சிறிலங்கா படையினர் கடந்த மூன்று நாட்களாக மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தி மிகப்பெரும் தமிழ் இனப் படுகொலை தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.
இத்தாக்குதல்களில் காயமடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்ற போதும் அங்கு மருந்துகள் ஏதுமின்றி அவர்கள் உயிரிழக்கும் அவலநிலை நிலவுகின்றது.
சிறிலங்கா அரசாங்கம் மருந்துகளையும் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்குரிய பொருட்களையும் வன்னிக்கு அனுப்புவதற்கு அனுமதி மறுத்துள்ளதன் காரணமாகவே இந்த அவலநிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம், அம்பலன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய பகுதிகளில் படையினர் தொடர்ச்சியாக கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுவருவதால் அப்பகுதிகளில் உள்ள மக்கள் முள்ளிவாய்க்கால் நோக்கி இரவு - பகலாக இடம்பெயர்ந்து வருவதோடு மிகவும் நெரிசல்மிக்க பகுதிக்குள் அவர்கள் முடக்கப்பட்டுள்ளனர்.
இந்த மக்களையும் சிறைப்பிடிக்கும் நோக்கிலேயே படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
ஏற்கனவே படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மக்கள் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாகி அவலப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையில் ஏனையவர்களையும் சிறைப்பிடிக்கும் நடவடிக்கையில் படையினர் இறங்கியுள்ளனர்.
சிறைப்பிடிக்கப்படும் மக்கள் மூன்று இடங்களில் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும், அவர்களின் தங்க ஆபரணங்கள் படையினரால் பறிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக வள்ளிபுனத்தில் அமைக்கப்பட்டுள்ள படையினரின் சோதனை நிலையத்திலேயே கடுமையான கெடுபிடிகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.
அதனைவிட படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மக்களில் 3 ஆயிரத்து 500 பேர் விடுதலைப் புலிகள் என்று கூறி அவர்களை கைது செய்திருக்கும் படையினர், அவர்களை ஓமந்தையில் உள்ள ஓரிடத்தில் தடுத்து வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Comments