இரவில் நடந்ததும்... கலைஞர் சொன்னதும்...வைகோ பகீர் ஃப்ளாஷ்பேக்!


''தொகுதி ஈரோடு... வெற்றி வேட்பாளர் கணேசமூர்த்தி.
தொகுதி தஞ்சை... வெற்றி வேட்பாளர் துரை பாலகிருஷ்ணன்.
தொகுதி நீலகிரி... வெற்றி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணன்.
தொகுதி விருதுநகர்... வெற்றி வேட்பாளர்...''

- வைகோவைச் சொல்ல விடவில்லை கூடியிருந்த கூட்டம். அரங்கத்தில் இருந்த 1,300 பேரும் மொத்தமாக எழுந்து கை தட்டி, 'வைகோ... வைகோ...' என்று கத்துகிறார்கள். மேடையில் நின்றவர் சிரிக்கிறார்.

''19 மாதங்கள் சிறையில் இருந்த...'' - நிறுத்திவிட்டு ''உங்கள் சகோதரன் வைகோ'' என்று சொன்னதும் அரங்கம் அதிரும் கைத்தட்டல். அன்று தனது பெயரை விருதுநகர் வேட்பாளராகச் சொல்லியிருக்காவிட்டால், அரங்கத்துக்கு வெளியே அவரால் வந்திருக்க முடியாது. அந்த அளவுக்குக் கட்சிக்காரர்களின் ஆர்ப்பரிப்பு.

விருதுநகர் செயல்வீரர் கூட்டத்துக்குப் புறப்படத் தயாராகிக்கொண்டு இருந்தவரை தாயகத்தில் சந்தித்தபோது, ''என்னுடன் 19 மாத காலம் சிறையில் இருந்த அழகுசுந்தரத்தின் பெயரைத்தான் அறிவிக்கலாம் என்றிருந்தேன். ஆனால், தொண்டர்கள்தான் விடவில்லை'' என்று கண்களை மூடியபடி சிரிக்கிறார். அதுவே பேட்டியின் முதல் கேள்வியானது.

''இரண்டு தேர்தல்களிலும் போட்டியிடாமல் இருந்த நீங்கள் இந்தத் தேர்தல் களத்தில் மனம் மாறியது எப்படி?''

''நாடாளுமன்றத்துக்குப் போவதும், அதன் விவாதங்களில் பங்கேற்பதும்தான் எனக்கு உவகை தருகின்ற விஷயம். ஜனநாயகம் காக்கவும், இங்குள்ள தமிழனுக்காக மட்டுமல்ல... உலகெங்கிலும் உள்ள தமிழனுக்காகக் குரல் கொடுக்கவும் சரியான களம் நாடாளுமன்றம். அங்குதான் திறமைக்கு, உழைப்புக்கு மரியாதை உண்டு. இந்திரா, ராஜீவ், வி.பி.சிங், வாஜ்பாய் ஆகிய நான்கு பிரதமர்களின் பாராட்டுக்களைப் பெறும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு. சோம்நாத் எனக்கு கேபினட் அமைச்சர் பதவி தரச் சொன்னார். முரளி தியோரா, வெளியுறவுத் துறையைப் பரிந்துரைத்தார். ஆனாலும் கடந்த தேர்தலில் நான் போட்டியிட முடியாத மனவருத்தத்தைக் கலைஞர் ஏற்படுத்தி விட்டார்.

நான் சிறையில் இருந்து வருவ தற்கு முன்னதாக அவசர அவசர மாக நான்கு தொகுதிகளை ஒதுக்கினார். கொள்கை வீரன் கணேசமூர்த்திக்காக நான் கேட்ட பழனியையோ திருச்செங்கோட்டையோ தர மறுத்தார். முக்கியமானவர்களுக்கு இடங்கள் கிடைக்காமல் நான் மட்டும் தேர்தலில் நிற்பது சரியில்லை என்பதால் நிற்கவில்லை. அதே போல், சட்டமன்றத் தேர்தலில் 35 இடங்கள் கிடைத்தாலும், முக்கியமான எட்டு பேருக்குத் தொகுதிகள் கிடைக்காததால் நான் நிற்கவில்லை. ஆனால், இம்முறை என் பெயரை அறிவிக்காமல் இருக்க முடியாத நிலைமை. 'நான் போட்டியிடாவிட்டால் யாரும் போட்டியிட மாட்டோம்' என்றார்கள். 'விருதுநகரில் நீங்கள் நிற்காவிட்டால், தீக்குளிப்போம்' என்ற தொண்டர்களின் ஆர்ப்பரிப்பு. இவை அனைத்தும் சேர்ந்து தான் மீண்டும் நான் வேட்பாளரானது. இவ்வளவு உற்சாகத்தைக் கட்சி ஆரம்பித்த காலத்தில்கூட நான் தொண்டர்களிடம் காணவில்லை.''

''ஆனால், முக்கியமானவர்கள் ஒவ்வொருவராக தி.மு.க. பக்கம் சென்றுவிட்டார்களே?''

''பதவிகளை அனுபவித்தவர்கள் அடுத்த பக்கம் தாவியதால் கட்சி சுத்தமானது. சில தலைகளை இழுத்துக்கொண்டால் ம.தி.மு.க. காணாமல் போய்விடும் என்று கனவு காண்கிறார் கருணாநிதி. எல்.ஜி-யையும் செஞ்சியையும் பணத்தைக் காட்டி, மந்திரிப் பதவி வாங்கித் தருவதாக ஆசை காட்டி, 'மீண்டும் எம்.பி-யாக வாய்ப்புத் தருவேன்' என்று ஏமாற்றி அழைத்துப் போனார். அவர்களுக்குப் பண உதவி செய்ததற்கு என் னிடம் ஆதாரம் இருக்கிறது. கண்ணப்பன் இங்கே இருந்துகொண்டு அங்கே தொடர்பில் இருந்திருக்கிறார். அவரும் கம்பம் ராமகிருஷ்ணனும் போன பிறகுதான் அந்தப் பகுதியில் இருக்கிற கட்சிக்காரர்களுக்கு உண்மையான உற்சாகம் வந்திருக் கிறது.

நாஞ்சில் சம்பத் கைதைக் கண்டித்து கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு 10 ஆயிரம் பேர் வந்தார்கள். தேனி செயல்வீரர் கூட்டத்துக்கு 5 ஆயிரம் தொண்டர்கள் வந்து உற்சாகம் காட்டியிருக்கிறார்கள். எனவே, அவர்கள் போனது நல்லதுதான்.''

''ம.தி.மு.க. என்றால் மறுபடியும் தி.மு.க. என்று அர்த்தம் என்று கிண்டலடிக்கிறாரே கருணாநிதி?''

''அது உண்மைதான். உண்மையான தி.மு.க-வாக எதிர்காலத்தில் ம.தி.மு.க. மட்டும்தான் இருக்கப்போகிறது.

இதுவரை யாரிடமும் சொல்லாத ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். நான் சிறை யில் இருந்தபோதும், நீதிமன்றத்துக்கு வந்தும் என்னை ஜாமீனில் வரும்படி கருணாநிதி கேட்டுக்கொண்டார். அது உண்மையான பாசம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால், சிறையில் இருந்து நான் வெளியே வந்ததும் திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்ததும் அவரது மனசு மாறிவிட்டது. அதை சன் டி.வி-யில் காட்ட வேண்டாம் என்று சொல்லித் தடுத்தார். வழியெங்கும் கிடைத்த வரவேற்பையும் அவரால் பொறுக்க முடியவில்லை. அவரைப் பார்க்க அறிவாலயம் போகும்போது இரவாகிவிட்டது. என்னைப் பற்றி அவர் எழுதிய கவிதையைப் படிக்கக் கொடுத்தார். உண்மையில் நான் உருகினேன். உள் அறைக்கு அவரை அழைத்துப் போய், 'ஒரு தொகுதி கூடுதலாகத் தாருங்கள்' என்று கேட்டேன். அதற்கு அவசரமாகத் தலையை ஆட்டி மறுத்தார். அப்போது, 'எனக்குப் பிறகு உங்க கட்சிதான் இருக்கும்' என்று கலைஞர் சொன்னார். 'ஏன்ணே இப்படிச் சொல்றீங்க... நீங்க நூறு வயசு வரைக்கும் வாழணும்' என்று வாழ்த்தினேன்.

தி.மு.க. பெரிய கட்சி, பலமான கட்சி, அண்ணா வளர்த்த கட்சி... இவை அனைத்தும் உண்மைதான். ஆனால், இன்று அது ஒரு குடும்பத்துக்குச் சொந்தமான சுயநலக் கோட்டை. கொள்கையற்ற, அதிகார போதையில் திளைக்கின்ற, போர்க் குணத்தை இழந்த சுயநலமிகளின் சொர்க்கபூமியாக மட்டுமே அது இருக்கிறது. கொள்கை பேசியவர்கள் யாரும் இல்லை. சொந்த சுகங்களை நம்புவர்கள் மட்டும் நிறைய உண்டு. எனவே, அது உள்ளுக் குள் சீழ்பிடித்துக்கொண்டே இருக்கிறது. எனவே, கருணாநிதி சொன்ன மாதிரி, நாங்கள்தான் உண்மையான தி.மு.க-வாக இன்னும் சில ஆண்டுகளில் முன்னேறி வருவோம்.''

'' 'கலைஞர் 90 வயசு வரைக்கும் இருந்தால் நாம் எப்ப தலைவராவது?' என்று நீங்கள் ஆற்காடு வீராசாமியிடமும் துரைமுருகனிடமும் சொன்னீர்களா?''

''கதை கட்டிவிடுவதில் கைதேர்ந்தவர் கருணாநிதி. பொய் சொல்வதில் கோயபல்ஸ் இவரிடம் பிச்சை வாங்க வேண்டும். கன்னியாகுமரிக்கு அவர் வந்தபோது, எங்கள் இரண்டு பேர் படங்களையும் போட்டு போஸ்டர் அடித்தார்கள். இதனால் கருணாநிதி கோபப்பட்டதாக ஆற்காடு வீராசாமி என்னிடம் சொன்னார். உடனே, இரவோடு இரவாக அதை நான்தான் கிழிக்கச் சொன்னேன். அன்று கூட்டம் முடிந்ததும் என் அறைக்கு ஆற்காடு வீராசாமியும் துரைமுருகனும் வந்தார்கள். உற்சாக மிகுதியால் யாரோ செய்த காரியத்தால் தலைவர் மனம் புண்பட்டுவிட்டதே என்று நான் வருத்தப்பட்டேன். அப்போது அவர்கள் இருவரும், 'அவருக்குப் பிறகு நீதான்யா தலைவர்' என்று சொன்னார்கள். 'பெரியார் மாதிரி நீண்ட காலம் அவர் இருக்க வேண்டும்' என்றுதான் நான் சொன்னேன். 'நீதான் அடுத்த தலைவர்' என்று சொன்ன அவர்களல்லவா துரோகிகள்? கூனி, சகுனியைத் தோற்கடிக்கும் கருணாநிதியின் இது போன்ற பொய், புனைகதைகளைத் தேர்தல் களத்தில் அம்பலப்படுத்துவேன்!''

''அ.தி.மு.க-வுடன் தொகுதிகளைப் பிரிப்பதில் சிக்கல் வந்தது எதனால்?''

''சிக்கல் எதுவும் இல்லை. கொஞ்சம் கால தாமதம் ஆனது. அவ்வளவுதான். குடும்பத்தில்கூட புதிதாக வீட்டுக்கு வந்தவர்கள் மனம் கோணக் கூடாது என்று நினைத்து அவர்களை முதலில் கவனிப்போமல்லவா, அது போலத்தான் கூட்டணியிலும் நடந்தது. அ.தி.மு.க. கூட்டணியில் சரியான புரிதலோடுதான் இருக்கிறோம். இந்த அணிக்கு இடதுசாரிகள் வர வேண்டும் என்று இரண்டாண்டுகளாக நினைத்தவன் நான். அவர்கள் வந்தால் ஒரு முகம் கிடைக்கும் என்று முயற்சித்தேன். அதே போல் பா.ம.க. வந்தால் பலம் பெறும் என்று நினைத்தேன். எனவே, தொகுதிகளைப் பங்கிடுவதில் நாளானது. அதற்காக நான் மாறுபட்ட கருத்து எதுவும் சொல்லவில்லை. நெருடலுடன் நாங்கள் யாரும் பேசவில்லை.''

''ஈழப் பிரச்னை குறித்து நீங்கள் பேசிய பேச்சுக்காக உங்களைக் கைது செய்யப் போவதாகச் செய்திகள் உலா வருகின்றவே?''

''ஒவ்வொரு நாளும் நான் செத்துச் செத்துப் பிழைத்துக்கொண்டு இருக்கி றேன். கொடூரமான இந்திய ஆயுதங்களை வைத்து ஈழத் தமிழனைக் கொன்று குவிக்கிறது சிங்கள ராணுவம். சிங்களவன் அங்கு நடத்துவது வீரப்போரல்ல... கொடூரமான வஞ்சகப் போர். உணவு, மருந்து, ஆயுதம் அத்தனையையும் தடை செய்துவிட்டு, நிராயுதபாணியான தமிழனுடன் யுத்தம் நடத்திக் கொண்டு இருக்கிறான் சிங்களவன். இந்தியா கொடுத்த ஆயிரம் கோடியை வைத்து சீனா, பாகிஸ்தானில் ஆயுதம் வாங்கி அடிக்கிறான். இது போன்ற கோழைத்தனமான, ஈனத்தனமான யுத்தத்தை வேறு எந்த நாடும் நடத்தியதில்லை.''

''இந்தியா ராணுவ உதவி எதுவும் செய்யவில்லை என்கிறார்களே?''

''இது பச்சைப் பொய். எனக்கு பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தில் இலங்கையில் ஒற்றுமையைக் காக்க நாம் உதவி செய்வதாக எழுதியிருக்கிறார். இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியைச் சேர்ந்த எம்.பி. கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அந்நாட்டு அமைச்சர், 'இந்தியாவின் உதவி இல்லாமல் நம்மால் இந்தப் போரில் வெற்றி பெற்றிருக்க முடியாது' என்று சொன்னார். இந்த இரண்டும் தான் இந்தியா செய்யும் உதவிக்கு அழிக்க முடியாத சாட்சிகள்!''

''பிரபாகரனைப் பிடித்தால் மரியாதையாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறாரே கருணாநிதி?''

''புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் தமிழ் மக்கள் மத்தி யில் அபிமானம் வருவதைப் பார்த்துப் பொறுத்துக்கொள்ள முடியாத கருணாநிதி, அவர்கள் மீது அவதூறு பரப்பி நாட்களை கடத்திக்கொண்டு இருந்தார். இப்போது அவர் ஏதோ கரிசனம் இருப்பதாகக் காட்டிக்கொள்ள, 'பிரபாகரனை மரியாதையாக நடத்த வேண்டும்' என்கிறார். உலக மகாவீரர் அலெக்சாண்டருடன் ராஜபக்ஷேவையா ஒப்பிடுவது? இந்த வார்த்தைகளுக்காக கருணாநிதிக்கு மன்னிப்பே கிடையாது. பிரபாகரனைப் பிடிக்கவோ, கைது செய்யவோ முடியாது. இப்படிப் பேசுவதன் மூலம் கருணாநிதியின் சுயரூபம் வெளிப்பட்டுவிட்டது. லட்சக்கணக்கான தமிழர்களின் வேதனை பற்றி கவலைப்படாதவர், பிரபாகரனை எப்படி நடத்த வேண்டும் என்று பேசுவது பச்சை நாடகம்.

ஈழத் தமிழினத்துக்கு இயற்கை அன்னை எந்தப் பெருங்கேட்டையும் செய்யாது. மரண முற்றுகையைத் தமிழினம் உடைத்து வெற்றி பெறும்'' என்று நம்பிக்கையுடன் முடிக்கிறார் வைகோ.

- ப.திருமாவேலன், படங்கள்: கே.ராஜசேகரன், உசேன்

Comments