காலத்தை தவறவிட்டால் கண்டவனெல்லாம் கால்பதிப்பான்

உலகப் பரப்பெங்கும் எழுச்சி பெற்றுள்ளது தமிழீழ மக்களின் போராட்டங்கள். தன்னியல்பான எழுச்சியால் ஒன்று திரளும் மக்கள் கூட்டம் சர்வதேசத்திடம் நீதிகோரி வீதியில் இறங்கிவிட்டது. மாணவர்கள் தலைமையில் முன்னெடுக்கப்படும் இப் பேரெழுச்சி விடுதலையை நோக்கிய திசையில் பயணிக்கிறது.

தமிழினப் படுகொலையை மூடிமறைத்து, மனிதக் கேடய மாய்மாலங்களைத் தூக்கிப்பிடிக்கும் சர்வதேச வல்லரசாளர்களின் போலி ஜனநாயக முகத்திரைகளை கிழித்தெறிய இளைஞர்கள் கிளர்ந்தெழுந்துவிட்டார்கள்.

சிங்களத்தின் அழிவினைத் தடுத்து நிறுத்த சமாதானக் காவலர் வேடமிட்டு 2001ல் வன்னிக்கு யாத்திரை மேற்கொண்ட மேற்குலகின் தூதுவர் எரிக் சொல்யஹய்மின் நாட்டிலும், போராட்டங்கள் வெடிக்கின்றன. மக்கள் போராட்டங்கள் பல அதிசயங்களை நிகழ்த்திய வரலாறுகளை அவர் மறந்துவிட்டார்.

2002ல் மேற்குலக சார்பாக அவர் நிகழ்த்திய அதிசயம்தான் போர்நிறுத்த ஒப்பந்தம். அன்று சிங்களம் பலவீனமடைந்து இருந்ததால் அவர் அந்த அதிசயத்தை நிகழ்த்தினார். இன்று சிங்களமானது பலமான நிலையில் இருப்பதால் அந்தப் போர்நிறுத்த அதிசயத்தை மறுபடியும் நிகழ்த்த முடியாதென அறுதியிட்டுக் கூறுகின்றார். விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டால் மட்டுமே தன்னால் அந்த அதிசயத்தை நிகழ்த்த இயலும் என்பதே எரிக்சொல்யஹய்மின் நிலைப்பாடு.

விடுதலைப் புலிகளும் கல்லெறியும் போராட்டத்தை ஆரம்பிப்பார்கள் என்பதே அவரின் எதிர்பார்ப்பு. ஆனாலும் வன்னி மண்ணில் சிங்களம் சின்னாபின்னமாவதை இந்த வல்லரசுகளின் தூதர் தெரிந்திருக்கவில்லை. எரிவாயு நிரம்பிய குண்டுகளை (Incendiary Bomb) போராளிகள் மீது ஏவும் கையறு நிலைக்கு சிங்களம் வந்தடைந்திருப்பதை முன்னரங்க சிறப்புப் படையணிகளின் சிதைவுகள் வெளிப்படுத்துகின்றது. நீண்ட காலமாகவே பிராந்திய ஆதிக்கத்தை நிலைநாட்டப் போட்டியிடும் மேற்குலகின் சார்பாக 2001ல் களமிறக்கப்பட்டவரே திருவாளர் எரிக் சொல்ஹய்ம். இவர் மேற்குலக ஏகாதிபத்தியத்தின் குரலாக ஒலிக்கும் அதேவேளை ஹிலாரி கிளிண்டனுடன் தொடர்பினை ஏற்படுத்தி புதிய நகர்வொன்றினை ஏற்படுத்த முயல்வதாகவும் போக்குக் காட்டுகின்றார். மகிந்தர் போர்நிறுத்த ஒப்பந்தத்தினைக் கிழித்தெறிந்தபோது கொல்லைப்புற வாசல் வழியாக வெளியேறிய நோர்வேயின் அனுசரணையாளர் ஆயுத ஒப்படைப்புக் கதையோடு மறுபடியும் களத்தில் குதிக்க முயல்வது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பாலஸ்தீனத்தில் நோர்வே நிகழ்த்திய அதிசயங்களை காசாவில் காணக்கூடியதாக இருக்கிறது. இனிவரும் நாட்களில் தமிழீழ மக்கள் நிகழ்த்தப் போகும் அதிசயங்களை, இவர் தரிசிக்கும் வாய்ப்புக்கள் ஏற்படும் என்பதை நம்பலாம்.

தற்போதைய இறுக்கமான களச் சூழலிலும், சர்வதேசக் காய் நகர்த்தல்களிலும் எரிக்சொல்ஹய்மின் வகிபாகம் சிறிதளவு முக்கியத்துவத்தையும் பெறவில்லை என்பதே உண்மை. ஆகவே அனுசரணைத் தளத்தின் தேவைக்கு அப்பால் வேகமாக நகர்ந்து செல்லும் போராட்ட சூழலில் எரிக்சொல்யஹய்ம் போன்றவர்களின் தேவையும் அற்றுப்போகின்றது. ஐ.நாவின் மந்திர வாசலைத் தட்டும் இன்றைய சர்வதேச மயப்பட்ட எமது போராட்டத்தில் சமாதான சகவாழ்வு என்கிற காலாவதியாகிப்போன விவகாரங்கள் எதுவித தாக்கங்களையும் ஏற்படுத்தாது. மனிதக் கேடயம், ஆயுதச் சரணடைவு என்கின்ற சர்வதேசக் கோரிக்கைகளை மீறி இனப்படுகொலை என்ற செய்தி உலகெங்கும் பரவும் வகையில் புலம்பெயர் தமிழர்களால் உரத்துச் சொல்லப்படுகின்றது.

அதாவது "இனப்படுகொலையை தடுத்துநிறுத்த, போர்நிறுத்தத்தை வலியுறுத்தி' என்கின்ற கோரிக்கையே மேலெழுந்துள்ளது. ஆனாலும் உறுதி தளரா ஆத்மா வேசத்துடன் தமிழ் மக்களால் முன்வைக்கப்படும் இறுதிக் கோரிக்கையை மேற்குலகம் செவிசாய்க்குமாவென்று ஒரு சில நாட்களில் தெரிந்துகொள்ளலாம். இற்றைவரை அனுமதிபெற்று, நாட்குறித்து, அருந்ததிபார்த்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணிகளை மேற்குலக ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், மந்திரிப் பிரதானிகளும் ஆவன செய்வதாக வாக்குறுதிகளை வழங்கியதோடு, மாயாவிபோல் மறைந்துவிட்டார்கள். காவல்துறையின் அனுமதி பெறாமல் தன்னியல்பாக கிளர்ந்தெழுந்த மக்கள் வீதியில் இறங்கி, போக்குவரத்து விதிகளை மீறியவுடன் ஊடகங்கள் ஓடோடி வந்தன. நகரின் அசைவியக்கம் சீர்குலைந்து போனதென தலைப்புச் செய்திகளை வெளியிட்டன.

இதுவரை அரசியல்வாதிகளின் காதுகளில் ஒலித்த ஈழமக்களின் அவலக்குரல் பத்திரிகையூடாக பொதுமக்களின் பார்வைக்குச் சென்றடைந்தது. மூன்று இலட்சம் மக்களின் பேரவலத்தை மூவாயிரம் மக்கள் ஒன்றுகூடி ஒரேநாளில் இப்பூவுலகத்திற்குத் தெரியப்படுத்திவிட்டனர். அதாவது சட்டத்தை மீறும்போதுதான் உரிமைக்குரலில் நியாயத்தன்மை மக்களைச் சென்றடையும் போலிருக்கிறது.

வாசற் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஐ.நா சபையின் மனித உரிமை ஆவணக் காப்பகத்தில் தூங்கிக்கொண்டிருக்கும் சிங்களத்தின் இனப்படுகொலைச் சான்றுகளை எடுத்துவந்து ஏதோ ஒரு வாசலினுாடாக உலக மக்களின் பார்வைக்கு எடுத்துச் செல்லலாம்.வாசல்கள் திறக்கப்பட்டுள்ளதால், இனி ஒரு குட்டித்தூக்கம் போடலாம் என எண்ணாமல், ஊடகப் பரப்புரையின் விதித்தளத்தைப் பலப்படுத்தி உலக மக்களின் மனச்சாட்சியைத் தட்டியயழுப்ப முன்வரவேண்டும்.

இதன் பிரதிபலிப்பாக பிரித்தானியாவின் தொழிலாளர் புரட்சிக் கட்சியானது ஈழத் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதாக தமது பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் வெளிப்படுத்தியுள்ளது. சிறீலங்கா என்றால் சுவையான தேயிலை வழங்கும் நாடு என்பது மறைந்து, பின்பு துடுப்பெடுத்தாட்ட சூரர்கள் நிறைந்த நாடு என்று புதிய புகழாரம் சூட்டப்பட்டு, இன்று இனவெறி பிடித்த பேரினவாத கொடுங்கோல் அரசு ஆட்சி புரிவதாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆர்ப்பாட்டங்களில் அரசினை நோக்கி கோரிக்கைகளை விடுக்கும் அதேவேளை அங்கு வருகைதரும் உள்நாட்டு ஊடகங்கள், மற்றும் சுயாதீன ஊடகவிய லாளர்களிடம் எமது போராட்ட நியாயத்தை வரலாற்று ரீதியாக மிகவும் தெளிவாகவும், சுருக்கமாகவும் முன்வைக்கவேண்டும்.

ஆர்ப்பாட்டத்தில் நான் சந்தித்த பல ஊடகவியலாளர்களுக்கு எமது போராட்டத்தின் அடிப்படை குறித்தும், சர்வதேச வலைப்பின்னலின் பின்புலத்தில் செயற்படும் பிராந்திய வல்லரசுகளின் சூழ்ச்சிகள் பற்றியும் ஆழமான புரிதல் காணப்படவில்லை. பயங்கரவாதப் போராட்டம் என்கிற சர்வதேச ஏகாதிபத்தியங்களின் பரப்புரைக்குள் எமது மக்களின் அவலங்களும் தாயகத்தை மீட்கும் போராட்டத்தின் நியாயப்பாடுகளும் மறைக்கப்பட்டுள்ள விவகாரம் இந்த வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்குத் தெரியாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே ஆர்ப்பாட்டக் களத்திற்கு ஆட்சியாளர் வருகைதந்து, மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும்வரையிலாவது அங்கு பார்வையிட வருகைதரும் ஊடகத்தாளரிற்கு தொடர்ச்சியாக எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவேண்டும். சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பு உச்சம் பெற்றுள்ள இவ்வேளயில் மூன்று இலட்சம் வன்னிமக்களின் இருப்பு வாழ்வா? சாவா? என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மாணவர்கள், இளைஞர்கள் முன்னெடுக்கும் இப்போராட்டங்கள் தொய்வு நிலையை அடையாமல், வீரியம்பெற்று முன்னகர்ந்து செல்ல சகல ஈழத்தமிழினமும் பங்காளிகளாக மாறவேண்டும். இப்போராட்டங்களை வேகப்படுத்தும் வகையில் மாணவர்களால் உண்ணாநிலைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதேவேளை சர்வதேச ஊடகங்களினுVடாகப் பிரிந்துசென்று வாழும் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் வகையில் கருத்துக்கள் சொல்லப்படல் வேண்டும்.

வல்லரசுகளின் இன அழிப்பிற்கு ஆதரவான இரட்டை வேடத்தை உலக அளவில் அம்பலப்படுத்த வேண்டிய தருணமும் இதுதான். காலத்தைத் தவறவிட்டால் எரிக்சொல்யஹய்ம் போன்ற போலிச் சமாதானவாதிகள் மறுபடியும் உட்புகுந்து எமது போராட்டங்களை தவறான வழியில் மீண்டும் திசைதிருப்பி விடுவார்கள். சனிக்கிழமை இலண்டனில் நடைபெறவுள்ள மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியோடு போராட்ட முனைப்பு ஓய்வுநிலைக்கு வந்தடையக்கூடாது. அதையும்தாண்டி அடுத்த கட்ட படிநிலைக்கு இப்போராட்டங்கள் கொண்டுசெல்லப்படவேண்டும்.

இன்னும் சில தினங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வன்னி மக்களைக் கொன்று குவித்து போராட்டத் தலைமையை அழித்து விடலாமென்று சிங்களமும், இந்திய அரசும் இணைந்து நடாத்தும் சதிகளை முறியடிக்கவேண்டிய வரலாற்றுக்கடமை எம்மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. மாற்றுக்கருத்துக்களையும், வேற்றுமைகளையும் கடந்து எமது இனத்தின் வாழ்நிலை இருப்பினைக் காப்பாற்றும் அறம் சார்ந்த பொறுப்பு எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுவரை எமது விடுதலைக்காக நாமே போராடினோம். இனி ஒடுக்கப்பட்ட சர்வதேச மக்களும், மானுட நேசிப்பாளர்களும் எம்முடன் அணிசேரத் தயாராகுகி றார்கள். திறக்கப்படும் வாசல்களுடாக வரும் நேர்மையாளர்களையும் ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வாளர்களையும் உள்வாங்கிக் கொள்வோம்

இதயச்சந்திரன்

ஈழமுரசு (11.04.2009)

Comments