தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஒரு தலைப்பட்சமாக அறிவித்திருக்கும் போர் நிறுத்தத்தை திட்டவட்டமாக நிராகரித்திருக்கும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, "போர் நிறுத்தத்துக்கு எந்தவொரு தேவையும் இல்லை" எனவும், "விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டும்" எனவும் தெரிவித்திருக்கின்றார்.
'ஸ்கை' காணொலி நிறுவனத்தின் ஆசிய செய்தியாளர் அலெக்ஸ் க்ராஃபோட் விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்த அறிவிப்பு தொடர்பாக கேள்வி எழுப்பிய போது இவ்வாறு தெரிவித்த கோதாபாய, "அவர்கள் (விடுதலைப் புலிகள்) எம்முடன் சண்டையிடவில்லை; எம்மிடம் இருந்து ஓடிக்கொண்டிருக்கின்றனர்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.
தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அனைத்துலக அமைப்புக்கள் பலவும் இரு தரப்புக்களையும் தொடர்ச்சியாகக் கோரி வரும் நிலையில், விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பு வெளியாகி இரண்டு மணி நேரத்துக்குள் கோத்தபாயவின் இந்த நிராகரிப்பு வெளியாகியிருக்கின்றது.
இருந்த போதிலும், "பாதுகாப்பு வலய" பகுதி மீதான வான் தாக்குதல்களை சிறிலங்கா வான்படை இன்று ஞாயிற்றுக்கிழமை தீவிரப்படுத்தியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments