இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த கொழும்பு ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அம்பலவன்பொக்கணை பகுதியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சமரின்போது சிறிலங்கா இராணுவம் அதிகளவில் சிறப்பு படை அணிகளையும், கொமாண்டோ படையினரையும் பயன்படுத்தியிருந்தது.
எனினும் விடுதலைப் புலிகள் குறிபார்த்து சுடும் வீரர்களை அதிகம் நிறுத்தியிருந்தனர். இவர்களின் தாக்குதலில் சிறப்பு படையணியைச் சேர்ந்த இரு அதிகாரிகள் உட்பட 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டதுடன் பெருமளவானோர் காயமடைந்துள்ளனர்.
சிறப்பு படையணியின் அல்பா பிரிவைச் சேர்ந்த கப்டன் அஜித் கமகே விடுதலைப் புலிகளின் மண் பாதுகாப்பு அரணை கைப்பற்ற முயற்சித்த போது விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார். அவரை மீட்கச்சென்ற மேலும் நான்கு சிறப்பு படையினரும் அதே இடத்தில் குறிபார்த்து சுடும் தாக்குதலில் சிக்கி கொல்லப்பட்டிருந்தனர்.
கப்டன் கமகே மரணத்தின் பின்னர் உடனடியாக மேஜராக தரம் உயர்த்தப்பட்டுள்ளார். மாவிலாறு, சம்பூர் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளில் சிறப்பாக செயற்பட்டதற்காக இவருக்கு இரு தடவைகள் 'வீர விக்கிரம விபூசண' விருதுகள் வழங்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொல்லப்பட்ட மேஜர் கமகே இராணுவத்தில் உள்ள மிகச்சிறந்த குறிபார்த்து சுடும் அதிகாரி ஆவார் எனவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே இரண்டாவது லெப். ஜெயதிலக்க தனது குழுவினருடன் விடுதலைப் புலிகளின் பதுங்குகுழி ஒன்றை தாக்கி அழிக்க முற்பட்டிருந்த போது விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதலில் சிக்கி கொல்லப்பட்டிருந்தார்.
இத்தாக்குதலில் அவருடன் மேலும் 5 படையினர் கொல்லப்பட்டதுடன், 26 பேர் படுகாயமடைந்திருந்நதனர்.
ஐந்து நாட்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் முன்னணி பாதுகாப்பு நிலைகளை உளவு பார்ப்பதற்கு சென்ற ஜெயதிலக்க விடுதலைப் புலிகளின் மண் அணை ஒன்றில் இரகசியமாக ஏறி நின்றவாறு "விடுதலைப் புலிகளின் மணல் அணைகளை கைப்பற்றுவது இலகுவானது" என தனது மேல் அதிகாரிக்கு தெரிவித்திருந்தார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments