மக்கள் முற்றாக வன்னியை விட்டு வெளியேறும் நாளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் ஜோன்ஸ் கோம்ஸ். இவர்கள் உன்னிப்பாக அவதானிப்பதும், எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பதும் எதுவென்பது நன்றாகப் புரியும்.
ஆயுதங்களைக் கீழே போடாமல், உறுதி தளரா மனதுடன் , தேசிய விடுதலைப் போராட்டத்தை தக்க வைக்கப் போரிடும் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு குறித்தே இவர்களுக்குக் கவலை அதிகம்.
சிங்களத்தின் மீது இவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை , களமுனைகளில் சிதறிப்போவதை மிகுந்த கலக்கத்துடன் எதிர்கொள்ளுகிறார்கள்.
சர்வதேச சட்ட நியமங்களுக்கேற்ப பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு இந்த ஐக்கிய நாட்டுச் சந்நிதான மகான்களுக்கு உண்டு.
யுத்தத்தில் ஈடுபடாத மக்களின் பாதுகாப்புக் குறித்து அதிகம் அக்கறை கொண்ட ஐ.நா அமைப்பின் சாசனங்கள் தமது உறுப்பு நாடொன்றின் இனப்படுகொலைச் செயலைக் கண்டிக்காமல் தூங்கி வழிகின்றன.
வவுனியா தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள வன்னி மக்களை அரசு நன்றாகக் கவனிப்பதாக ஐ.நா பாதுகாப்புச் சபைக்குப் பொய்யுரைத்த ஜோன்ஸ் கோம்ஸின் போக்கில் தற்போது மாற்றங்கள் தென்படுகின்றன.
ஒழுங்காகப் பராமரிக்காவிட்டால் உதவிகள் நிறுத்தப்படுமென அவர் அரசை எச்சரிக்கிறார். அத்தோடு விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டுமென்கிற தனது பழைய சர்வதேசப் பாடலை இதனோடு இணைத்துக்கொள்கிறார்.
வன்னி மக்களை நேரடியாகப் பார்வையிடாமலேயே அறிக்கைகள் விடுவதில் இந்த ஐ. நா தலைவர்கள் “மகா சூரர்கள்”.
இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவரின் உடலத்திலிருந்து ஐ.நா அமைப்பினரால் சிறுவர்களுக்காக விநியோகிக்கப்பட்ட சக்திமிக்க பிஸ்கட்டுக்கள் மீட்கப்பட்டதாக அரசு கூறுவதை முழுமையாக நம்பி விடுதலைப் புலிகள் மீது குற்றஞ் சுமத்தி அறிக்கை விடுகிறது ஐ.நா.
ஐ.நா தொண்டர் அமைப்புகளை மகிந்தர் வெளியேற்றியபோது தலையைத் திருப்பிக்கொண்ட ஐ.நா மன்றம், சூடான் அதிபர் ஒமர் அல் பசீர் , சகல தொண்டு நிறுவனங்களையும் டாபூரிலிருந்து வெளியேறச் சொல்கையில் வரிந்து கட்டிக்கொண்டு ஆர்ப்பரிக்கிறது.
சூடானில் எண்ணெய் வளமிருப்பதாகக் கண்டு பிடித்ததன் விளைவு இது, ஆனாலும் இந்த எண்ணெய் வளங்களை ஆசியாவிற்குக் கொண்டு செல்லும் கடல்ப் பாதையில் சிறிலங்கா இருப்பதுதான் சிக்கலை உருவாக்குகிறது.
அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீனாவை வரவழைத்தாலும், இயற்கை அரண் சூழ்ந்த திருமலைத் துறைமுகத்தை பங்குபோட இந்தியாவும் அமெரிக்காவும் முன்னிற்பதை எவ்வாறு எதிர்கொள்வதென்பதுதான் சிறிலங்காவின் கவலை.
பாதிக்கப்படும் வன்னி மக்களை மீட்பதற்காக அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய இராணுவக் கட்டளை மைய்யம் சில நகர்வுகளை மேற்கொள்ளப்போவதாக ஊகங்கள் வெளிவந்தன. அமெரிக்க ஈரூடகப் படையணிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அந்த ஊகங்கள் உயிரூட்டப்பட்டன.
இந்நகர்வுகளின் எதிர் விளைவுகளைப் புரிந்து கொண்ட பிராந்திய வல்லரசு, இந்தியா தானும் இந்த நடவடிக்கையில் இணைந்துகொள்ள முனைப்புக் காட்டியது.
இதன் நீட்சியே இந்திய வெளியுறவுச் செயலர் சிவஷங்கர் மேனனின் அமெரிக்கவிஜயமும், அமெரிக்க ராஜாங்க அமைச்சர் கிலரி கிளின்ரன் உடனான சந்திப்புமாகும்.
இச்சந்திப்பில் வேறு பல முக்கிய விவகாரங்களும் அலசி ஆராயப்பட்டிருக்கும்.பயங்கரவத நாடாகும் பாக்கிஸ்த்தான் பிரச்சனை, ஆசியச் சுற்றுலாவில் இந்தியாவைத் தவிர்த்தமை, திபெத் நிலை குறித்த அமெரிக்காவின் அசமந்தப் போக்கு போன்ற விடயங்கள் இந்தியாவால் முன்வைக்கப்பட்டுள்ளது.
சீனாவிற்கெதிராக இந்தியாவை வளர்க்க ஜோர்ஜ் புஷ் எடுத்த நகர்வினை ஒபாமாவின் நிர்வாகம் தொடர்ந்தும் முன்னெடுக்குமா என்பதனை தெரிந்துகொள்ளவும் சிவஷங்கர் மேனன் நிச்சயம் முயற்சித்திருப்பார்.
