இனப்படுகொலையில் மெளனம் - நோர்வே பாராளுமன்றத்திற்கு புறமுதுகுகாட்டி தமிழர்கள் போராட்டம்

சிறீலங்கா இனவெறி அரசால் வன்னியில் ஈழத்தமிழர்கள் நாளாந்தம் படுகொலை செய்யப்பட்டுவருவதை தடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்து, நோர்வே வாழ் தமிழ் இளையோர்களாலும், உணர்வாளர்களாலும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு, நோர்வே பிரதமரின் அலுவலக முன்றலில் மூன்று நாட்களாக தொடர்ச்சியாக நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டமானது, தற்போது நோர்வேயில் ஈஸ்டர் விடுமுறை காலமென்பதை கருத்திற்கொண்டும், நோர்வே தரப்பினரிடமிருந்து ஆக்கபூர்வமான பதிலொன்றை பெறுவதற்கான கால அவகாசத்தை நோர்வே தரப்பினருக்கு வழங்குமுகமாகவும் தற்காலிகமாக இரண்டுநாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்ததோடு, இரண்டு நாட்களுக்குள்ளாக ஆக்கபூர்வமான பதிலெதையும் நோர்வே தரப்பு தரத்தவறும் பட்சத்தில் தொடர் போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப்படும் என போராட்டக்காரர்கள் தெரிவித்ததையடுத்து இத்தொடர்போராட்டம் தற்காலிகமாக இரு நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தமை அனைவரும் அறிந்ததே.




இந்நிலையில் நேற்றைய தினமும் வன்னியில் சுமார் மூன்னூறுக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை சிறீலங்கா இனவெறி அரசு கொன்று குவித்திருந்த நிலையிலும் நோர்வே அரசு தொடர்ந்தும் மௌனம் சாதித்துவருவதை கண்டித்து, நோர்வே வாழ் தமிழ் இளையோரால் சுழற்சி முறையிலான கவனயீர்ப்பு போராட்டம் மீண்டும் இன்று தொடக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மிகமிக குறுகிய கால இடைவெளியில் ஒழுங்கமைக்கப்பட்டு இன்று காலையில் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம், நோர்வேயின் வரலாற்றில் புகழ்பெற்ற Eidsvolls plass என அழைக்கப்படும், நோர்வே நாடாளுமன்ற முன்றலில் காலை பத்து மணிக்கு ஆரம்பமானது.




ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்ட இப்போராட்டத்தில் சுமார் ஆயிரத்து ஐநூறு பேருக்கு மேற்பட்ட இளையோர்களும் உணர்வாளர்களும் தொடர்ச்சியாக கலந்து கொண்டனர்.

"நோர்வே தமிழர்களை ஏமாற்றி விட்டது",
"தமிழர்கள் மீதான படுகொலைக்கு நோர்வேயும் துணைபோகிறது",
"சமாதான தூதுவர் எரிக் சூல்ஹெய்ம் தமிழர்களை ஏமாற்றி விட்டார்",
"தமிழர்கள் கோருவது உடனடியான போர்நிறுத்தம்",
"தனித்தமிழீழமே இறுதித்தீர்வு",
"தமிழர்களின் ஒரே தலைவர் திரு. பிரபாகரன் அவர்களே",
"உணவையும் மருந்துகளையும் உடனடியாக வன்னிக்கு அனுப்பவேண்டும்",
" பத்திரிகையாளர்களை வன்னிக்குள் அனுமதிக்கவேண்டும்",
"தமிழர்கள்மீதும் போராளிகளின்மீதும் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்படுவதை நிறுத்து",
"தமிழர்களை காத்திடும் தார்மீக பொறுப்பு நோர்வேக்கு உண்டு",
"தமிழர்கள் கொல்லப்படும் வேளையில் எரிக் சூல்ஹெய்ம் ஈஸ்டர் பண்டிகைக்கால விடுமுறையில் ஆனந்தமாக இருக்கிறார்"

ஆகிய கோஷங்கள் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களால் முழக்கங்களாக அங்கு எழுப்பப்பட்டன. தமிழர்களை காப்பதற்கான எவ்விதமான காத்திரமான செயற்பாடுகளையும் மேற்கொள்ளாது நோர்வே அரசானது வாய்மூடி மௌனியாக இருப்பதால் சினமும், ஏமாற்றமும் அடைந்த போராட்டக்காரர்கள் நோர்வே அரசுக்கும், சமாதான தூதுவர் எரிக் சூல்ஹெய்ம் இற்குமெதிரான கடுமையான கண்டனங்களை முழங்கங்களாக முதல்முறையாக இங்கு எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வன்னி மக்களை காக்கும்படி நோர்வேவாழ் தழிழர்கள் தொடர்ச்சியாக விடுத்துவரும் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் தமிழர்களை தொடர்ந்தும் அவமதிக்கும் விதத்தில் புறமுதுகையே நோர்வே அரசு காட்டிவருவதை அடையாளப்படுத்திக்காட்டும் விதமாக இப்போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் நோர்வே நாடாளுமன்றத்திற்கு தங்களின் புறமுதுகை காட்டியபடி நின்றிருந்தமை இங்கு முக்கியமாக நோக்கத்தக்கது.




தமிழீழ தேசியக்கொடி, தேசியத்தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களது உருவப்படம், நோர்வேயின் தேசியக்கொடி, வன்னி மக்களின் அவலங்களையும், அவர்கள்மீதான சிறீலங்கா இனவெறி அரசின் படுகொலைகளையும் சித்தரிக்கும் புகைப்படங்கள் மற்றும் பதாதைகள் என்பன போராட்டத்தில் கலந்து கொண்டவர்களால் தாங்கிப்பிடிக்கப்பட்டிருந்தன.

நோர்வேயில் இப்போது ஈஸ்டர் பண்டிகையையொட்டி பொது விடுமுறைக்காலமாக இருப்பதால் வீதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டாலும், வீதிகளில் ஆங்காங்கே நடமாடிய நோர்வீஜிய சமூகத்து மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களிடம் விடயத்தை கேட்டு அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டியமையும் அங்கு அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இது தவிரவும், நோர்வேயின் பிரதான செய்தியூடகங்களும், அங்குவந்து செய்திகளை வெளியிட்டிருந்ததோடு, பிரபல தொலைக்காட்சிகளும் அவ்விடத்திற்கு வருகைதந்து போராட்டத்தினை நேரஞ்சல் செய்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. பண்டிகைக்கால விடுமுறைகளின்போது பொதுவாகவே நோர்வேயில் நாடுமுழுவதிலும் அமைதி நிலவுவது வழமையாக இருப்பதால், இவ்வாறானதொரு பண்டிகைக்கால விடுமுறைநாளில் தமிழர்களின் உரிமைக்கானதும், வன்னியில் கொல்லப்படும் தமிழர்களின் உண்மை நிலையையும் எடுத்துக்காட்டி வன்னி மக்களை பாதுகாத்திட வேண்டுமென நோர்வே அரசை வலியுறுத்தியும் நடைபெற்ற இத்தொடர்போராட்டம் பலரது கவனத்தையும் ஈர்த்தமை இங்கு முக்கியமாக கவனிக்கத்தக்கது.




காலை பத்துமணிக்கு ஆரம்பமான இத்தொடர் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ச்சியாக கலந்துகொண்டிருந்த நிலையில் மாலை ஆறு மணியளவில் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த அனைவரும் ஒஸ்லோ நகரில் அமைந்திருக்கும் அமெரிக்கத்தூதரகம் வரை பேரணியாக சென்று, வன்னிமக்களை காக்கும் விதத்தில் அமெரிக்க அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென முழக்கங்களை எழுப்பிவிட்டு திரும்பவும் நோர்வே நாடாளுமன்ற முன்றலை வந்தடைந்து அங்கிருந்து தமது போராட்டத்தை தொடர்ந்தனர்.

இவ்வேளையில் பொதுமக்கள் பலர் தாமாகவே முன்வந்து போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்களுக்கு உணவும், கோப்பி, தேனீர் மற்றும் குளிர்பானம் போன்றவற்றை வழங்கினர்.இத்தொடர் போராட்டத்தை ஒழுங்கமைத்த இளையோரிடம் பேசியபோது, வன்னி மக்களை காப்பதற்கான விரைந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு நோர்வே அரசுக்கு இருநாட்கள் கால அவகாசம் தங்களால் வழங்கப்பட்டிருந்தபோதிலும், வெறுமனே கண்துடைப்பிற்காக இணைத்தலைமை நாடுகளுடன் இணைந்து கூட்டாக, "போரை நிறுத்தவேண்டும்" என சிறீலங்கா இனவெறி அரசுக்கு வேண்டுகோளை நோர்வே அரசு விடுத்திருப்பது எவ்விதத்திலும் பயனளிக்காது என்றும், சிறீலங்கா இனவெறி அரசின்மீதான கடுமையான அழுத்தங்களை பிரயோகிப்பதன் மூலமே வன்னி மக்களை காக்கும் முன்னடவடிக்கைகளில் நோர்வே அரசு இறங்க முடியும் எனவும், இவ்வாறான காத்திரமான நடவடிக்கைகளை நோர்வே அரசு எடுக்கும் வரையிலும் இத்தொடர்போராட்டம் ஓயாது என்றும் உறுதிபட தெரிவித்தனர்.




இந்தநிலையில், நோர்வே நாடாளுமன்ற முன்றலில் இளையோர்கள் சுழற்சி முறையில் இரவு பகலாக தொடர்ந்தும் தொடர்போராட்டத்தில் ஈடுபடுவார்களெனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். எதிர்வரும் பதினேழாம் திகதி ஒஸ்லோவில் மாபெரும் பேரணியொன்று இடம்பெறவிருப்பதால், தற்போதைய சுழற்சி முறையிலான தொடர்போராட்டம் நடைபெறவிருக்கும் மாபெரும் பேரணியை அடுத்து புதியவடிவம் எடுக்கும் என்பதையும் இளையோர்கள் தெரிவித்தனர்.

Comments