பிரித்தானிய தொடர் போராட்டத்தை அடக்க காவல்துறை நேற்றிரவு முயன்றதால் பெரும் பரபரப்பு

பிரித்தானியாவில் தமிழ் இளையோர்களால் நடத்தப்பட்ட காலவரையற்ற ஆர்ப்பாட்டத்தை அடக்கும் வகையில் பிரித்தானிய காவல்துறையினர் நேற்றிரவு செயற்பட்டதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் நாடாளுமன்றத்திற்கு முன்பாக உள்ள சதுக்கத்தில் தமிழ் இளையோர்களின் ஏற்பாட்டில் கடந்த ஐந்து நாட்களாக காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது.

இப்போராட்டத்தில் இரண்டு இளைஞர்கள் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தையும் நடத்தினர். இவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிடுமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வழங்கிய உறுதிமொழியை ஏற்பாட்டாளர்கள் சாதகமாகவும் பரிசீலித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென பிரித்தானிய அரசாங்கம் காவல்துறையினரை ஏவி இந்த போராட்டத்தை அடக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றது.

இதன் முதற்கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வந்த சதுக்கத்தில் இருந்த தமிழ் மக்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டதுடன் மேற்படி சதுக்கத்திற்குள் எவரும் உட்செல்ல முடியாத வகையில் திடீரென தடுப்பு வேலிகளை அமைத்து வழமைக்கு மாறாக நூற்றுக்கணக்கான காவல்துறையினர் நேற்றிரவு முதல் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நேற்றைய நாள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணிக்கு பிரித்தானிய தமிழ் இளையோர்களால் நடத்தப்பட்டு வந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களும் சென்றதால் நேற்று மாலையில் நாடாளுமன்றத்திற்கு முன்பாக உள்ள சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகக் காணப்பட்டது.

இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மேற்படி சதுக்கத்தில் இருந்த தமிழ் மக்களை காவல்துறையினர் பலாத்காரமாக அங்கிருந்து வெளியேற்றி வீதிகளின் ஓரமாக விட்டனர்.

அத்துடன், மேற்படி போராட்டத்தில் சாகும்வரை உண்ணாநிலையினை தொடர்ந்து வந்த சுப்பிரமணியம் பரமேஸ்வரன் என்ற இளைஞனையும் காவல்துறையினர் அங்கிருந்து அகற்றினர். அவர் வீதியின் ஓரத்தில் மழைக்கு மத்தியிலும் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை தற்போது தொடர்ந்து வருகின்றார்.

இச்சம்பவத்தால் கொதிப்படைந்த பிரித்தானிய தமிழ் இளையோர் சம்பவ இடத்தில் திரண்டு தமது எதிர்ப்பை காட்டினர்.

எனினும் போதுமான மக்கள் அங்கு இல்லாததால் இன்று காலை மீண்டும் வீதியை குறுக்கே வழிமறிக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. பிரித்தானிய அரசாங்கமும் காவல்துறையினரும் தமிழ்மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆர்ப்பாட்டத்தை அடக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தாங்கள் சந்தேகிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்துள்ளனனர்.

Comments