ஆம் நாள்வரையிலும் நடைபெற்ற தாக்குதல்களில் ஏறத்தாள 2500 மக்கள் வரையில் பாதுகாப்பு வலையத்தில் கொல்லப்பட்டுள்ளனர். 5000 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஒரு குறுகிய பரப்பளவினுள் சிறீலங்கா இராணுவம் பல ஆயிரம் எறிகணைகளை ஏவியிருந்ததாக வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த எறிகணைகளில் கணிசமான அளவு எறிகணைகள் வெள்ளைபொஸ்பரஸ் (றூவைந phழளிhழசரள ளாநடடள) எனப்படும் இரசாயணம் சேர்க்கப்பட்ட அதிஉயர் வெடிமருந்து கொண்டவை. அவை வீழந்து வெடிக்கும் போது பொருட்களும், பொதுமக்களின் உடல்களும் தீப்பற்றி எரிந்ததுடன், சிறுவர்களும், மதியவர்களும் மூச்சுத்திணறியும் இறந்துள்ளதாக வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன.

கனரக ஆயுதங்களை மக்கள் செறிவாக வாழும் பாதுகாப்பான பிரதேசத்தின் மீது பயன்படுத்த மாட்டோம் என சிறீலங்கா அரசு ஐ.நாவுக்கும், ஏனைய மேற்குலக நாடுகளுக்கும் உறுதி அளித்திருந்ததும் கவனிக்கத்தக்கது. இதனை ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதி ஜோன் கோல்ம்ஸ் கடந்த வாரமும் சிறீலங்கா அரசிற்கு நினைவுபடுத்தியிருந்த நிலையில் கனரக ஆயுதங்களை மட்டுமல்லாது இரசாயண ஆயுதங்களையும் மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் மீது சிறீலங்கா அரசு பயன்படுத்தியுள்ளது.

மேலும் பெருமளவான அப்பாவி மக்களை கண்ணி வெடிவயல்களை செயலிழக்க செய்யும் மனித கேடயங்களாக இராணுவம் பயன்படுத்தியிருந்ததுடன் அவர்களை சுட்டு படுகொலையும் செய்துள்ளது. இவை போரியல் குற்றங்களாகும்.

கடந்த திங்கட்கிழமை (20) மேற்கொண்ட தாக்குதல்களை தொடர்ந்து செவ்வாய்கிழமை (21) மற்றும் புதன்கிழமையும் (22) இராணுவம் தொடர்ச்சியாக பாதுகாப்பு வலையத்தின் மீது தாக்குதலை மேற்கொண்டு வந்திருந்தது. புதுமாத்தளன் மருத்துவமனை கடுமையாக சேதமடைந்ததை தொடர்ந்து அங்கிருந்து மக்களும் விடுதலைப்புலிகளும் வெளியேறிய நிலையில் இராணுவம் கடந்த செவ்வாய்கிழமை புதுமாத்தளன் பகுதியை கைப்பற்றியுள்ளது.

தனது படை நடவடிக்கையினால் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பான கருத்துருவாக்கங்களை மறைப்பதற்காக சிறீலங்கா அரசு விடுதலைப்புலிகள் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டதாகவும், ஓரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் படையினாரின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்துள்ளதாகவும் பொய்யான பரப்புரைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஆனால் இந்த பத்தி எழுதப்படும் வரையிலும் ஓமந்தை பகுதிக்கு 6500 மக்களும், யாழ்குடாநாட்டுக்கு 4000 பேர் வரையிலும் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

மீதம் 90,000 மக்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான விபரங்கள் இல்லை. எனவே பெருமளவிலான மக்கள் படையினரின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்துள்ளார்கள் என அரசு பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றதா? அல்லது அதிகளவிலான மக்கள் வன்னியில் உள்ள படையினரின் தளங்களில் இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

சுதந்திரமான ஊடகவியலாளர்களோ அல்லது கண்காணிப்பளர்களோ அற்ற நிலையில் வன்னியில் ஏற்பட்டுவரும் மனிதப்பேரவலம் உலகின் கண்கணில் அதிகம் தெரிவதில்லை என்பது மிகவும் வேதனையானது. சிறீலங்கா அரசின் பிரச்சாரங்களை அனைத்துலகமும், அனைத்துலக ஊடகங்களும் நம்ப முற்படுவதுடன், இந்த பேரவலத்தை நிறுத்துவதற்கும் அவர்கள் முன்வரவில்லை.

இருந்த போதும் அனைத்துலகத்தில் ஏற்பட்டுவரும் சிறு சிறு அழுத்தங்களில் இருந்து தப்பித்து கொள்ளவும், எதிர்வரும் 29 ஆம் நாள் ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்படவுள்ள சிறீலங்கா தொடர்பான விவாதத்தினை முறியடிக்கவுமே சிறீலங்கா அரசு தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றது.

இந்த பேரவலமாக நிலையை தொடர்ந்து கடந்த செவ்வாய்கிழமை (21) ஐ.நாவின் பாதுகாப்பு சபை உத்தியோகபூர்வமற்ற முறையில் கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தது. சீனா, ரஷ்யா உட்பட அதன் 15 உறுப்பினர்களும் இந்த கலந்துரையாடல்களுக்கு சம்மதம் தெரிவித்திருந்த நிலையில் ஐ. நா செயலாளர் நாயகம் பாக் கீ மூன் இன் பிரதம அதிகாரியான விஜய் நம்பியார் தனது சிறீலங்கா விஜயம் தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும் என சபையில் கோரப்பட்டிருந்தது. ஆனால் அவர் அது தொடர்பில் தகவல்களை வழங்குவதற்கு மறுத்தது அங்கு பெரும் ஆச்சரியங்களை ஏற்படுத்தியிருந்தது.

நம்பியாரின் இந்த முடிவை பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமை கொண்ட ஐந்து நாடுகளில் ஒன்று நேரடியாகவே எதிர்த்திருந்ததாக ஐ.நாவின் ஊடக மையமான இன்ன சிற்றி பிரஸ் தெரிவித்திருந்தது.

ஒரு மனிதப்பேரவலமான நிலையில் அது தொடர்பாக சிறீலங்கா அரசுடன் பேச்சுக்களை நடத்துமாறு ஐ.நாவினால் அனுப்பப்பட்ட பிரதிநிதி அது தொடர்பில் ஐ.நாவின் பாதுகாப்பு சபை கலந்துரையாடலில் தகவல் வெளியிட மறுத்தது இதுவே முதற்தடவை. அவர் தனது பதவியையும், ஐ.நாவையும் அவமதித்துள்ளதாகவே பல அமைப்புக்கள் கருத்துக்களை வெளியிட்டிருந்தன.

எனினும் நம்பியாரின் இந்த நிலைப்பாட்டை தொடர்ந்து அவரின் கடந்த கால செயற்பாடுகள் என்ன என்பது தொடர்பில் ஆராயப்பட்டுவது பொருத்தமானது.

நம்பியார் இந்திய அரசின் பிரதி பாதுகாப்புத்துறை ஆலோசகராகவும், இந்தியாவின் பாதுகாப்பு சபையின் செயலாளர்களின் தலைவராகவும் பணியாற்றியிருந்தது கவனிக்கத்தக்கது.

மேலும் அண்மையில் மூன்று நாள் விஜயமாக சிறீலங்காவுக்கு வந்து சென்ற நம்பியார் இந்தியாவில் தங்கி சென்றதும் குறிப்பிடத்தக்கது. அதாவது தற்போதைய போரில் இந்திய அரசு சிறீலங்கா அரசுக்கு படைத்துறை மற்றும் நிதி உதவிகளை மட்டும் வழங்கி வரவில்லை அதனுடன் இராஜதந்திர ரீதியாகவும் உதவிகளை வழங்கி வருகின்றது என்பது தெளிவாகியுள்ளது.

