"மனிதாபிமான நோக்கமும் அரசியல் தீர்வுக்கான அடித்தளமும் அனைத்துலக அனுசரணையும் கொண்ட நிரந்தர போர் நிறுத்தமே தேவை": விடுதலைப் புலிகள்

"சிறிலங்காவின் ஒரு தலைப்பட்ச போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அறிவிப்பு; உலக நாடுகளுக்குச் செவிசாய்ப்பது போலவும், முற்றுகைக்குள் உள்ள தமிழர்க்கு நன்மை செய்வது போலவும் காட்டிக்கொள்ளும் ஒர் அரசியல் நாடகம். இராணுவ - அரசியல் ரீதிகளில் பொருள் பொதிந்த ஒரு நிரந்தரப் போர் நிறுத்தமே தேவை," என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"இரண்டு நாள் போர் நிறுத்தம் என்ற ஒரு கண்துடைப்பு அறிவிப்பை சிறிலங்கா அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக அறிவித்து ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.

உலக நாடுகளின் வேண்டுகோளுக்கு செவிசாய்ப்பது போலவும் - முற்றுகைக்குள் உள்ள தமிழ் மக்களுக்கு நன்மை செய்வது போலவும் காட்டிக்கொள்ள இந்தப் போர் நிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு பயன்படுத்துகின்றது.

சிறிலங்கா அரசின் இந்தப் போர்நிறுத்த அறிவிப்பை - புதுவருடப்பிறப்பிற்கு என தமது படையினருக்கு அது கொடுத்துள்ள இரண்டு நாள் விடுப்பு என்றே நாம் கருதுகின்றோம்.

போர் நிறுத்தம் என்று அறிவித்துவிட்டு மக்கள் மீதான குண்டுத் தாக்குதல்களையும் துப்பாக்கித் தாக்குதல்களையும் சிங்களப் படைகள் தொடர்ந்து நடத்துகின்றன.

உலகையும் - தமிழ் மக்களையும் ஏமாற்றும் நோக்கம் கொண்ட இந்த அரசியல் நாடகத்தை புலிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பொருள் பொதிந்த ஒரு நிரந்தரப் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று புலிகள் இயக்கம் நீண்ட நாளாகவே கோரி வருகின்றது.

இதனையே நாம் இப்போதும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

இத்தகைய போர் நிறுத்தம் அரசியல் பேச்சுவார்த்தைக்கான அடித்தளத்தையும் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் அமைதி வழியில் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றைக்காணும் ஏது நிலையையும் அது உருவாக்க வேண்டும் என்று புலிகள் இயக்கம் விரும்புகின்றது.

இத்தகையதொரு நிரந்தரப் போர் நிறுத்தத்தை நிபந்தனைகள் ஏதுமின்றி ஏற்றுக்கொள்ள புலிகள் இயக்கம் தயாராகவுள்ளது.

சிங்களப் படைகளின் முற்றுகைப் போருக்குள் சிக்கியுள்ள தமிழ் மக்கள் இங்கே சொல்லொணாத் துயர்களை அன்றாடம் அனுபவித்து வருகின்றனர்.

மக்களின் இந்த அவல வாழ்க்கை உலகத்தலைவர்களாலும் - உலக மக்களாலும் அனுதாபமாகப் பார்க்கப்படுவது எமது மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாகவுள்ளது.

சிங்கள அரசின் உணவு மற்றும் மருந்துத் தடைகளால் மக்கள் பெரும் துயரை அனுபவித்து வருகின்றனர். தற்போது பெய்துள்ள கோடை மழையால் ஏற்பட்ட வெள்ளம், நன்னீர் கிணறுகளை அசுத்தமாக்கியுள்ளது.

இதனால் குடிநீருக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

படையினரின் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்படும், காயமடையும் மக்களின் எண்ணிக்கை நாளொன்றிற்கு 300 என்ற உச்ச அளவை எட்டியுள்ளது.

மக்களின் வாழ்விடத்திற்கு நெருங்கி நின்றவாறு படையினர் நடத்தும் துப்பாக்கித் தாக்குதல்களால் இப்போது அதிகளவில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

வெட்டவெளியான மணற்திடல்களில் - தறப்பாள் கூடாரங்களுக்குள் முறையான காப்பகழிகள் இன்றி வாழும் மக்களை இந்த ரவைகள் தாக்குகின்றன.

இவ்விதம் சிங்களப் படைகளாலும் இயற்கை அனர்த்தத்தாலும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழும் எமது மக்களுக்கு உடனடிப் போர் நிறுத்தம் மிகவும் அவசியமாகவுள்ளது.

இந்தப் போர் நிறுத்தம் சிறிலங்கா அரசு விரும்புவது போல அதன் இராணுவ நலன்களை பிரதிபலிப்பதாக இருக்கக்கூடாது.

மாறாக, மனிதாபிமான நோக்கம் கொண்டதாகவும் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு தேடக்கூடிய அரசியல் நோக்கம்கொண்டதாகவும் அமைய வேண்டும்.

அதேவேளை அனைத்துலக அனுசரணையுடன் கூடிய ஒரு போர்நிறுத்தமே ஆக்கபூர்வமானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments