இணைத்தலைமை நாடுகள் வாசிங்ரனில் அவசர கூட்டம்: றிச்சர்ட் பௌச்சரும் பங்கேற்பு

வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாகவும், தற்போதைய போர் நிலைமைகளையிட்டும் இணைத் தலைமை நாடுகளின் சிறப்புக் கூட்டம் அமெரிக்காவின் வாசிங்ரன் நகரில் நேற்று திங்கட்கிழைமை நடைபெற்றது.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இந்தக் கூட்டத்தில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான வெளிவிவகார துணை அமைச்சர் றிச்சர்ட் பௌச்சர் அமெரிக்காவின் சார்பில் கலந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வன்னிப் பகுதியில் உள்ள மக்களுடைய பாதுகாப்பு தொடர்பாகவே இந்தக் கூட்டத்தில் முக்கியமாகக் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் றொபோர்ட் வூட் தெரிவித்திருக்கின்றார்.

இரண்டு நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்கப்போவதாக சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட அறிவித்தலை வரவேற்ற இணைத்தலைமை நாடுகள், போர்ப் பகுதியில் உள்ள மக்கள் வெளியே வருவதற்கு அனுமதிக்கப்படுவதுடன், மேலும் இரத்தக்களரிக்கு இடம்கொடுக்காமல் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளன.

வன்னியில் உள்ள மக்களுக்கான மருந்து மற்றும் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்வதற்குத் தேவையான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்குமாறு இரு தரப்புக்களையும் கேட்டுக்கொண்டுள்ள இணைத் தலைமை நாடுகள், காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளிகளை போர்ப் பகுதியில் இருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்த நிலைமைகள் தொடர்பாக தொடர்ந்தும் அவதானிப்பது எனவும் இதனையிட்டு கிரமமான முறையில் சந்தித்துப் பேசுவதற்கும் இணைத் தலைமை நாடுகள் தீர்மானித்திருக்கின்றன.

Comments