முல்லைத்தீவுக் கரையோரத்தில் அமெரிக்க இராணுவம் தரையிறங்கினால், பராக் ஒபாமாவின் புதிய ஆட்சியானது ஆசியாக் கண்டத்தில் காலடி வைக்கும் முதல் நகர்வாகக் கருதப்படும்.ஆனாலும் விடுதலைப் புலிகள் முன்னெடுத்துள்ள வலிந்த தாக்குதல்கள், இந்திய , மேற்குலக நேரடி இராணுவ நகர்வுகளிற்கு தடைபோட்டுள்ளதாகக் கருத வேண்டியுள்ளது.
தற்போது புலிகளால் மேற்கொள்ளப்படும் ஊடறுப்புத் தாக்குதல்களும், பிந்தளம் நோக்கிய ஊடுருவல்களும் களத்தில் புதிய பரிமாணங்களைத் தோற்றுவிக்கின்றன.
மன்னாரில் இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல், பிரியோகிக்கப்பட்ட உத்திகளையும், புதிய சமர்களை தந்திரோபாயங்களை இணைத்து வலிந்த தாக்குதல்கள் பல விடுதலைப் புலிகளால் நிகழ்த்தப்படுகின்றன.
புதுக்குடியிருப்பிலிருந்து 18 கி.மீ தொலைவிலுள்ள தேராவில் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆட்டிலெறித் தளம் அழிக்கப்பட்டுள்ளது. ஆதனை நிர்மூலம் செய்ய முன்னர் அங்கிருந்த ஆறு ஆட்டிலெறிகளையும் 1000 எறிகணைகளையும் பயன்படுத்தி , முகமாலை, ஆனையிறவு இராணுவ நிலைகள் மீது விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடாத்தப்பட்டது.
கரும்புலிகளும், கிட்டுப் பீரங்கிப்படையணியினரும் இணைந்து செய்த இந்த அழித்தொழிப்புத் தாக்குதலில் மூன்று கரும்புலிகள் உற்பட 7 பேர் வீரகாவியமாகியுள்ளனர். முல்லை நகரிலும், முள்ளியவளையிலும் தாக்குதல்கள் மிகத் தீவிரமாக நடைபெறுவதாக வன்னிச் செய்திகள் கூறுகின்றன.
கிளிநொச்சி நகரை அண்டிய பகுதிகள், கரிப்பட்ட முறிப்பு, ஒட்டுசுட்டான், இரணைமடு, குமுழமுனை போன்ற இடங்களில் ஊடுருவிய புலிகளுடன், ஆக்கிரமிப்பாளர்கள் மோதுவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னரங்கிலும், பின் தளங்களிலும் விழும் ஊடறுப்பு அடிகள், எதிரிக்கு உட்காயங்களை ஏற்படுத்தி , எஞ்சியுள்ள சிங்களச் சிறப்புப் படையணிகளின் இறுதிப் பயணத்தை நிச்சயிக்கப்போவது போல் தெரிகிறது.
அதேவேளை தமது சிறப்புப் படையணிகளை உட்புறமாக நகர்த்தும் விடுதலைப் புலிகள், படையினரின் விநியோக வாகனங்களையும் தாக்கியழிக்கின்றனர்.
காயமடையும் சிங்கள இராணுவத்திற்கு அவசர சிகிச்சையளிக்க, கைக்கெட்டிய தூரத்திலுள்ள புல்மோட்டையில், தள வைத்தியசாலை ஒன்றை அமைத்துள்ளது சோனியாவின் இந்தியா.தமிழ் மக்களுக்ககவென்று சொல்வதெல்லாம் வெறும் தேர்தல் நாடகம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.தங்கபாலுவும், ஈழ மக்களுக்கு உணவுப்பொருட்களைச் சேகரிக்கின்றாராம். இப்பொருட்கள் யாவும் இராணுவ உணவுக் களஞ்சியங்களை நிரப்புமென்பதும் அவருக்குத் தெரியும்.
நெடுமாறன் ஐயா சேகரித்த ஒரு கோடி மதிப்புள்ள உணவு மற்றும் மருந்துப் பொருட்களை முன்பு தடுத்து நிறுத்திய காங்கிரசார், தற்போது மனிதாபிமான வேடம் போடுவது தமிழ்நாட்டு வாக்காளர்களை ஏமாற்றுவதற்கென்பதை சகல தமிழ் மகா ஜனங்களும் புரிந்துகொள்வார்கள்.
உள்காயங்களால் உதிரும் சிங்களத்தை, ஏகாதிபத்தியங்களால் இனிக் காப்பற்ற இயலாது. ஊமைக் காயத்தின் உண்மையான பொருள் விளக்கத்தை சிங்களம் தற்போது உணர்ந்துகொள்கிறது. 45 சதுரக் கிலொ மீற்றர் கதையிலிருந்து , “புலிமுடிந்த புராணம்” பாடும் ராமனும், கரிகரனும் ஸ்டாலின்கிராட்டுக்குப் பதிலாக, வேறு ஏதாவது சமர்க்கள சரித்திர உதாரணங்களை கிடைக்குமாவென்று புத்தகங்களைப் புரட்டத் தொடங்குவார்கள்.
மக்கள் போராட்டங்கள் யாவும், முன்னோக்கிய பாய்ச்சலை சகல படிநிலைகளிலும் பதித்து, விடுதலையை நோக்கி வேகமாகவே நகரும்.
– இதயச்சந்திரன்-நன்றி ஈழநாதம்
Comments