இலங்கையில் தமிழ் பெண்கள் நிலை குறித்து கதறி அழுத வைகோ; பொதுமக்களும் கண்ணீர் விட்டனர்

இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உணவின்றி அவதிப்படுகின்றனர். தாய்மார்கள் தன் மார்பக பகுதியை கிழித்து இரத்தத்தை ஒரு வேளை பசிக்கு குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர் என்று பேசியவாறே திடீரென கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதைக்கேட்ட பொது மக்களும் கண்ணீர் விட்டு கதறினர். நேற்று நடைபேற்ற ஊட்டி பிரசாரத்தில் மேற்கண்டவாறு பேசினார். கூடலூர் காந்தி திடலில் வைகோ பேசியதாவது:-

கூடலூரில் தாயகம் திரும்பிய இலங்கை தமிழர்கள் அதிகமாக இருக்கின்றனர். இந்தியாவில் இருந்து ஏராளமான தமிழர்கள் இலங்கைக்கு சென்று அங்கு பொன் விளையும் பூமியாக காபி, இறப்பர் தோட்டங்களை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டனர். 150 ஆண்டுகளுக்கு பிறகு தமிழனுக்கு குடியுரிமை இல்லை என்று கூறி வெளியேற்ற இலங்கை அரசு முற்பட்டது.

அதன் பின்பு இந்தியா வந்த நீங்கள் படும் துன்பங்கள் சொல்லில் அடங்காது. உங்களின் உறவினர்கள் சொந்த மண்ணில் வாழ்வியல் ஆதாரங்களை இழந்து இறந்து கொண்டு இருக்கின்றனர்.

கூட்டம் கூட்டமாக சிங்கள அரசு தமிழர்களை கொன்று குவித்து வருகிறது. இதற்கெல்லாம் கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அரசு ஆயுத உதவிகள், ரேடார், உபகரணங்களை கொடுத்து தமிழ் மக்களை கொன்று குவிக்க உதவி செய்து வருகிறது.

உலக நாடுகளின் தலைவர்கள் ஒபாமா, நெல்சன் மண்டேலா மற்றும் சர்வதேச நாடுகள், இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவிப்பதை தடுக்க கோரியும், இந்திய அரசு இலங்கைக்கு உதவி செய்வதை நிறுத்தவில்லை. நான் பலமுறை சோனியா காந்தி மற்றும் பிரதமரை சந்தித்து ஆயுதம் தரவேண்டாம் என்று கெஞ்சினேன்.
ஆனால் அவர்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். ஆனால் இன்று நடப்பதோ விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்து பொது மக்கள் வெளியேறி வருவதாக ராணுவம் கூறுகிறது.

ஆனால் அங்கு சிங்கள இராணுவத்தினர் தமிழ் பெண்களை கூட்டம் கூட்டமாக கற்பழித்தும், பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுத்து எரித்துக் கொல்கிறார்கள். அதனால் பெண்கள் இழிவாக சாவதை விட பட்டினியால் சாகலாம் என்று கருதுகிறார்கள்.

இலங்கையில் தமிழ் கர்ப்பிணி பெண்களின் வயிற்றைக் கிழித்து உள்ளிருக்கும் கருவை வெளியே போட்டு கொல்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை. சர்வதேச நிபுணர் குழு இது உண்மை என நரூபித்து 91 சிசுக்களின் உடல்களை கண்டறிந்து உறுதி செய்தது.

நான் காலதாமதமாக இங்கு வந்தேன். அனைவரும் பசியோடு இருப்பீர்கள் என்று எனக்கு தெரியும். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் நீங்கள் ஓட்டல் அல்லது வீட்டில் உணவு சாப்பிடலாம்.

ஆனால் இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உணவின்றி அவதிப்படுகின்றனர். தாய்மார்கள் தன் மார்பக பகுதியை கிழித்து இரத்தத்தை ஒரு வேளை பசிக்கு குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர் என்று பேசியவாறே திடீரென கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதை கேட்ட பொது மக்களும் கண்ணீர் விட்டு கதறினர். இதனால் பிரசாரம் செய்த இடமே அமைதியானது.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கே: இலங்கையில் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அமெரிகக அதிபர் ஒபாமாவை மீண்டும் சந்திப்பீர்களா?

ப: இந்த விஷயத்தில் நான் எதுவும் சொல்வதற்கில்லை. மிக இரகசியமாகவே எனது பணிகளை செய்து வருகிறேன்.

இலங்கை பிரச்சினையில் விடுதலைப்புலிகள் துப்பாக்கியை கீழே போட வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் இலங்கை இராணுவம் துப்பாக்கியை பயன்படுத்தி வருகிறது. 2 பக்கமும் துப்பாக்கியை பயன்படுத்த வேண்டாம் என கூற வேண்டியதுதானே. தமிழர் பகுதிகளை சுற்றி வளைத்து விட்டு அவர்கள் தப்பி வந்து விட்டதாக தவறாக பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

கே: ஈழத்தமிழர் நிலை குறித்து துண்டு பிரசுரம் வழங்கிய மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்களே?

ப: சிவகங்கையில் ஈழத் தமிழர் நிலை குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கிய மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விஷயத்தில் போலீசாரை குறை கூற முடியாது.

முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 1962ல் காமராஜரை எதிர்த்து மாணவர்கள் ஈடுபட்டபோது கூட நெருக்கடி கொடுத்தது இல்லை. மாணவர்களை கைது செய்தததை வன்மையாக கண்டிக்கிறேன்.

Comments