சிறீலங்கா அரசுக்கு ஏற்படும் இராஜதந்திர அழுத்தங்களை இந்திய மத்திய அரசு ஐ. நாவின் ஊடாக குறைப்பதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்பது தற்போது வெளிப்படையானது.

இதனிடையே ஐ. நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அண்மைக்காலமாக சிறீலங்கா தொடர்பாக வெளியிட்டு வரும் அறிக்கைகள் தொடர்பிலும் அனைத்துல அரச சார்பற்ற உதவி அமைப்புக்கள் அதிதிருப்பதி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், தமிழ் மக்களும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

வன்னியில் மனிதப்பேரவலம் ஓன்று உருவாகியுள்ள போதும், ஐ.நாவின் தகவல்களின் பிரசாரம் அங்கு கடந்த மூன்று மாதங்களில் 6432 மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ள போதும் ஐ.நாவின் செயலாளர் நாயகம் போர் நிறுத்தம் என்ற சொற் பிரயோகத்தை தனது அறிக்கைகளில் பயன்படுத்த தவறியது பாரிய விசனங்களை தோற்றுவித்துள்ளது.

அகில உலகமும் போர் நிறுத்தம் தொடர்பாக ஒரு வார்த்தையேனும் பேசிய போதும் உலகில் அமைதியையும், மனிதாபிமானத்தையும் நிலைநாட்ட என உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை போர் நிறுத்தம் தொடர்பாக ஒரு வார்த்தையேனும் பேசாது சோரம் போயுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் மேற்குலக நாடுகளின் அழுத்தம் காரணமாக கடந்த புதன்கிழமை (22) மூடிய அறைக்குள் நடைபெற்ற பாதுகாப்பு சபையின் உத்தியேகப்பற்றற்ற கூட்டத்தில் நம்பியார் தனது அறிக்கையை வெளியிட சம்மதம் தெரிவித்திருந்தார்.

எனினும் அவரின் கருத்துக்களை பார்க்கும் போது தமிழ் மக்களின் பிரச்சனைகளை ஒரு மனிதாபிமான பிரச்சனை மட்டுமே என்ற வட்டத்திற்குள் முடக்கிவிட அவர் முயல்கின்றார் என்பதை காணக்கூடியதாக இருந்தது. அதாவது கடந்த செவ்வாய்கிழமை (21) அவர் வெளியிட்ட கருத்துக்களில் சிறீலங்காவில் அரசியல் ரீதியிலான பிரச்சனைகள் இல்லை மனிதாபிமான பிரச்சனைகளே உள்ளன என்ற கருத்துப்பட அவர் பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை (22) நடைபெற்ற பாதுகாப்பு சபையின் உத்தியோகப்பற்றற்ற கூட்டத்தினை தொடர்ந்து விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கையழித்துவிட்டு சரணடையவேண்டும் என ஐ.நா கேட்டுக்கொண்டது தமிழ் மக்களை மிகுந்த ஆத்திரத்திற்குள் தள்ளியுள்ளது.

ஆனால் ஐ.நாவின் இந்த நீதி தவறிய போக்கிற்கான காரணம் என்ன என்பது தற்போது தெளிவாக உள்ளதாகவே அவதானிகள் கருதுகின்றனர். அதாவது ஐ.நாவின் செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரியாக தற்போதைய போரை முன்னின்று நடத்திவரும் இந்தியாவை சேர்ந்த விஜய் நம்பியார் போன்றவர்கள் பணியாற்றும் போது தமிழ் மக்கள் எவ்வாறு ஐ.நாவிடம் இருந்து நீதியை எதிர்பார்க்க முடியும்.

எனினும் நடைபெறும் சம்பவங்களை வைத்து பார்க்கும் போது எதிர்வரும் நாட்கள் பல இராஜதந்திர நகர்வுகளை கொண்ட நாட்களாக இருக்கும் என்பதுடன், மோதல்களும் மேலும் உக்கிர நிலையை அடையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

- வேல்ஸ் இல் இருந்து அருஷ்

Comments