அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்குமாறு விடுதலைப்புலிகள் மறைமுக வேண்டுகோள்

ஈழத்தமிழர்களின்மீது மீண்டும் அ.தி.மு.க கரிசனை எடுப்பது மகிழ்ச்சி திருகின்றது பா.நடேசன்

தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க அணியினர் ஈழத்தமிழர்கள் மேல் அதிக கரிசனை காட்டுவதும், அவர்களின் விடியலுக்கு ஆதரவு தெரிவிப்பதும் எமக்கும், எமது மக்களுக்கும் நம்பிக்கையினையும், மகிழ்ச்சியையும் தருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

"ஹெட் லைன்ஸ் ருடே" என்ற ஆங்கில ஊடகத்திற்கு அவர் வழங்கியிருந்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவிதுள்ளார். அங்கு தொடர்ந்து மேலும் கருத்து தெரிவித்துள்ள பா.நடேசன், ஈழத்திழர்களின் பால் இன உணர்வாலும், பாசத்தாலும் தமிழக மக்கள் ஒன்றியே நிற்கின்றார்கள்.

அந்த வகையில் ஆரம்ப காலங்களில் அ.தி.மு.க வின் நிறுவுனரும், முன்னாள் முதலமைச்சருமாக இருந்த அமரர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள், ஈழத்தமிழர்களுக்கான விடிவுக்காக சகல வழிகளிலும், வெளியப்படையாக முழு உதவிகளையும் வழங்கியிருந்தார்.

அதேபோல அண்மையில் தற்போதைய அந்தக்கட்சியின் தலைவி செல்வி. ஜெயலலிதா ஜெயராமன் அவர்கள், ஈழத்தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரமே தீர்வாக அமையும் என தெரிவித்திருந்தார்.

அத்தோடு தற்போது வன்னியில் இடம்பெறும் பேரவலங்கள், மனிதப்பேரழிவுகள் கண்டு, தமது அனுதாபங்களையும், இந்திய மற்றும் சிறி லங்கா அரசுகளுக்கு கண்டனங்களையும் தெரிவித்திருந்தார்.

இவற்றின் மூலம் செல்வி.ஜெயலலிதா ஜெயராமன் அவர்கள் தற்போது ஈழத்தமிழர் விடயத்தில் ஒரு தெளிவான நிலையில் உள்ளார் என்பது புரிகின்றது.

அத்தோடு தற்போது ஈழத்தமிழர்களின் தமிழக பாதுகாவல் தூண்களான ம.தி.முக. செயலாளர் வைகோ அவர்களும், பா.ம.க நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களும் அந்த அணியிலேயே இருப்பது, அ.தி.மு.க அணியினரின் ஈழத்தமிழர் விவகாரத்தை பெரிய அளவில் முன்னெடுக்கும். இந்த நிலையில் ஈழத்தமிழர்களின் பால் பாராமுகம் காட்டிவரும் இந்திய காங்கிரஸ் அரசின் செயல் தவறு என எதிர்வரும் தேர்தல்கள் இந்திய அரசுக்கு உணர்த்தும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அ.தி.முக. அணியினரின் ஈழத்தமிழர் மீதான கரிசனையும், தமிழக மக்களின் ஈழத்தமிழர்கள், அவர்களது போராட்டத்திற்கான பேராதரவும், எமக்கும் எம் மக்களுக்கும் மகிழ்ச்சியைத்தருவதாக நடேசன் மேலும் தெரிவித்துள்ளார்.


உலகத்தமிழரின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கையில் கருணாநிதி மௌனம்: ஜெயலலிதா

ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் உலகத்தமிழரின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் கலைஞர் கருணாநிதி மட்டும் எதுவுமே நடைபெறாததைப் போன்று மௌனம் சாதித்துக் கொண்டிருக்கின்றார்.

உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்த வேண்டும் என அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

"ஆட்சி அதிகாரம் தன் பக்கம் இருக்க வேண்டும், தன் குடும்பம் வளமாக வாழ வேண்டும் என்ற தன்னலத்தின் காரணமாக, இலங்கைக்கு இந்திய அரசாங்கம் ஆயுதங்கள் மற்றும் நவீன சாதனங்கள் அனுப்பியதையும், சிறீலங்கா இராணுவத்தினருக்கு பயிற்சிகள் அளித்ததையும் வேடிக்கை பார்த்தவர் முதல்வர் கருணாநிதி.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையைத் தட்டிக் கேட்டு, அதற்காக மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கருணாநிதி திரும்பப் பெற்றிருப்பாரேயானால் சிறீலங்கா அரசுக்கான மத்திய அரசின் உதவி அன்றே நிறுத்தப்பட்டிருக்கும். ஈழத்தமிழர்கள் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

ஆனால் கருணாநிதி அதனைச் செய்யவில்லை. கருணாநிதியின் சுயநலம் காரணமாக இன்று இலங்கையில் தமிழர்கள் இன்னல்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். இலங்கையில் தொடரும் மோதல்கள் பற்றிய தகவல்கள் உலக நாடுகளில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா, நோர்வே உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு, தமிழர்களுக்கு எதிரான மனிதாபிமானமற்ற போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈழத்தமிழர்களுக்காக உலகத்தில் உள்ள தமிழர்களின் குரல்கள் எல்லாம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கையில், இலங்கையில் எதுவுமே நடக்காதது போல தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி மௌனம் சாதிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தற்போது இலங்கைத் தமிழர்களைக் காக்க உள்ள ஒரே வழி உடனடி போர் நிறுத்தம் தான். தமிழர்கள் மீது கருணாநிதிக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், மத்திய அரசை நிர்ப்பந்தப்படுத்தி உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments