இனி என் செய்வர் இவர்கள் ???

வன்னியில் போர் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்கள் நாளாந்தம் உயிரிழக்கின்றனர். அவர்கள் மீது நாம் அதிக அளவில் அக்கறை கொண்டுளளேர்ம். மக்களின் உயிரிழப்புக்களைத் தவிர்த்துக் கொள்வதற்கு அங்கு போர்நிறுத்தம் ஒன்று மேற்கொள்ளப்படுவது அவசியம்.அவ்வாறு தெரிவித்திருக்கிறார், வலியுறுத்தி இருக்கிறார் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட்.

"பாதுகாப்பு வலயம்" எனப் பிரகடனப் படுத்தப்பட்ட பகுதிகளில் கூட, அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். அப்பாவி மக்கள் கொல்லப்படு வதைத் தவிர்ப்பதற்குப் போர் நிறுத்தம் அவசியம். இப்போதைய ஆபத்தான இடத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்படுவது அவசியம். சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களின் கீழ், எல்லாச் சந்தர்ப்பங்களிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கடமைப்பாட்டை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் மதித்து நடந்து கொள்ளவேண்டும்.

மனிதாபிமான அடிப்படையில் போர்நிறுத்தத்தைச் செய்து கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையை நாம் இப்போது மீண்டும் முன்வைக்கிறோம். என்று பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் தமது நாட்டு நாடாளு மன்றத்தில் (02.04.2009 இல்) வைத்து குரல் எழுப்பியிருக்கிறார். ஐக்கிய நாடுகள்சபை, அமெரிக்கா, பிரிட்டன் என்பன மனிதாபிமான நடவடிக்கையாகப் போர்ப் பிரதேசத்தில் சிக்குண்டுள்ள பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக,போர் இடைவெளியை (ர்ரஅயnவையசயைn Pயரளந) சிலநாள்களுக்கேனும் மேற்கொள்ளுமாறு கேட்டிருந்தன. மனித உயிர்களை அநியாயச் சாவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற இரக்க சிந்தையின் காரணமாக மனிதத்தின் குரலாக வெளிவந்த ஆகக்குறைந்த அளவிலான கோரிக்கை அது.

ஆனால் அந்தக் கோரிக்கையை, இலங்கை அரசாங்கம் "மனிதாபிமான ரீதியில்" தாம் செயற்படுத்தத் தொடங்கிவிட்டாதாகப் பாதுகாப்புத்துறைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல இம்மாதம் முதலாம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்துத் தெரிவித்திருந்தார்.

மக்கள் இடம்பெயர்ந்து வருவதை அறிந்தால், முன்னரங்க நிலைகளில் வருவதைக் கண்டால், படையினர் உடனே ஒரு மணித்தியாலத்துக்கோ அல்லது இரண்டு மணித்தியாலங்களுக்கோ தாக்குதல்களை நிறுத்தி வைக்கின்றனர். போர் இடைவெளி விடப்படுகின்றது என்று அவர் ஐ.நா. மற்றும் அமெரிக்கா, பிரிட்டனைக் கிண்டலடிக்கும் பாணியில் கூறியிருந்தார்!

கோப்பையில் அல்லது கிண்ணத்தில் தராவிட்டாலும், ஒரு கவளம் சோறாவது தருமாறு கேட்டவனுக்கு நாலு அவிள்களைக் கிள்ளிப்போட்டது போன்ற தோரணையில் இலங்கை அரசு "ஏய்க்காட்டி" இருக்கிறது. அதனை விவாதப் பொருளாக்கி, நாங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியிருக்கும் மக்கள் நலன்நாடிய செயற்பாட்டைத்தானே நீங்கள் கேட்கிறீர்கள் என்று "பூமராங்காக" சர்வதேசத்தின்மீது திருப்பி விட்டிருக்கிறது இலங்கை அரசாங்கம். நீங்கள் ஒருபடி பாய்ந்தால் நாங்கள் பத்துப் படிகள் பாய்வோம் என்ற தோரணையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதி, பிரதமர், பிரதான அமைச்சர்கள் என்று இலங்கை அரசாங்க உயர்பீடம், மக்கள் நலன்கருதிய மனிதாபிமான ரீதியான போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலையில் விடாப்பிடியாக நிற்கும் போது சர்வதேசம் எதனைச் சொன்னாலும் நாம் மசிய மாட்டோம் போர்நிறுத்தம் இல்லை என்ற நிலைப்பாட்டைக் கைவிடமாட்டோம் விட்டுத் தரமாட்டோம் என்ற அசையாமுகி நிலையில் நிற்கும்போது பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சரின், பிரிட்டிஷ் அரசாங் கத்தின் கோரிக்கை செல்லாக்காசாகிக் கிடக்கிறது!.

போர்நிறுத்தம் என்ற சொல்லைக் கேட்டாலே அரச உயர் பீடத்துக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. முல்லைத்தீவில் காயமடைந்து திருகோணமலைக்குச் செல்வோரில் பலரின் அவயவங்களை அகற்ற வேண்டிய பரிதாபகரமான நிலை ஏற்பட்டிருப்பதாக செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் டாக்டர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். போரின் விளைவுகள் அதனால் பாதிக்கப்பட்டோருக்கு இன்னும் எத்தனையோ ஆண்டுகளுக்கு உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் கற்பனைக்கு அப்பாற்பட்ட பின்விளைவுகளைத்தரப் போகிறது என்பதனைச் சர்வதேச செஞ்லுவைக் குழுவின் டாக்டர் மார்ட்டின் ஹோர்மனின் கூற்று தொட்டுக் காட்டுகிறது.

மனிதாபிமானக் கண்கொண்டு பார்த்தால் இவை தமிழர் மத்தியில் காலங்காலமாக அரைகுறை வாழ்வை, அங்கம் இழந்த வாழ்வை, உடல், உள ரீதியான பாதிப்பை நிலைநிறுத்தும் மறைமுகத்திட்டம் எனவும் கொள்ளலாம் அல்லவா?

அரசியலையும், மனிதாபிமானத்தையும் பிரித்துப் பார்க்கும் தன்மை ஆட்சிபீடத்தில் உள்ளவர்களுக்கு எப்போது பிறக்கும்? மனிதம் பிழைக்க சர்வதேசத்தாலும் உதவமுடியாத கட்டத்தில், நீதிசெய்யுமாறு யாரிடம் கேட்பது என்ற அநாதரவான நிலையில் தமிழர்கள்....

Comments