தமிழர் விடுதலைப் போராட்டமும் புதிய தலைமுறையின் வரலாற்றுப் பணியும்

சிங்களம் தனது இறுதி அழித்தொழிப்பிற்கான தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது என்பதன் தார்ப்பரியத்தை விளங்காமல், ஆகக்குறைந்தது எங்களுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக்கூட அறிந்து கொள்ள முடியாதளவிற்கு நமது மக்கள் துண்டாடப்பட்டிருக்கின்றனர்.

ஈழத்தில் இருக்கும் தீவிர தமிழ்த் தேசிய ஆதரவு சக்திகள் கூட ஒருவித மனச்சோர்வுடனும் பதட்டத்துடனும் கானப்படுகின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் மூத்த அரசியல் ஆய்வாளரும் எனது நண்பருமான ஒருவருடன் பேசிபோது 'நான் பழைய நாவல்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன் வேறு என்னதான் செய்வது இங்கிருந்து," என்று மிகுந்த மனச் சோர்வுடன் கூறினார்.

ஈழத்தில் இருக்கும் தமிழ்த் தேசிய சக்திகளின் மனச்சோர்வு இரண்டு நிலைப்பட்டது.

மிகுந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் நம்மால் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறதே என்பது ஒன்று.

அடுத்தது களநிலைமைகளில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவுகள்.

எனது கருத்தியல் நண்பர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன உளைச்சல் எனக்கும் ஏற்படாமலில்லை.

ஆனால் மனச்சோர்வும் பதட்டமும் எந்த நன்மையையும் ஏற்படுத்தப்போவதில்லை. கால யதார்த்தத்தை கருத்தில் கொண்டே நாம் இயங்க வேண்டியிருக்கிறது.

இந்த நிலைமைகள் சாதாரணமாக பார்த்தால் எதோ தனிமனித சோர்வு அல்லது மனவருத்தம் என்பது போன்று தெரியலாம். ஆனால் அடிப்படையில் இதன் அரசியல் உள்ளடக்கம் மிகவும் ஆபத்தானது.

அடிப்படையில் நமது தேசிய அரசியல் மிகுந்த நுட்பத்துடன் அழிக்கப்பட்டு வருகின்றது என்பதுதான் உண்மை.

இதன் ஆரம்பம்தான் சில கிலோமீற்றர் தொலைவில் நமது தேசத்தின் ஒருபகுதி மக்கள் அழித்தொழி;க்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, ஏனைய பகுதிகளில் அது குறித்த எந்தவொரு கரிசனையும் இல்லாமல் கோயில் திருவிழாவிலும், கும்பாபிஷேகங்களிலும் நமது மக்களால் ஆர்வத்துடன் பங்கு கொள்ள முடிகின்றது.

நிலத்தில் இருக்கும் ஒரு தலைமுறை மிகவும் நேர்த்தியாக விடுதலை அரசியலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் அடுத்த தலைமுறையினர் மத்தியில் விடுதலை அரசியல் கருத்துக்களை கொண்டு சேர்க்கும் பணியை ஏற்றிருந்த கருத்திலாளர்கள் ஊடவியலாளர்கள் அனைவரும் மௌனிகளாக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த பின்புலத்தில்தான் நமது தேசத்தின் முழுக்கவனமும் புலம்பெயர் தமிழ் மக்களை நோக்கி திரும்பியிருக்கிறது. புலம்பெயர் தலைமுறையிலிருந்துதான் நமது தேசத்தின் அடுத்த கட்ட அரசியல் தொடங்கப் போகின்றது.

ஆரம்பத்தில் போராட்டத்திற்கான பின்தளம் என்ற நிலையில் மட்டுமே நோக்கப்பட்ட புலம்பெயர் சூழல் தற்போது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கான பிரதான அரசியல் தளமாக மாறியிருக்கின்றது.

மேற்கின் மூலம் சிறிலங்காவை நெருக்குவது என்ற அர்த்தத்தில் மட்டுமே புலம்பெயர் போராட்டங்களை சிலர் நோக்குவதுண்டு. அவ்வாறு நோக்குவது தவறானது.

தமிழர் தேசத்தின் பிரச்சனைக்கு சிங்களத்துடன் சேர்ந்து அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளும் தீர்வு முறையின் காலம் முடிந்துவிட்டது.

மேற்கு அரசுகள் அவ்வாறானதொரு தீர்வை முன்மொழியும் தகுதியையும் இழந்துவிட்டன. ஒரு தேசியப் பிரச்சனைக்கு ஒரு தேசம் தனக்கானதொரு தேசிய அரசை உருவாக்குவதே ஒரேயொரு தீர்வு என்பதை தேசியத்தின் இயக்க விதிகள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நிரூபித்துள்ளன.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உச்ச இலக்கை அடைவதற்கான வரலாற்று பொறுப்பு புலம்பெயர் தலைமுறையினர் கைக்கு மாறியிருக்கிறது.

அந்த இலக்கை அடைவதற்கு நமது தேசத்திற்கு இருக்கும் ஒரேயொரு ஆதாரம் புலம்பெயர் தலைமுறைதான்.

இதுவரை நமது அரசியல் இலக்கினை அடைவதற்கு இராணுவ வெற்றி என்ற ஒரு வழிமுறை பற்றியே நாம் அதிகம் அழுத்தியிருக்கிறோம்.

