ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வன்னி நிலை தொடர்பாக மீண்டும் விவாதிக்க திட்டம்: தடுப்பதற்கு சிறிலங்கா பகிரத முயற்சி

வன்னியில் உருவாகியிருக்கும் மனிதப் பேரவலம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் மீண்டும் விவாதிப்பதற்கு மேற்கு நாடுகள் மேற்கொண்டுள்ள முயற்சிகளைத் தடுப்பதற்கான காய்நகர்த்தல்களை சிறிலங்கா அரசாங்கம் அவசரமாக மேற்கொண்டுள்ளது. பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இந்தப் பிரச்சினையை இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகக் கிடைத்த தகவல்களையடுத்து அடுப்பதற்கான ஒரு முயற்சியாக பாதுகாப்புச் சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள மெக்சிக்கோவுடன் சிறிலங்கா அவசரமான பேச்சுக்களை தொடங்கியிருக்கின்றது.

மெக்சிக்கோவுக்கு அவசரமாக அனுப்பிவைக்கப்பட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன, மெக்சிக்கோவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் உட்பட அதிகாரிகள் பலருடன் இது தொடர்பாக முக்கிய பேச்சுக்களை நடத்தியிருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

வன்னியில் இடம்பெறும் போர் காரணமாக இடம்பெயரும் மக்களுக்காக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் தொடர்பாகவும், அங்கு அவர்களுக்குச் செய்யப்பட்டுள்ள வசதிகள் தொடர்பாகவும் பாலித கோகன்ன விரிவான முறையில் மெக்சிக்கோ அதிகாரிகளுக்கு விளக்கியிருக்கின்றார்.

இதனைவிட வன்னியில் போரின் பிடியில் சிக்கியிருக்கும் பொதுமக்களை விடுதலைப் புலிகள்தான் தடுத்து வைத்திருக்கின்றனர் எனவும் சிறிலங்கா தெரிவித்திருக்கின்றது.

ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் வன்னி நிலை தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சீனா ஏற்கனவே எதிர்த்திருந்தது. ஒஸ்ரியா, மெக்சிக்கோ, கோஸ்ரறிக்கா ஆகிய நாடுகள் இந்தப் பிரச்சினை தொடர்பாக பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட வேண்டும் எனக் கேட்டிருந்த போதிலும், இது ஒரு உள்நாட்டுப் பிரச்சினை எனத் தெரிவித்த சீனா, அது தொடர்பாக விவாதிப்பதற்கான திட்டத்தை நிராகரித்து விட்டது.

மார்ச் 26 ஆம் நாள் பாதுகாப்புச் சபையில் இப்பிரச்சினை தொடர்பாக ஆராயப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த மூன்று நாடுகளும் முன்வைத்த போதிலும், சீனா தனது 'இரத்து' அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை நிராகரித்துவிட்டதால் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இப்பிரச்சினை இடம்பெறவில்லை.

இருந்த போதிலும், சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்த ஐ.நா. வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பணிப்பாளர் ஜோன் கோம்ஸ் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்ளடக்கப்படாமல் இந்தப் பிரச்சினை ஐ.நா.வில் விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் இப்போது மீண்டும் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கி இந்தப் பிரச்சினை தொடர்பாக விவாதிப்பதற்கு சில நாடுகள் திட்டமிட்டுள்ளதையடுத்து விழிப்படைந்துள்ள சிறிலங்கா அரசாங்கம் தனது காய் நகர்த்தல்களை தொடங்கியுள்ளது.

Comments