ராஜபக்ஷேவின் அடுத்த திட்டம்...

''இரண்டே நாட்களில் 3 ஆயிரம் தமிழர்களைக் கொன்றிருக்கிறீர்கள்?'' என்று தமிழ் எம்.பி. இலங்கை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறார். ''உறுப்பினர், சபையில் தவறான தகவலைத் தருகிறார். 3,000 பேர் இறந்ததை அவர் போய்ப் பார்த்தாரா?'' என்று அமைச்சர் கேட்கிறார். சிங்கள எம்.பி-க்கள் சிரிக் கிறார்கள்.

எழுகிறார் இன்னொரு தமிழ் எம்.பி, ''பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் மக்களைக் குறி பார்த்துக்

கொல்கிறது சிங்கள ராணுவம்'' என்று பதறுகிறார். உடன் எழும் இன்னொரு அமைச்சர், ''பதுங்கு குழியில் இருக்கும் பிரபாகரன் உங்களுக்கு இதைச் சொன்னாரா?'' என்று கேட்டதும், சபையில் பலத்த கைத்தட்டல். தமிழர்களின் ரத்தத்தைக் குற்றாலச் சாரலாகக் குளித்து மகிழும் சிங்கள இனவாத அரசின் ஆளுமையில் சிக்கித் தவிக்கும் சொந்தங்களைக் காப்பாற்ற எதுவும் நடக்க வில்லை.

இந்த ஆண்டு விடியும்போது தொடங்கி, கடந்த வாரம் வரை மட்டும் 4 ஆயிரத்து 795 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். நடுக்காட்டில், நட்ட நடு ரோட்டில் காயத்துடன் பெரும் அலறலுடன் கிடக்கிறான் தமிழன். சத்துக்கேற்ப மூன்று அல்லது நான்கு நாட்கள் கத்திக்கொண்டே கிடக்கும் உயிர்ச்சடலங்களைக் காப்பாற்ற ஐ.நா-வும் இல்லை. செஞ்சிலுவையும் இல்லை. அவர்கள் கும்பிடும் கடவுளும் இல்லை.

முல்லைத்தீவு காட்டு மரங்களுக்குள் டென்ட் பரப்பி, கையிருப்பில் இருக்கும் அரிசியைக் காய்ச்சிக் குடித்த வாழ்க்கையாவது நிரந்தரமானதாக இருந்தால் பரவாயில்லை என்று நினைத்தார்கள் மக்கள். ஆனால், அவர்களைக் கடந்த 4, 5 தேதிகளில் ரசயான வெடிகுண்டுகளை வீசி சின்னாபின்னப்படுத்தியிருக்கிறார்கள். அன்று மட்டும் 2,000 பேர் இறக்க... வெளியில் ஓடிவந்தார்கள் மக்கள். சுமார் 60,000 பேர் வந்திருப்பதாகச் சொல்கிறார் அமைச்சர். மொத்தம் இருந்தது 3 லட்சம் பேர். வெளியில் வந்தவர்களில் வயதுக்கு வந்த பெண்கள் மட்டும் சுமார் 600 பேர் தனி யாகப் பிரிக்கப்பட்டு, அனுராதபுரம் பகுதிக்கு அழைத் துச் செல்லப்பட்டுள்ளனராம். இளைஞர்கள் ஆயிரம் பேர் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களது கதி என்ன என்பது அனைவருக்கும் தெரியும். சிங்களத்தில் தேசியத் தொழிலாக இப்போது மாறிவிட்ட கொலையும், கற்பழிப்பும்தான்!

''எங்களோட டென்ட்டை விட்டு மூன்று நாளுக்கு முன்னாடி இங்க வந்தோம். கட்டியிருந்த பாவாடை சட்டையோடு தண்ணிக்குள் நீந்தி வந்தேன். மாற்றுத் துணியில்லை. அங்கயே குண்டு சத்தம் இருந்ததால ரெண்டு நாளா பங்கருக்குள் இருந்தோம். அதனால சாப்பிடலை. இங்க வந்து மூணு நாளாச்சி. சாப்பிட எதுவும் தரல. குடிக்கத் தண்ணி இல்ல. சேறும் சகதியுமான துணியோடுதான் இங்கே இருக்கேன். எங்க அப்பா, அம்மா எங்க இருக்காங்கன்னு தெரியல!'' என்று ஒரு பெண் வாய்க்குள் முனகுகிறார். 40 வயது இருக்கும் அவருக்கு. 'எவ்வளவு தூரம் நடந்து வந்தீர்கள்?' என்று நிருபர் கேட்கிறார். இது அவரது காதுக்குக் கேட்கவில்லை. அடைத்துவிட்டது காது. கண்ணில் மேல் இமை எழும்ப நினைக்கிறது. முடியவில்லை. உதட்டுக்கு வெளியே நாக்கைக் கொண்டுவந்து ஈரப்படுத்த முயற்சிக்கிறார். நாவிலும் ஈரம் இல்லை. கையில், காலில் காயங்கள் இல்லை. ஆனாலும், அவரால் அசைய முடியவில்லை. இவரைப் போலத்தான் ஆயிரக்கணக்கான மக்கள் கொட்டடியில் கிடக்கிறார்கள்.

யார் சொன்னாலும் கேட்கும் நிலையில் இல்லை இலங்கை அரசாங்கம். ஐ.நா., அமெரிக்காவில் தொடங்கி... இந்தியா, சீனா தவிர, அனைத்து நாடுகளும் கடுங் கண்டனம் செலுத்திய பிறகும் ராஜபக்ஷே நிறுத்துவதாக இல்லை. ஜெயவர்த்தனா காலத்தைவிடக் கோரமான நிலை என்கிறார்கள் இலங்கைப் பத்திரிகையாளர் களே!

''எங்கள் நாடு ராணுவமயமாகிக்கொண்டு வருகிறது. ஜனநாயகம், குடியாட்சி நெறிமுறைகள் அனைத்தையும் நொறுக்கிவிட்டார் ராஜபக்ஷே. தமிழர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு, சிங்கள தேசமாக இலங்கையை அறிவிக்கத் திட்டமிடுகிறார். இதற்கு எதிராக இருக்கும் சிங்கள சக்திகளையும் நசுக்க ஆரம்பித்துவிட்டார். ஒரே ஒரு உதாரணம், யாரெல்லாம் அவரது ஆட்சி அமைக்க உதவினார்களோ, அவர்கள் அனைவரையும் ஒழித்துவிட்டார். மகிந்தா ஆட்சி அமைக்க ஜனதா விமுக்தி பெரமுனா உதவி செய்தது. அந்தக் கட்சியை இரண்டாக உடைத்தார். அவரை அரசியலுக்குக் கொண்டுவந்த சந்திரிகா குடியிருக்க அரசாங்க வீடுகூட இவர் தரவில்லை. தனது நண்பனான மங்கள சமரவீராவை நாட்டை விட்டு விரட்டினார். மகிந்தாவின் அரசாங்கத்தை உருவாக்க உழைத்த ஸ்ரீபதி சூரியாச்சியையே கைது செய்து விலங்கு போட்டார். பண்டாரநாயகா வம்சத்தினர் யாரும் அரசாங்கத்தில் இல்லாமல் பார்த்துக்கொண்டார். அதாவது உடனிருந்து உருவாக்கியவர்கள் யாரும் இல்லை.

இப்போது இருப்பதெல்லாம் அவரது தம்பிகள், குடும்பத்தினர் மட்டும்தான். யாரெல்லாம் இவருக்கு எதிராக இருந்தார்களோ அவர்கள்தான் இப்போது உடன் இருக்கிறார்கள். கோத்தபய ராஜபக்ஷே, சரத் ஃபொன்சேகா என இருவரும் அமெரிக்க பிரஜைகள். மகிந்தாவைச் சுற்றியிருக்கும் இன்னும் முக்கியமான நான்கு பேரும் வெளிநாட்டுப் பிரஜைகள். இவர்களை வைத்து சிங்கள பேரினவாத ஆட்சியை அமைப்பதுதான் மகிந்தாவின் திட்டம்'' என்று அங்குள்ள பத்திரிகையாளர்கள் சொல் கிறார்கள்.

'இலங்கை செய்யும் அனைத்துக் காரியங்களுக்கும் எங்களது ஆதரவுள்ளது' என்று சீனா அறிவித்திருப்பதற்கும், ஐ.நா-வில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, இலங்கைக்கு எதிரான நடவடிக்கையை அது தடுத்ததற்குமான பின்னணி இந்தியாவுக்கு எதிரானது. எதிர்காலத்தில் ஒரு பேரழிவை இந்தியாவுக்கும் சேர்த்து செய்ய ஆரம்பித்திருக்கிறார் மகிந்தா ராஜபக்ஷே. அதன் விளைவுகள் சில லட்சம் தமிழர்களை மட்டுமல்ல, பல கோடி இந்தியர்களையும் பாதிக்கும் நாள் நெருங்கிக்கொண்டு இருக்கிறது!

நன்றி:விகடன்

Comments