ஆனால் தற்போதைய சூழலில் அதற்கு சமாந்தரமாக குறிப்பாக சொல்வதானால் இன்னும் சற்று மேலாக அரசியலை அழுத்த வேண்டிய காலத்தில் பிரவேசித்திருக்கிறோம்.

இதனை ஏற்றுக்கொள்வது சற்று கடினமாக இருந்தாலும் இதுதான் யதார்த்தம்.

தற்போதைய அரசியல் நிலைமைகளை அவதானித்தால் நாம் ஒரு வியடத்தை தெளிவாக அவதானிக்கலாம்.

அது, புலம்பெயர் போராட்டங்களினால் மேற்கு மயப்படுத்தப்பட்டிருக்கும் தமிழர் அரசியலை தனது இராஜதந்திர வழிமுறைகள் மூலம் கட்டுப்படுத்த முடியாத சிங்களத்தின் தோல்வி, தற்போது மேற்குடனான முரண்பாடாக உருமாறிவருகிறது.

புலம்பெயர் தமிழர்களின் எழுச்சியை கருத்தில் கொண்டே ஒபாமா தலைமையிலான புதிய அமெரிக்க அரசுடன் தமிழர்கள் நெருங்கலாம் என்ற அச்சத்தில் எதிர் பிரச்சாரத்திற்காக அதிக நிதியை ஒதுக்கியுள்ளது கொழும்பு.

இதுவரை மேற்குலகம் இலங்கை அரசியல் மீதான தலையீட்டிற்கான ஒரு முகவராகவே (Pநயஉந யுபநnஉல ழக றநளவ) நோர்வேயை பயன்படுத்தி வந்தது.

ஆனால் சிங்களம் தற்போது தடாலடியாக இலங்கையின் சமாதானத் தொடர்புகளிலிருந்து நோர்வேயை விலக்கியுள்ளது. இதன் மூலம் மேற்கின் இலங்கை மீதான சமாதான ஊடாட்டங்களை கொழும்பு மட்டுப்படுத்தியுள்ளது.

மேற்குலகம் யுத்த நிறுத்தத்திற்கான கரிசனையை வெளிப்படுத்தி வரும் சூழலில் நோர்வேயை முழுமையாக நீக்கியிருப்பதானது ஒருவகையில் மேற்கின் கரிசனையை சிங்களம் புறம் தள்ளியிருக்கிறது என்பதாகவும் நாம் கொள்ளலாம்.

கொழும்பு பிராந்திய சக்திகளுடன் நெருக்கமான தொடர்புகளை பேணிவரும் சூழலில் மேற்குடன் முரண்படுவது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளும் நிலையிலுமில்லை.

நோர்வே நீக்கப்பட்டிருப்பதன் மூலம் இலங்கை மீதான முழுமையான ஈடுபாடு இந்தியாவின் வசமாகியுள்ளது. இந்த முடிவை எடுப்பதற்கு முன்னர் கொழும்பு இந்திய ஆலோசனையை நிச்சமாக பெற்றிருக்கும்.

ஏலவே மேற்கின் அதிக கவனம் இலங்கை மீது குவிந்து வருவதை ஓருவித அச்சத்துடனேயே இந்தியா அவதானித்து வந்தது.

இந்த சூழலில் மேற்கின் சமாதான தொடர்பாளரை நீங்கியிருப்பதன் மூலம் அந்த அச்சத்தை சிங்களம் போக்கியிருக்கிறது.

கொழும்பிற்கும், மேற்கிற்குமான முரண்பாடுகளின் இடையில்தான் நமது செயற்பாடுகளை நகர்த்த வேண்டியிருக்கிறது. அதனை புலம்பெயர் சமூகங்களால்தான் செய்ய முடியும்.

இது மிகுந்த நிதானத்துடன் கையாள வேண்டிய ஒன்றுமாகும். மேற்கின் ஜனநாயக வரம்புகளுக்குள் நின்று கொண்டே இதனை சாதிக்க வேண்டியிருக்கிறது.

காலத்தை தவற விடுவோமாயின் நமது அரசியல் ஒரு நூற்றாண்டு நோக்கி பின்தள்ளப்படுவது நிச்சயம். நமது அரசியல் பின்தள்ளப்படுவது என்பதும் நாம் அழிவது என்பதும் வேறு வேறல்ல.

- தாரகா -

அமெரிக்கன் வீசிய குண்டுகளின் கீழே
வியட்நாமியர் அழவில்லை.

அமெரிக்கன் விசிறிய நச்சுக் காற்றினால் அவர்கள்
நடுக்கமுறவில்லை.

கூடி எழுந்தனர்.
குலையுறாது நிமிர்ந்தனர்.

விழுந்தவர் போக எஞ்சியோர் விடுதலையை தொடர்ந்தனர்.
தாயினும் பெரியது தாயகம்
வாழ்வதிலும் பெரியது வரலாற்றுக் கடன்.

தலைமுறைக்கான பணி தாங்கி நடப்பதே
மனுக்குலத்திற்குரிய மணிமகுடம்.

ஈழத் தமிழர் எவராயினும் எங்கிருப்பவராயினும்
காலக் கடைமையை கையிலெடுப்போமெனில்
நாளை நமதாகும்.

இல்லையெனில் இழிவுற்றுச் சாவோம்.

- புதுவை இரத்தினதுரை -

Comments