"நாங்கள் தொடர்ச்சியான முன்னேற்ற வேகத்தைக் குறைக்கவில்லை. திட்டமிட்ட வகையில் முழுமையான நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டு வருகின்றோம். விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் புதிய புதிய உபாயங்களையும் கையாண்டு வருகின்றோம். இதுதான் எமது வெற்றிக்கான காரணம்" என சிறிலங்கா இராணுவ அதிகாரிகளை ஆதாரம் காட்டி 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
"நான் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பயிற்சி பெற்றுள்ளேன். இரு நாடுகளும் எமக்கு அதிகளவில் உதவுகின்றன" என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயா நாணயக்கார தெரிவித்தார்.
"இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கிரமமாக எமது அதிகாரிகளைப் பயிற்சிகளுக்காக அனுப்பிவருகின்றோம்" எனக் குறிப்பிடும் அவர், தான் இந்தியாவில் நான்கு பயிற்சி நெறிகளையும் பாகிஸ்தானில் மூன்று பயிற்சி நெறிகளையும் பூர்த்தி செய்ததாகக் கூறுகின்றார்.
"இந்தியாவும் பாகிஸ்தானும் பகைமை நாடுகள் என்பது எமக்குத் தெரியும். ஆனால் அது தொடர்பாக நாம் எதனையும் செய்ய முடியாது. இரு நாடுகளிடம் இருந்துமே சிறிலங்கா படையினர் பிந்திய தொழில்நுட்பத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்கள். இரு நாடுகளிடம் இருந்துமே நாம் பயன்பெற்றுக்கொண்டுள்ளோம்" எனவும் இந்தியன் எக்ஸ்பிரசுக்கு உதய நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.
இதேவேளையில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பலகல்ல இது தொடர்பாகத் தெரிவிக்கையில், "என்னைப் பொறுத்தவரையில் எனது தொடக்க காலப் பயிற்சியில் 80 வீதமானதை இந்தியாவிலேயே பெற்றுக்கொண்டேன். பாகிஸ்தானிலும் பயிற்சியைப் பெற்றுக்கொண்டேன். இரு நாடுகளிலுமே எமது எமது படையினருக்கு வெற்றிடங்கள் இருந்தன. பொதுவாக நாம் தளபதிகள் மட்டத்திலான அதிகாரிகளைத்தான் பயிற்சிக்கு அனுப்புகின்றோம்" என்றார்.
தனது பதவிக்காலத்தில் ஆயுதங்கள், தளபாடங்களை இந்தியாவில் இருந்து கொள்வனவு செய்வதில் சில பிரச்சினைகள் இருந்ததாகவும், ஆனால், அப்போது பாகிஸ்தான் அதற்கு உதவ முன்வந்ததாகவும் ஜெனரல் பலகல தெரிவித்தார். சீனாவிடம் இருந்தும் தாம் இராணுவ உபகரணங்களைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார். அமெரிக்காவும் சிறிலங்கா படையினருக்கு பயிற்சியளித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஆனால் சிறிய அளவிலான உதவியை மட்டுமே அமெரிக்கா வழங்கியது எனவும் குறிப்பிட்டார்.
"ஆனால் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானில் இருந்தும் இந்தியாவில் இருந்துமே பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டனர். காடுகளில் போர் புரிவதற்கான சிறப்புப் பயிற்சியைப் பெற்றுக்கொள்வதற்கும், கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் எமது படையினரை நாம் இந்தியாவுக்கே அனுப்பினோம் எனவும் குறிப்பிடுகின்றார் முன்னாள் இராணுவத் தளபதி பலகல்ல,
இதேவேளையில், தற்போதைய இராணுவ நடவடிக்கைகளின் போது இந்தியா புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டு உதவி அளித்து வருவதாகத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார, அத்துடன் பிரதேசங்களில் கடற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலமாக இந்தியா தமக்கு பெருமளவுக்கு உதவியது எனவும் சுட்டிக்காட்டினார்.
"அதி உயர்ந்தபட்ச பயிற்சிகளும், ஆயுத, தளபாடங்கள் கிடைத்தமையுமே விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றிகளுக்குப் பெருமளவுக்கு உதவியுள்ளன" எனவும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
Comments