உலகின் மிகப் பெரிய பணயக்கைதிகள் மீட்பு நடவடிக்கையை தமது படைகள் மேற் கொண்டிருப்பதாகக் கூறுகிறது இலங்கை அரசு. வன்னியில் ஓடி ஓடி ஒதுங்கி- கடைசியில் பாதுகாப்பு வலயத்துக்ள் தஞ்சமடைந்திருந்த மக்களை, அங்கிருந்து வெளியேற்றுவதற்கு அரசபடைகள் அனைத்து விதமான பிரயத்தனங்களையும் மேற்கொண்டு பார்த்தன
கிரேக்கத் தலைநகர் எதென்ஸில் இருந்து பாரிஸ் நோக்கி- 256 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த போது கடத்தப்பட்ட, எயர் பிரான்ஸ் விமானம் உகண்டாவின் என்ரபே விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.இஸ்ரேலிய கொமாண்டோக்கள் என்ரபே விமானநிலையத்தில் தரையிறங்கி ஒரு அதிரடித் தாக்குதலைத் தொடுத்தன.1976ம் ஆண்டு ஜுலை 4ம் திகதி நடத்தப்பட்ட இந்த அதிரடித் தாக்குதலின் மூலம் 08 கடத்தல் காரர்களையும், 45 உகண்டாப் படையினரையும் கொன்று விட்டு இஸ்ரேலிய கொமாண்டோக்கள் பணயக் கைதிகளை மீட்டுச் சென்றனர்.பணயக் கைதிகள் நான்கு பேர் கொல்லப்பட்டு 10 பேர் காயமுற்றபோதும் எஞ்சியோர் விடுவிக்கப்பட்டனர்.
இதேபொன்றதொரு நடவடிக்கையை- அதாவது உலகின் மிகப் பெரிய பணயக்கைதிகள் மீட்பு நடவடிக்கையை தமது படைகள் மேற்கொண்டிருப்பதாகக் கூறுகிறது இலங்கை
அரசு.வன்னியில் ஓடி ஓடி ஒதுங்கி- கடைசியில் பாதுகாப்பு வலயத்துக்ள் தஞ்சமடைந்திருந்த மக்களை, அங்கிருந்து வெளியேற்றுவதற்கு அரசபடைகள் அனைத்து விதமான பிரயத்தனங்களையும் மேற்கொண்டு பார்த்தன.கண்மூடித்தனமான தாக்குதல்கள் மூலம் அச்சமூட்டியும், புலிகள் இயக்கம் பற்றிய வதந்திகளைக் கட்டவிழ்த்து உளவியல் ரீதியாகவும், உணவு-மருந்து தடைகள் மூலம் அவர்களைப் பௌதிக ரீதியாகவும் துன்புறுத்தி அங்கிருந்து வெளியேற்றப் பார்த்தது.
ஆனால் எதுவுமே பலிக்காத நிலையில் படை நடவடிக்கை மூலம் பொதுமக்களை வெளியேற்றிவிட்டு- புலிகளுக்கு எதிரான அழித்தொழிப்புத் தாக்குதலை நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்தப் பத்தி எழுதப்பட்டுக் கொண்டிருந்த போது அங்கு மிகப்பெரிய மனிதப் பேரழிவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.பணயக்கைதிகள் மீட்பு என்ற பெயரில் அரசபடைகள் நடத்தும் கோரமான தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும்- காயமடைந்தும் இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
பாதுகாப்பு வலயத்துக்குள் பொதுமக்களைத் தங்கியிருக்குமாறு அரசாங்கம் அறிவித்த பின்னர் தான்- அதற்குள் மக்கள் அடைக்கலம் தேடியிருந்தனர். ஆனால் இப்போது அரசபடைகள் பாதுகாப்பு வலயத்துக்குள்ளேயே தாக்குதலை நடத்தி- மக்களைக் கொன்றழிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. புலிகளோடு தான் மக்கள் இருக்கிறார்கள் என்பதை வெளியே சொல்ல முடியாத நிலையில் அரசாங்கம் இருந்தது.
புலிகளோடு மக்கள் இருக்கிறார்கள் என்று கூறுவது- சர்வதேச ரீதியில், புலிகளுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதென்ற அங்கீகாரத்தைக் கொடுத்து விடும் என்று அஞ்சியது அரசாங்கம்.
இதனால் தான் மக்களின் விருப்புக்கு மாறாக புலிகள் அவர்களைத் தடுத்து வைத்திருப்பதாகக் கூறிவந்தது.இதனை அடிப்படையாக வைத்தே- பணயக்கைதிகள் மீட்பு நடவடிக்கை என்று பெயர் சூட்டி உலகத்தை ஏமாற்றப் பார்க்கிறது அரசாங்கம்.
புலிகளுக்கு எதிரான போரை- முன்னர் மனிதாபிமானப் போர் என்றும், பின்னர் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்றும் கூறிவந்த இலங்கை அரசாங்கம்- கடைசியில் அதை உலகின் மிகப்பெரிய பணயக்கைதிகள் மீட்பு நடவடிக்கை என்று மாற்றிக் கொண்டது.
புலிகளால் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் மக்களை மீட்கும் நடவடிக்கை என்ற பெயரில இலங்கை அரசாங்கம் நடத்திய போர் நடவடிக்கையானது மிக மோசமான மனித அழிப்புப் போராகும்.
இந்த நடவடிக்கை ஒவ்வொரு கட்டத்திலும் தமிழ் மக்களின் உயிர்களைக் குடித்தே மேற்கொள்ளப்பட்டது.தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக பாதுகாப்பு வலயத்தைக் கைப்பற்றும் தாக்குதலை மேற்கொண்ட 53வது மற்றும் 68வது டிவிசன்களுக்கு தோல்வியே மிஞ்சியது.
கடந்த 10ம் திகதி இரவு தொடக்கம் 12ம் திகதி வரை நடந்த சண்டைகளின் போது- பொதுமக்களை வெளியேற்றும் அளவுக்குப் படையினரால் முன்னகர முடியாது போனது.வலயன்மடத்துக்கும் முள்ளிவாய்க்காலுக்கும் இடைப்பட்ட பகுதிக்குள் மேற்கொள்ளப்பட் இந்த ஊடறுப்பு முயற்சி தோல்வியில் முடிந்தபோது- பெருந்தொகையான படையினர் மரணமாகியிருந்தனர்.
நூற்றுக்கணக்கான படையினர் புலிகளின் மிதிவெடிகளில் கால்களை இழந்தனர்.
புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கம் அறிவித்த போர் மட்டுப்படுத்தல் காலம் முடிவுற்றதும்- மீண்டும் அதே பகுதியில் நடந்த சண்டைகளிலும் படையினருக்குப் பெரும் இழப்புகள் ஏற்பட தாக்குதலுக்கான திட்டத்தை மாற்றிக் கொண்டது படைத்தலைமை.
மாத்தளனுக்கும் வலயன்மடத்துக்கும் இடையில் ஒரு உடைப்பை ஏற்படுத்தி- அதனூடாகப் படைகளை நகர்த்தி, அங்குள்ள பொதுமக்களை வெளியேற்றுவது தான் படைத்தரப்பின் நோக்கமாக இருந்தது.
மாத்தளன் வைத்தியசாலைப் பகுதியை அண்டி பெருந்தொகையான மக்கள் வசித்து வந்தனர்.அத்துடன் வைத்தியசாலைப் பகுதியைக் கைப்பற்றினால் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் பொதுமக்கள் தம்மிடம் ஓடி வருவார்கள் என்று கருதியது படைத்தரப்பு.
இவர்களை வெளியேற்றுவது சுலபம் எனக் கருதியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வன்னிப் படைகளின் தலைமையகத்துக்கு கடந்த 19ம் திகதி சென்ற இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா இந்தத் தாக்குதல் திட்டம் குறித்து படைத் தளபதிகளுடன் ஆராய்ந்தார்.
பிரிகேடியர் சவீந்திர சில்வாவின் தலைமையிலான 58வது டிவிசன், விசேடபடைகள் பிரிகேட் மற்றும் கொமாண்டோ பிரிகேட் ஆகியன இணைந்து இந்தத் தாக்குதலை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் வகுக்கப்பட்ட உத்திகளின் அடிப்படையில் கடந்த 19ம் திகதி இரவு 11.30 மணியளவில் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது.கேணல் அத்துல கொடிப்பிலியின் கட்டுப்பாட்டில உள்ள விசேட படைகள் பிரிகேட்டைச் சேர்ந்த மேலும் மூன்று பற்றாலியன்கள் களமுனைக்கு அனுப்பி வைக்கபட்டிருந்தன.
அந்தப் பகுதியில் ஏற்கனகவே 1வது விசேட படைகள் மற்றும் 2வது விசேட படைகள் என்பன நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன.அதற்கு மேலதிகமாக மேஜர் சந்திமால் பீரிஸின் 3வது விசேட படைகள், மேஜர் துஷார மஹாலேகமின் 4வது விசேட படைகள், மேஜர் நிசங்க இரியகமவின் 5வது விசேட படைகள் ஆகியனவே இந்தத் தாக்குதலுக்காக மேலதிகமாக அனுப்பி வைக்கப்பட்டன.
அத்துடன் கேணல் ரால்ப் நுகெரா தலைமையில் கொமாண்டோ பிரிகேட்டைச் சேர்ந்த லெப்.கேணல் ஜெயந்த பாலசூரியவின் 2வது கொமாண்டோ மற்றும் மேஜர் அனில் சமரசிறி தலைமையிலான 3வது கொமாண்டோ றெஜிமென்ட்களும் இந்தத் தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
விசேட படைகள் பிரிகேட், கொமாண்டோ பிரிகேட் ஆகியவற்றுடன் லெப்.கேணல் தேசப்பிரிய குணவர்த்தனவின் தலைமையிலான 58-1 பிரிகேட்டைச் சேர்ந்த மூன்று பற்றாலியன் படையினரும் இந்த தாக்குதலில் களமிறக்கப்பட்டனர்.லெப்.கேணல் கீத்சிறி எக்கநாயக்க தலைமையில் 11வது இலகு காலாற்படை, லெப்.கேணல் லால் சந்திரசிறி தலைமையில் 9வது கெமுனுவோச், லெப்.கேணல் சந்தன விக்கிரமசிங்க தலைமையில் 8வது கஜபா றெஜிமென்ட் ஆகியன இந்த பிரிகேட்டில் இடம்பெற்றிருந்தன.
19ம் திகதி இரவு 11.30 மணியளவில் வலயன்மடத்துக்கும், புதுமாத்தளன் பகுதிக்கும் இடைப்பட்ட புலிகளின் மண்ணரணைக் கைப்பற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
இரகசியமாக முன்னேறிய விசேட படைப்பிரிவின் 1வது பற்றாலியனும், கொமாண்டோ பிரிகேட்டின் 2வது பற்றாலியனும் அதிகாலை 2மணியளவில் புலிகளின் மண்ணரணைக் கைப்பற்றும் தாக்குதலை ஆரம்பித்தனர்.
19ம் திகதி படைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற பொதுமக்களில் ஒரு பகுதியினரை தடுத்து வைத்திருந்த படையினர்- அவர்களை முன்னிறுத்திக் கொண்டு தாக்குதலைத் தொடங்கினர்.
மனித கேடயங்களாகப் பொதுமக்களை முன்னிறுத்திக் கொண்டு முன்னகர்ந்த படையினர் மீது புலிகளால் பல இடங்களில் எதிர்த்தாக்குதல் நடத்த முடியாது போனது.
இந்தப் பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே புலிகள் பெருந்தொகையான மிதிவெடிகள் மற்றும் பொறிவெடிகளை விதைத்து வைத்திருந்தனர்.இவற்றை அகற்றவும் பொதுமக்களையே படைத்தரப்பு பயன்படுத்தியிருக்கிறது.கண்ணிவெடி வயல்களின் ஊடாக பொதுமக்களை நடந்து செல்ல விட்டு அந்த வழியே படையினர் முன்னேறியிருக்கின்றனர்.
கண்டணிவெடி வயல்களில் நடக்க விடப்பட்டதால் மிதிவெடிகளில் சிக்கி கால்களை இழந்த நிலையில் பெருந்தொகையான பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
சுமார் 3கி.மீ நீளத்துக்குப் படையினர் திறந்த அந்தக் களமுனையில் சில இடங்களில் கடும் சண்டைகள் வெடித்தன.இந்தச் சமரில் விசேட படைகள் பிரிகேட் பலத்த அழிவுகளைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
20ம் திகதி அதிகாலையில் ஒரு சில மணிநேரங்களுக்குள் நடந்த சமரில் விசேட படைகள் பிரிகேட்டைச் சேர்ந்த கப்டன் தர அதிகாரி உள்ளிட்ட 11 படையினர் கொல்லப்பட்டதை பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
பிரிகேடியர் நாபாகொடவின் தலைமையிலான 9வது ஆட்டிலறி றெஜிமென்ட் இந்த நடவடிக்கையின் போது உச்சக் கட்ட பீரங்கிப் படைபலத்தைப் பயன்படுத்தியது.
அதிகாலை 2 மணிக்கும் நண்பகலுக்கும் இடைப்பட்ட நேரத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பீரங்கிக் குண்டுகள் பாதுகாப்பு வலயத்துக்குள் வீழ்ந்து வெடித்தன.
லெப்.கேணல் நிகால் சமரக்கோன் தலைமையிலான 4வது கவசப் படையின் டாங்கிகள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தின.
புதுமாத்தளன் தொடக்கம் வலயன்மடம் வரையிலான பகுதிகளைச் சுற்றி மக்கள் வெளியேற முடியாதபடி- மிக உக்கிமான பீரங்கித் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன.
இதன்காரணமாக பாதுகாப்பு வலயத்தின் தெற்குப் பகுதி நோக்கி பொதுமக்களால் தப்பி ஓட முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக மாத்தளன், அம்பலவன்பொக்கணைப் பகுதிகளில் இராணுவ முற்றுகைக்குள் சிக்கிக் கொண்ட பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிரவேசிப்பதை விட வேறு வழி இருக்கவில்லை.
சுமார் 3கி.மீ நீளமான மண்ணரண் பகுதியில் உடைப்பை ஏற்படுத்திய அந்தப் பகுதிக்குள்; இருந்த மக்களை வெளியேற்றும் நடவடிககையில்; இறங்கினர்.
காலை 7மணியளவில் பொதுமக்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
நண்பகலுக்கு பின்னர் படையினர் பின்வாங்கிக் கொண்டனர்.அம்பலவன்பொக்கணை, புதுமாத்தளன் ஆகிய இடங்களில் தங்கியிருந்த பெரும்பாலான பொதுமக்கள் அங்கிருந்து படையினரால் வெளியேற்றப்பட்டனர்.
இந்தத் தாக்குதலை விமானப்படையின் நடவடிக்கைத் தலைமையகத்தில் இருந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மேற்பார்வை செய்திருந்தார்.
காலை 11மணி தொடக்கம் சுமார் 40 நிமிடங்கள் வரை அங்கு தங்கியிருந்து ஆளில்லா வேவு விமானத்தில் இருந்து எடுக்கப்படும் படங்களைப் பார்வையிட்டார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ.அவருக்கு விமானப்படையின் நடவடிக்கைப் பணிப்பாளர் எயர் வைஸ் மார்ஷல் கோலித குணதிலக படங்களைக் காண்பித்து விளக்கமளித்திருந்தார்.
உலகிலேயே மிகப் பெரிய பயணக் கைதிகள் மீட்பு நடவடிக்கை என்று இலங்கை அரசு கூறிக்கொண்டிருப்பினும்- உலகிலேயே மிகப் பெரிய மனிதப் பேரழிப்பு நடவடிக்கையாகவே இது அமைந்திருக்கிறது.
இந்தப் போர் நடவடிக்கையில் 20ம், 21ம் திகதிகளில் கொல்லப்பட்ட பொதுமக்கள்- காயமுற்ற பொதுமக்களின் தொகை ஈழப்போர் வரலாற்றில் மிகமோசமானது.
20ம் திகதி நடவடிக்கையில் படையினரின் தாக்குதல்களில் 1500 பேருக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும்- 3000 பொதுமக்கள் வரை காயமுற்றிருக்கலாம் என்றும் வன்னித் தகவல்கள் தெரிவித்தன.
21ம் திகதி 500 பேர் வரை கொல்லப்பட்டு 1000பேர் வரை காயமுற்றதாக கூறப்படுகிறது.
இரண்டு நாள் தாக்குதல் நடவடிக்கை மூலம் 62,609 பொதுமக்களை பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்து படையினர் வெளியேற்றியிருப்பதாக அரசாங்கம் கூறும் தகவல்களையே சர்வதேச ஊடகங்கள் வெளியிடுகின்றன.
ஆனால் இந்த நடவடிக்கையில் 2000 பொதுமக்கள் வரையில்- இருநாட்களிலும் கொல்லப்பட்டதையோ, 4000 பேர் வரையில் காயப்படுத்தப்பட்டதையோ ஊடகங்கள் கருதில் கொள்ளவில்லை.
பெருந்தொகையான பொதுமக்கள் கொல்லப்பட்டதை- காயமற்றதை மறைக்க புலிகள் மூன்று இடங்களில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடத்தியதாக புரளியைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது படைத்தரப்பு.
ஆனால் இந்த மூன்று தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களும் எந்த இடத்தில்? எப்போது நிகழ்ந்ததென்று படைத்தரப்பு கூறவில்லை. அதற்கான எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவும் இல்லை.
பொதுமக்கள் மத்தியில் குண்டுகளை வெடிக்க வைத்து அவர்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி விரட்டப்பட்டதாக தெரியவருகிறது. இதன்போது படையினரின் தாக்குதல்களில் 20 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
376 பேர் காயமுற்ற நிலையில் அரச கட்டுப்பாட்டுப் பகுதி வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரியவருகிறது.21ம் திகதி மாலையில் படையினர் மாத்தளன் வைத்தியசாலைப் பகுதியையும் கைப்பற்றி பாதுகாப்பு வலயத்துக்குள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.அடுத்த கட்டமாக அவர்கள் தெற்கு நோக்கி முன்னேறும்போது- இதைவிட மோசமான மனிதப் பேரழிவுகள் அரங்கேறும் நிலை உருவாகியுள்ளது.
அரசாங்கம் கூறும் மிகப் பெரிய மீட்பு நடவடிக்கை- இப்போது மிகப்பெரிய மனித அழிப்பு நடவடிக்கையாகத் தொடர்கின்றது.
இந்தநிலையில் சர்வதேசம் கடைப்பிடித்து வரும் மௌனம் தமிழ் மக்களைப் பெரிதும் விரக்தியடையச் செய்துள்ளது.
நன்றி:நிலவரம்
Comments