டென்மார்க்கில் கவனயீர்ப்பு நிகழ்வு மேலும் தீவிரமடைந்துள்ளது - கர்ப்பிணிப் பெண் உட்பட ஏழு பேர் சாகும்வரை உண்ணாவிரதம்

டென்மார்க்கின் தலைநகரான கொப்பன்னேக்கனில் வெளிவிவகார அமைச்சின் சதுர்க்கத்தில் 7 ஆம் திகதி அன்று மு.ப. 11 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வு மூன்றாவது நாளாக தொடரப்பட்டபோதிலும் எதிர்பார்த்த பதில்கள் ஏதும் வெளிவிவகார அமைச்சரிடமிருந்து கிடைக்காததினாலும் காவல்துறையினரால் இதற்காக ஒதுக்கப்பட்ட நேரம் முடிவடைகின்ற தருணத்தில் இப்போராட்டம் மறு முனைப்புப் பெற்றுள்ளது.




அதாவது திசைகள் இளையோர்கள் இன்று மாலை 6 மணி முதல் இதே இடத்தில் உண்ணாவிரத போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக அறிக்கையொன்றை விட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் 7 பேர் இணைந்துள்ளனர். பிரபா சிவபாலசுந்தரம், சுகந்தினி தம்பிராசா, சுகுணன் மார்க்கண்டு, சாலினி பரமேஸ்வரன், 30 வயதான திருமணமாகி ஒரு குழந்தையோடு இப்போது கர்ப்பமுற்றிருக்கும் திருமதி சிறீவாணி தியாகராசா, நிரஞ்சன் கந்தையா இவர்களுடன் 62 வயதான தவமணிதேவி பொண்ணண்ணன் ஆகியோர் இதில் அடங்குவர்.

இது குறித்து இவரகள் சார்பில் செவ்வி வழங்கிய செல்வி பிரபா சிவபாலசுந்தரம்அவர்கள் "எமது தேசத்தில் எம்மவர் மீது இலங்கை அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள யுத்தத்தினை உடனடியாக நிறுத்துவதற்கான அழுத்தத்தினை டென்மார்க் அரசு கொடுக்கவேண்டுமென இவ்வளவு காலமாக பல வழிகழிலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காததினால் இறுதியாக தாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.




இவரின் இந்த செவ்வியில் உடனடியாக யுத்தத்தினை நிறுத்தியதான செய்தி கிடைக்கப்பெறும்வரை தமது இந்தப் போராட்டம் தொடருமென மிகுந்த தொரு உறுதிப்பாட்டோடும், மனஉறுதியோடும் தெரிவித்திருந்தர். மேலும் இது குறித்து திருமதி தவமணிதேவி பொண்ணண்ணன் அவர்கள் தெரிவிக்கையில் தனக்கு இரத்த அழுத்தம் இருப்பதாகவும் இதை இட்டோ இல்லாவிடின் தனது குடும்பத்தை நினைத்தோ தான் கவலைப்படவில்லை என்றும் வன்னி நிலப்பரப்பில் எமது மக்கள் இரசாயணக்குண்டு போட்டு அழிக்கப்படுவதை இதன்மூலமென்றாலும் நிறுத்தவேண்டுமென்றும், தம்மை நினைத்து கவலைப்படாமல் தமக்கு ஆதரவு தரும்படியும் குறிப்பிட்டிருந்தார்.

இதில் எழுச்சி உணர்வு பொங்க பங்கெடுத்த எமது உறவுகள், இளையோரால் அறிவிக்கப்பட்ட இந்த முடிவுகள் குறித்து கவலை அடைந்தாலும், தம்மால் இயன்ற ஒத்துழைப்புக்களை வழங்குவதாக வாக்குறுதிகள் கொடுத்துள்ளனர். அத்துடன் எமக்கு மிக விரைவில் தமிழீழம் கிடைக்குமென்ற நம்பிக்கையோடு வீடுசென்றுள்ளனர். நான்காவது நாளாக இன்றும் தொடர்கின்ற இந்த கவனயீர்ப்பு நிகழ்வு தீவிர முனைப்புப்பெற்றுள்ளது.




அதாவது நேற்று முதல் உண்ணாநிலைப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள திசைகள் அமைப்பினரின் வேறு இளையோர் தமது போராட்டத்தினை இன்று வேறு ஒரு வழியிலும் மேற்கொண்டிருந்தனர் அதாவது கொப்பன்னேக்கன் பிரதான தொடருந்து நிலையத்தின் முன்னால் கூடிநின்று தாயக மக்களின் அவலம் சார்ந்த படங்களையும் தேசியக்கொடியினையும் தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தினை செய்திருந்ததோடு 30 இற்கு அதிகமான சிற்றூர்திகள் கொப்பன்னேக்கன் பெரும் பகுதியினூடாக பதாதைகளையும் வன்னியில் இடம்பெறும் நிகழ்வுகளை சித்தரிக்கும் படங்களையும் மற்றும் தமிழீழத் தேசியக்கொடியையும் தாங்கியபடி வலம் வந்ததையும் காண முடிந்தது..




Comments