உடனடிப் போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல்

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் போரில் அகப்பட்டுள்ள தமிழ் மக்களுடைய அவல நிலை தொடர்பாகவும், கொல்லப்படுபவர்களின் தொகை அதிகரித்துச் செல்வதையிட்டும் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள அமெரிக்கா, இரு தரப்பினரும் உடனடியாக போரை நிறுத்திக்கொண்டு போர்ப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்திக்கோரியுள்ளது.

இது தொடர்பாக வாசிங்ரன் வெள்ளை மாளிகையில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

"பாதுகாப்பு வலயத்தின் மீது எறிகணைத் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக்கொள்ளுமாறு நாம் சிறிலங்கா அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்ளும் அதேவேளையில், அனைத்துலக உதவி நிறுவனங்களைத் தடுப்பதையும், ஊடகங்கள் அங்கு செல்வதற்கான அனுமதியை மறுப்பதையும் நிறுத்திக்கொள்ளுமாறும் சிறிலங்கா அரசைக் கேட்டுக்கொள்கின்றோம்.

இடம்பெயர்ந்த மக்கள் தம்மைப் பதிவுசெய்து வசிக்கும் பகுதிக்குச் சென்று அவர்களைத் தொடர்பு கொள்வதற்கு அனைத்துலக உதவி நிறுனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறான மக்களுக்கு உதவும் முயற்சியில் அமெரிக்காவும் அதன் அனைத்துலகப் பங்காளிகளுடன் இணைந்து முயற்சிகளை மேற்கொள்கின்றது.

அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு உட்பட்ட கடமைப்பாடுகளின்படி நடந்துகொள்ளுமாறு இரண்டு தரப்பையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம். இவை மீறப்படும் சம்பவங்கள் தொடர்பில் நாம் மிகவும் கவலையடைந்திருக்கின்றோம். "

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments