''இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் போரை நடத்திவரும் சோனியாவை தமிழகத் துக்குள் விடமாட்டோம்!'' என்பதுதான் தமிழ்த் திரையுலகத்தின் தடதட முழக்கம்.
ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள் அமைப்பினரைச் சந்திக்க இயக்குநர்
பாரதிராஜா தலைமையில் சென்றனர் திரைத்துறை பிரமுகர்கள். அங்கேயே மைக் பிடித்து மத்திய அரசுக்கு எதிராகவும், குறிப்பாக சோனியாவுக்கு எதிராகவும் கொந்தளிக்கத் தொடங்கி விட்டார்கள்.
இயக்குநர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம். ''ஈழத்துக்காக நாங்கள் புதிதாகக் குரல்
கொடுக்கவில்லை. தமிழக அரசுத் தரப்பிலிருந்து எங்களைத் தொடர்புகொண்ட சிலர், 'ஈழப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக மத்திய அரசுக்கு பலவிதத்திலும் அழுத்தம் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்.
இந்த நேரத்தில் சினிமா உலகத்தினர் ஆவேசப்படுவதால் தீக்குளிப்புகளும் வன்முறைகளும்தான் நடக்குமே தவிர, உரிய பலன் கிடைக்காது. தயவுசெய்து அமைதியாக இருங்கள்...' என நயந்து சொன்னதால், அடுத்தகட்டப் போராட்டத்தைத் தள்ளி வைத்திருந்தோம்.
ஆனால், தமிழக அரசோ இறையாண்மைக்கு குந்தகமாகப் பேசாத போதும், சீமானின் பேச்சு காங்கிரசுக்கு எதிராக இருந்ததால்,வேண்டு மென்றே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவரை சிறையில் தள்ளியது. கடலூர் கோர்ட்டில் அவரைப் பார்க்கச் சென்ற இயக்குநர்கள் ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.கே.செல்வமணி ஆகியவர்களை வேண்டுமென்றே ஒருநாள் சிறையில் வைத்தார்கள். இதையெல்லாம் சகித்துக் கொண்டோம்.
ஆனால், ஈழத்தில் இரண்டரை லட்சம் தமிழ் மக்களின் வாழ்க்கை முடியப் போகிற அபாயத்தில் இருந்தும், மத்திய-மாநில அரசுகள் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் இருப்பதைத்தான் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட, சினிமாத் துறையின் முக்கிய ஆட்கள் பலருக்கும் ஈழத் துயரங்களின் படங்களும் செய்திகளும் மெயிலில் வந்துகொண்டே இருக்கின்றன. அதனால்தான் இயக்குநர் பாரதிராஜாவோடு உணர்வாளர்கள் பலரும் கலந்து பேசி, காங்கிரஸ் போட்டியிடும் பதினாறு தொகுதிகளிலும் திரையுலகத்தினர் தீவிரப் பிரசாரம் செய்ய முடிவெடுத்துள்ளோம்.
சோனியா தேர்தல் பிரசாரத்துக்காகத் தமிழகம் வரும் பட்சத்தில், எங்கள் எதிர்ப்பைக் கடுமையாக காட்டுவோம். அங்கே தமிழர்களையும், இங்கே தமிழர்களின் உணர்வுகளையும் கொன்றுவிட்டு, தமிழகத்துக்கு சோனியா வரக் கூடாது!'' என்றவர்கள் தொடர்ந்தனர்.
''கட்சி சார்பான திரைப் புள்ளிகள் மூலமாக எங்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகளும் நடந்தது. அதை முறியடிக்கத்தான் 'தமிழ்த் திரையுலக தமிழ் ஈழ ஆதரவு உணர்வுக் குழு' என்ற பெயரில் தனி அமைப்பு தொடங்கியிருக்கிறோம். அதன் சார்பாக காங்கிரசுக்கு எதிராக இயக்குநர்கள் அமீர், சீமான் இருவரையும் தேர்தலில் போட்டியிட வைக்கவும் முடிவெடுத்திருக்கிறோம்.
ஈழப் போரைக் கண்டித்து நடந்த உண்ணாவிரதத்தில், ராஜபக்ஷேவுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த், எங்களுக்கு மிகப் பெரிய சக்தி. பாரதிராஜா, சத்யராஜ், அமீர் போன்றோரின் வேண்டுகோளை ஏற்று, ரஜினிகாந்த்தும் காங்கிரசுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொள்ள சம்மதித்திருக்கிறார்.
அதோடு, உண்ணாவிரதப் போராட்டத்தின்போது ரஜினி பேசிய பேச்சை கேஸட்டுகளாகப் போட்டு, எங்கள் பிரசாரத்துக்குப் பயன்படுத்துவோம். பெங்களூருவில் இருக்கும் ரஜினி மன்றங்கள் எல்லாம் ஈழ விவகாரத்தைக் கையில் எடுத்துப் போராடிக் கொண்டிருக்க, இங்கேயுள்ள ரஜினி மன்றங்களும், விஜய், அஜீத் போன்ற மற்ற நடிகர்களின் மன்றங்களும் எங்கள் போராட்டத்தில் இணைந்துகொள்ளும் என நம்புகிறோம். அஜீத்கூட தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஈழத் தமிழர் விவகாரத்துக்காக ரத்து செய் திருக்கிறார்!'' என்றனர்.
இயக்குநர்கள் இப்படிப் போராட... உதவி இயக்குநர்களும், 'தமிழ் ஈழ ஆதரவு உதவி இயக்குநர்கள் சங்கம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி, காங்கிரஸ் போட்டியிடும் பதினாறு தொகுதிகளுக்கும் போய்... காங்கிரஸ் எதிர்ப்புப் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனராம்.
நடிகர் சத்யராஜிடமும், 'சந்தன காடு' கௌதமனிடமும் இதுகுறித்துக் கேட்டோம்.
''திரைத்துறைக்கு எதற்கு வந்தோமோ அதனை நாங்கள் அடைந்து விட்டோம். இனி யாருக்காகவும் எங்களுடைய உணர்வுகளை அடக்கிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. எங்கள் குரலுக்கு மதிப்பளித்து, ஈழத்து சோகங்களைத் தடுக்க காங்கிரஸ் உடனடியாகப் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும். இல்லையேல், எங்களின் உணர்வுகளும் எதிர்ப்புகளும் எப்படி இருக்குமென்று எங்களுக்கே தெரியாது!'' எனச் சீறினார்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் பேசியபோது, ''உண்ணாவிரத அறப் போராட்டம் என்றெல்லாம் இனியும் எங்களை நாங்களே ஏமாற்றிக்கொள்ள முடியாது. அகிம்சையில் பிறந்த காங்கிரஸ் கட்சி, இலங்கையில் நடக்கும் இனப் படுகொலையை வேடிக்கை பார்ப்பது சகிக்க முடியாத அவமானம்! எங்களின் போராட்டத்தை சோனியாவே தீர்மானிக்கட்டும்!'' எனக் காட்டம் காட்டினார்.
திரையுலகத் தரப்பு வேட்பாளர் எனச் சொல்லப்படும் இயக்குநர் அமீரிடம் பேசினோம். ''எங்கேயோ பிறந்த சோனியாவை அன்னையாக மதித்து, நாற்பது தொகுதிகளையும் அவருக்காக வாரிக் கொடுத்த தமிழகம்தான், இன்று ஈழப் படுகொலையை ஊக்குவிக்கும் காங்கிரஸ் மீது வயிறு எரிய சாபத்தைக் கொட்டுகிறது. தொடர் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்குத் தீர்வாக, சோனியா உடனடியாக ஈழப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தவேண்டும். அப்படி அவர் செய்தால், மொத்தத் திரையுலகமும் அவரைப் பாராட்டி விழா எடுக்கத் தயாராக இருக்கிறது. சாவின் விளிம்பில் நிற்கும் தமிழினத்துக்கு இப்போதுகூட உதவ முன்வராமல், காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்த்தால்... அதற்கான விளைவுகளை அவர்கள் இந்தத் தேர்தலில் அனுபவித்தே தீருவார்கள். பிரசாரம், போட்டி குறித்தெல்லாம் இப்போதைக்கு ஏதும் சொல்ல முடியாது. தமிழ்த் திரையுலக தமிழீழ ஆதரவு உணர்வுக் குழு என்ன முடிவெடுத்தாலும் சரி, அதற்கு நானும் சீமானும் கட்டுப்படுவோம்!'' என்றார்.
திரையுலக எதிர்ப்பு குறித்து தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்க பாலுவிடம் கேட்டோம். ''காங்கிரஸின் எத்தகைய முடிவையும் மேலிடத்திடம் கலந்து பேசித்தான் சொல்ல முடியும்!'' என்றார் வழக்கமான காங்கிரஸ்குரலில்.
இதற்கிடையில் பி.ஜே.பி. தரப்பில் ரஜினியைத் தொடர்புகொண்ட சிலர், 'ஈழ விவகாரத்தைக் கையில் எடுத்து காங்கிரஸை வீழ்த்துங்கள்!' என சைலன்ட் அசைன்மென்ட் கொடுத்திருப்பதாகக் கிளம்பி இருக்கும் பேச்சும் காங்கிரஸை காய்ச்சலில் ஆழ்த்தி இருக்கிறது
- இரா.சரவணன், எம்.குணா
படம்: என்.விவேக்
நன்றி;விகடன்
Comments