தரை, கடல் வழியாக பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைய படையினர் கடும் முயற்சி: பலமுனை முன்நகர்வை எதிர்த்து அதிகாலை முதல் புலிகள் கடும் சமர்
பாதுகாப்பு வலயத்தை சுற்றிவளைத்து முழு அளவிலான பாரிய தாக்குதல் ஒன்றுக்கான நகர்வுகளை சிறிலங்கா படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமையே மேற்கொண்டிருந்தனர்.
பெருமளவு படையினரும் ஆயுத தளபாடங்கள் மற்றும் இராணுவ வாகனங்களும் முன்னணி நிலைகளுக்கு நேற்றே நகர்த்தப்பட்டதால் பாரிய தாக்குதல் நடவடிக்கை ஒன்றை படையினர் இன்று காலை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலை 3:45 நிமிடமளவில் இரட்டைவாய்க்கால் பகுதியை நோக்கிய முன்நகர்வினை படையினர் செறிவான எறிகணைத் தாக்குதல்களுக்கு மத்தியில் தொடங்கியுள்ளனர்.
இந்தப் பகுதியில் நிலைகொண்டுள்ள விடுதலைப் புலிகளும் கடுமையான எதிர்த்தாக்குதலைத் தொடுத்துள்ளதையடுத்து அப்பகுதியில் கடும் சமர் மூண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தரைவழியாக பலமுனைகளில் தாக்குதல் நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொள்ளும் அதேவேளையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் தரையிறக்கம் ஒன்றை மேற்கொண்டு தாக்குதல் நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கான திட்டத்துடன் கடற்படையினர் தாக்குதல் நடவடிக்கையினை தொடங்கியிருப்பதால் முல்லைத்தீவு கடற்பரப்பும் இன்று அதிகாலை தொடக்கம் போர்க்களமாகியிருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் கரைப்பகுதியை நோக்கி அடிக்கடி வரும் சிறிலங்கா கடற்படை கப்பல்கள் செறிவான தாக்குதல்களை மேற்கொள்ளும் அதேவேளையில் இராணுவத்தினரை ஏற்றிய கடற்படை கப்பல்களும் மீன்பிடிப் படகுகளும் கடலில் நடமாடுவதையும் காணக்கூடியதாகவுள்ளது.
முள்ளிவாய்கால் கடற்கரைப் பகுதியில் தொடர்ச்சியாக செறிவான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு அங்கு விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தை அகற்றிவிட்டு தரை இறக்கம் ஒன்றை மேற்கொண்டால் கடலில் தயாராகவுள்ள கப்பல்களில் உள்ள இராணுவத்தினரை அங்கு கொண்டுவந்து இறக்குவதற்கு படைத்தரப்பு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகின்றது.
திருகோணமலை கடற்படைத்தளத்தில் இருந்து புறப்பட்ட 'டோறா'க்கள் பலமான பாதுகாப்பை வழங்க, கூகர் மற்றும் மீன்பிடிப்படகுகளில் படையினர் வந்து தரையிறக்கத்தை மேற்கொள்ளும் திட்டத்துடனேயே கடற்படையினர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவுப் பகுதியில் இருந்தே படையினர் படகுகளில் புறப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவற்றில் பெரும்பாலான படகுகள் கடற்றொழிலாளர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்டவையாகும்.
தரையிறக்கத்துக்கான பாரிய முயற்சிகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்ற போதும் கடற்புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதல்களால் கடற்படையினரின் முயற்சி வெற்றிபெறவில்லை.
கடற்படையினருக்கு உதவியாக செறிவான எறிகணைத் தாக்குதல்களும், வான் படையினரின் வானூர்திகள் கடுமையான குண்டுத்தாக்குதல்களையும் மேற்கொள்கின்ற போதிலும், கடற்படையினரின் தரையிறக்க முயற்சி வெற்றிபெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளையில் முல்லைத்தீவில் இருந்து வட்டுவாகல் அரணை உடைத்துக்கொண்டு பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிக்கும் முயற்சியிலும் படையினர் தமது உச்சகட்டப் பலத்தைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பகுதியிலும் கடும் மோதல் இடம்பெற்று வருகின்றது.
இரட்டைவாய்க்கால் பகுதியை நோக்கிய படையினரின் நகர்வு அதிகாலையிலேயே தொடங்கப்பட்டுவிட்டது. இந்தப்பகுதிகளில் ஏற்கனவே கொண்டுசெல்லப்பட்ட மக்களை படையினர் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வலைஞர்மடம் மற்றும் பொக்கணை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முன்நகர்வு நடவடிக்கைகளின் போதும் மக்களை படையினர் மனித கேடயங்களாகப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதில் காயமடைந்த பலர் முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
சுமார் 12 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ள பாதுகாப்பு வலயப் பகுதியில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் மிகவும் அடர்த்தியாக உள்ளனர். இந்தப் பகுதி மீது படையினர் பாரிய தாக்குதலை தொடங்கியிருப்பதால் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்க நேரலாம் என மனித உரிமை அமைப்புக்கள் பலவும் எச்சரித்திருக்கின்றன.
Comments