இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்த 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்க மறுத்து நிரந்தர போர் நிறுத்தத்திற்கு தயார் என்று விடுதலைப் புலிகள் விடுத்த கோரிக்கையை சிறிலங்க அரசு நிராகரித்துவிட்ட நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச உறவுகளுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கைத் தீவில் தமிழ் தேசத்திற்கு தொடர்ந்து இழைக்கப்பட்ட அநீதியின் விளைவாகப் பிறந்த வரலாற்றுப் பூர்வமான விடுதலைப் போராட்டத்தையே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மேற்கொண்டு வருகிறது. வரலாற்று ரீதியாக தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநியாயங்களுக்கு எதிராகவே தமிழீழ விடுதலைப்புலிகள், ஆயுதம் ஏந்திப் போராடினர்.எங்களுடைய இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான நியாயமான தீர்வை சர்வதேச சமூகம் வழங்குமென்றால் அந்த ஆயுத போராட்டத்திற்கான அவசியம் இருக்காது” என்று அந்த அறிக்கையில் பத்மநாதன் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் அனுபவித்துவரும் மானுட அவலத்திற்கு உடனடியாகவும் நிரந்தரமாகவும் போர் நிறுத்தம் அறிவித்து முற்றுப் புள்ளி வைக்குமானால், அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தையின் மூலம் தமிழர்களின் உரிமையை போராடி பெற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தயாராகவே உள்ளது என்பதை சர்வதேச சமூகத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் பத்மநாதன் கூறியுள்ளார்.
நிரந்தர போர் நிறுத்தத்தை நிராகரித்த இலங்கை அரசாங்கம், 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி, தம்மால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தின் மீது ஆரம்பித்துள்ளது.இதன் போது படையினர் நகர்வுகளை தடுக்க தமிழீழ விடுதலைப்புலிகள் பாரிய தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து படையினர் ஆயிரக்கணக்கான எறிகணைகளையும் குண்டுகளையும் ஏவி பல பொதுமக்களை கொன்றும் ஆயிரக்கணக்கானோரை காயப்படுத்தியும் உள்ளனர்.
தமிழர்களின் அவலத்திற்கு முடிவுகட்ட நாகரீக உலகின் பிரதிநிதிளாக முன்னி்ன்று கொடை நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், நோர்வே ஆகியன இந்தியாவுடன் இணைந்து வலியுறுத்தி உடனடியாக நிரந்தர போர் நிறுத்தம் செய்ய வழிகாண வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள பத்மநாதன், போரின் மூலம் இனப் பிரச்சனைக்கு முடிவையோ அல்லது இலங்கையிலும் அல்லது தெற்காசிய மண்டலத்திலும் நிலைத் தன்மையையோ உருவாக்கிட இயலாது என்றும் கூறியுள்ளார்.
வன்னியில் இடம்பெறுகின்ற மக்களின் அவலங்களை சர்வதேசம் அறிந்திருந்தும் அதனை தடுப்பதில் முனைப்புக்காட்டவில்லை எனவும் பத்மநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
Comments