"சரியான நேரத்தில் சரியான முடிவை தமிழக மக்கள் எடுப்பர்": காங்கிரஸ் கூட்டணி தொடர்பான தமிழக நாளேட்டின் கேள்விக்கு நடேசன் நம்பிக்கை
நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த 'ஜனசக்தி' நாளேட்டுக்கு பா.நடேசன் வழங்கிய நேர்காணலின் முழு விபரம்:
போர் நிறுத்தத்திற்காக ஒட்டுமொத்த தமிழகமும் மத்திய அரசுக்கு குரல் கொடுத்தும் எதுவும் நடக்கவில்லையே?... 21 ஆம் நூற்றாண்டின் படுமோசமான மனித அவலம் ஈழ மண்ணில் சிங்கள அரசினால் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருந்தும் யாராலும் தடுக்க முடியாமல் போனதற்கு என்ன காரணம்?...
பல காரணங்கள் உள்ளன.
தடுக்கும் வல்லமை படைத்தவர்களாகவும், தார்மீகப் பொறுப்பு உடையவர்களாகவும் இருப்போர் அதனை உரிய முறையில் தடுக்கத் தவறியது ஒரு காரணம். நியாயமான அரசியல் அபிலாசைகளை அடைவதற்கான தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தை, இந்த உலகம் "பயங்கரவாதம்" எனச் சித்திரித்தது அடுத்த காரணம். "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற போர்வையில் தமிழர்களைக் கொன்றழிக்கும் சிறிலங்கா அரசின் படைகளுக்கு இந்த உலகமே திரண்டு உதவிகள் செய்வது இன்னொரு காரணம். தனது தென் கோடியில் தனக்குப் பலமான பாதுகாப்பாய் - உண்மையான நண்பர்களாய் - எப்போதும் இருக்கின்ற தமிழீழத் தமிழர்களை இந்தியா அவ்வாறு கருதத் தவறியது இவற்றுள் முக்கிய காரணம்.
இப்போது நடந்து வரும் போரில் இதுவரையில் மொத்தம் எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்?... வீடு இழந்தவர்கள் எத்தனை பேர்?... காயம் அடைந்தவர்கள் எவ்வளவு பேர்?...
நாங்கள் சொல்லுகின்ற தகவல்களை இப்போதைக்கு ஒரு பக்கத்தில் வைத்து விடுவோம். பக்க சார்பற்ற விதத்தில் ஐ.நா. சபையினால் சேகரிக்கப்பட்ட தகவல்கள் - இப்போது அவர்களுக்குத் தெரியாமலேயே வெளியாகிவிட்டன. இந்த தகவல்களின் அடிப்படையில் - கடந்த ஜனவரி 20 ஆம் நாளில் இருந்து மார்ச் 7 ஆம் நாள் வரையில் வன்னிப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டும் 2,683 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 7,241 தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
நாம் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் - ஜனவரி முதல் நாளிலிருந்து மார்ச் 31 ஆம் நாள் வரை வன்னியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 4,001. மூன்றரை இலட்சம் வரையான மக்கள் - தமது வாழ்விடங்களை, வீடுகளை, தொழில்களை, கல்வியை, வாழ்க்கையை, எல்லாவற்றையுமே இழந்துவிட்டு - வெறும் கடற்கரை மணலில், வெறும் கூடாரங்களுக்குள் வாழ வைக்கப்பட்டுள்ளார்கள். ஒரு மனிதன் வாழுவதற்கு மிக மிக அடிப்படையான விடயங்களான உணவு, உடை, உறக்கம், சுகாதார வசதி, மருத்துவம், எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பும் நிம்மதியும் - எதுவுமே இந்த மக்களுக்கு இல்லை.
உலக நாடுகள் பலவும் வலியுறுத்திய பிறகும் ஏன் பேச்சுவார்த்தைக்கு சிறிலங்கா அரசு முன்வரவில்லை?...
அனைத்துலக நாடுகளும் சரி, இந்தியாவும் சரி உரிய முறையில் சிறிலங்கா மீது அழுத்தங்களைப் போட்டனவா, அல்லது போரை நிறுத்திவிட்டுப் பேச்சுக்களுக்கு வரக் கூடிய சூழ்நிலைக்கள் சிறிலங்கா அரசை உரிய முறையில் தள்ளினவா என்பதை இதைப் படிக்கின்ற மக்களின் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்.
போரில் பெரிய அளவில் புலிகள் தாக்குதல் நடத்தாமல் பின்னோக்கி போய் இப்போது சிறு பகுதியில் மட்டுமே இருக்கிறார்களே..?
போர்க்களத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது உண்மை தான். போரியல் பரிமாணத்தில் நோக்கும் போது - கட்டுப்பாட்டு நிலப்பரப்பு சுருங்கிவிட்டது என்பதும் உண்மை தான்.
எமது போராட்டத்தின் காரணங்களையும், அடிப்படைகளையும், வரலாற்றையும் சரிவர உணர்ந்து கொள்ளாத, இந்தியா உட்பட, பல உலக நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுவதாலேயே, சிறிலங்கா படைகளால் இவ்வாறு முன்னேறி வர முடிகின்றது. அது தான் உண்மை.
ஆனால், சுதந்திர தமிழீழத்தை நோக்கிய எமது போராட்டம், உலக அரங்கில் - அனைத்துலக தமிழ்ச் சமூகத்தின் ஏகோபித்த ஆதரவை என்றுமில்லாத அளவுக்கு இப்போது பெற்றிருக்கின்றது. கோடிக்கணக்கான தமிழர்கள், எமது தேசத்தின் கொடிகளோடு உலக வீதிகளிலே இறங்கி எங்கள் உரிமைக்குரலை இப்போது எழுப்பி வருகின்றார்கள். உலகத்தின் மனச்சாட்சியை உலுக்கி, அதன் மனத்தை வெல்லும் பெரும் போராட்டத்தில் நாங்கள் இப்போது மாபெரும் வெற்றியை பெற்று வருகின்றோம்.
உண்மையில் எமது போராட்டம் நீங்கள் கூறுவது போல சிறு பகுதிக்குள் சுருங்கிவிடவில்லை; இப்போது தான் அது புதிய அரசியல் பரிமாணங்களைப் பெற்ற உலகப் பரப்பு எங்கும் என்றுமில்லாத அளவுக்கு வியாபித்து வருகின்றது.
பொதுமக்கள் மீது தற்கொலைத் தாக்குதல் என்ற செய்தி, முஸ்லிம்கள் பங்கேற்ற மீலாது விழா ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது பற்றி...?
ஒரு விடயத்தை நான் தெளிவாகச் சொல்லிவிடுகின்றேன். பொதுமக்களைக் கொல்வதனை இலக்காகக் கொண்டு எந்தவொரு கரும்புலித் தாக்குதல் நடவடிக்கையையும் எமது இயக்கம் எப்போதுமே நடத்தியது கிடையாது. அது எமது கொள்கையும் அல்ல.
பாதுகாப்பு பிரதேசங்கள் எனப் பிரகடனப்படுத்திய இடங்களில் கூட தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்களே?...
சிறிலங்கா அரசாங்கத்தின் கொடூரமான தமிழினப் படுகொலைத் திட்டத்தையே இது அம்பலப்படுத்துகின்றது அல்லவா?..
அதுவாகவே ஒரு இனப்படுகொலை யுத்தத்தை நடாத்தி, தமது வாழ்விடங்களிலிருந்து மக்களை விரட்டி, பின்னர் அந்த மக்களை தானே "பாதுகாப்பு வலயம்" எனக் குறிப்பிட்டு ஒரு பிரதேசத்துக்குள் அடைக்கலம் புக வைத்துவிட்டு - அந்தப் பிரதேசத்தை ஒரு கொலைப் பொறியாக்கி, பீரங்கிகளாலும் வானூர்திகளாலும் குண்டுகளை வீசி தமிழர்களை வஞ்சகமாக கொல்கின்றது சிறிலங்கா அரசு.
சிறிலங்கா அரசு இவ்வாறு செய்வதில் எமக்கு எவ்வித ஆச்சிரியமும் இல்லை. ஆனால், இந்தக் கோரமான இன அழிப்புப் போருக்கு இந்தியா உட்பட பல உலக நாடுகள் அங்கீகாரத்தையும், ஆதரவையும் வழங்குகின்றன என்பதுதான் எமக்கு கவலையைத் தருகின்ற விடயமாகும்.
புலிகள் தலைவர் பிரபாகரன் ஈழத்தில்தான் இருக்கிறாரா?... அவர் அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிட்டார் என்று செய்திகள் வருகின்றனவே?...
எமது தலைவரைப் பற்றி வெளிவருகின்ற அவ்வாறான செய்திகள் எல்லாம் வதந்திகளே. அவர் இங்கே எமது மக்களோடு வாழ்ந்த படியே தான் இந்தப் போரையும், போராட்டத்தையும் வழிநடத்திக்கொண்டிருக்கின்றார்.
உண்மையில் பிரபாகரன் அவர்களின் தற்போதைய மனநிலை என்ன?... தமிழக மக்களுக்கு அவர் என்ன சொல்ல விரும்புகிறார்?...
அவர் மிகுந்த உறுதியோடு போராட்டத்தை வழி நடாத்திக்கொண்டிருக்கின்றார். நெருக்கடிகள் சூழும் போது அசாதாரணமான உறுதியைப் பெறுவதும், கூடுதல் தன்னம்பிக்கையைப் பெறுவதுமே அவரது இயல்பு.
தமிழக மக்களின் மீது அவர் எப்போதுமே பெரும் மதிப்பும் பேரன்பும் வைத்துள்ர். தமிழக மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எழுச்சி பெற்று இப்போது எமக்கு ஆதரவாய் இருப்பது, அவருக்கு மட்டுமல்ல, எமது போராளிகளுக்கும், எமது மக்களுக்கும் கூட நம்பிக்கையையும் துணிவையும் அளித்திருக்கின்றது.
உலகத்தில் எங்கும் நடக்காத அளவுக்கு செய்தியாளர்களை சிறிலங்கா அரசு கொலை செய்து வருகிறதே. ஊடகங்களையும் அவர்கள் முடக்கி போட்டிருக்கிறார்களே..?
பேச்சு சுதந்திரத்தையும், ஊடகச் சுதந்திரத்தையும் வலியுத்துகின்ற அதேவேளையில், சிறிலங்கா அரசுக்கு முண்டு கொடுத்தும் நிற்கின்ற உலக நாடுகளிடம் கேட்க வேண்டிய கேள்வி இது.
"நாட்டின் இறையாண்மை" என்ற போர்வையில் ஊடகவியலாளர்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் இந்த அநீதியான நடவடிக்கை, தமிழின அழிப்புப் போரின் இன்னுமொரு பரிமாணமே அல்லாமல் வேறொன்றும் அல்ல.
வித்தியாதரனை சிறையில் அடைத்ததும், ஏனைய தமிழ் ஊடகத்துறையினரை நேரடியாகவே மிரட்டிப் பணிய வைத்ததும், ஈழத் தமிழர்கள் அவலங்களைச் சொல்லும் தமிழகச் சஞ்சிகைகளை விநியோகித்ததற்காக 'பூபாலசிங்கம் புத்தகசாலை' உரிமையாளரை சிறையில் அடைத்ததும் - எல்லாமே, தமிழர் படுகொலை பற்றிய உண்மைகள் வெளியே வராமல் தடுப்பதற்காகச் செய்யப்பட்ட ஏதேச்சதிகார நடவடிக்கைகளே ஆகும்.
"சகோதர யுத்தம்" என்று திரும்ப திரும்ப முதல்வர் கருணாநிதி சொல்லிக்கொண்டிருக்கிறாரே... சகோதர யுத்தம் நடத்தப்படாமல் இருந்தால் ஈழம் எப்போதோ கிடைத்திருக்கும் என்கிறாரே...?
80-களின் நடுப்பகுதியில் தமிழர் போராட்ட இயக்கங்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் ஒரு தவறான கையாடலை இந்தியா மேற்கொண்டது என்பதும், அதன் விளைவாக - "விடுதலைக்காக போராடுகின்றோம்" என வந்தவர்கள் பலர் ஈழத்தையே கைவிட்டுத் துரோகிகளாக மாறிப் போனதும், அதன் பின்னர் - இந்தியப் படை தமிழீழத்தில் இருந்த காலத்தில் அந்த துரோகிகள், அதுவரை சிங்களப் படைகளே செய்திருக்காத அளவுக்குக் கொடூரமாகத் தமிழ் மக்களையே கொன்று குவித்த வரலாறும், கலைஞர் ஐயா அவர்கள் அறியாதது அல்ல.
பிரபாகரன் அவர்கள் எப்போதோ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஈழத்தில் நான் சர்வாதிகாரியாக இருப்பேன் என்று சொல்லியிருப்பதை சுட்டிக்காட்டி, அப்போதிருந்தே புலிகள் மீதான எங்கள் நம்பிக்கை பொய்த்து விட்டது என்று கருணாநிதி சொல்லியிருக்கிறாரே...?
எங்கள் தலைவர் அப்படிச் சொன்னதான நினைவுகள் எதுவும் எனக்கு இல்லை. அப்படிச் சொல்லியிருந்தாலும் அவர் தவறான ஒரு நோக்கத்தோடு அப்படிக் குறிப்பிட்டிருப்பார் என நான் நம்பவில்லை. அப்படியான பத்திரிகைப் பேட்டி எதுவும் இருந்தால், அதை எனக்குக் காட்டுவீர்களானால் எப்படியான கேள்விக்கு, எவ்வாறான சூழலில், என்ன நோக்கத்தோடு அவர் அப்படி சொல்லியிருப்பார் என்பதை வைத்து உங்கள் கேள்விக்கு நான் பதிலளிக்க முடியும்.
ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து முத்துக்குமார், ரவிச்சந்திரன், அமரேசன், ரவி, மலேசியா ரவி என வரிசையாக தீக்குளிப்புகள் நடக்கின்றன. உங்கள் கருத்து?
முதற்கண் - தமிழீழ மக்களின் சுதந்திரத்திற்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்த எல்லோருக்கும் தமிழீழ மக்களின் சார்பிலும், எமது இயக்கத்தின் சார்பிலும் நான் தலைசாய்ந்து வணக்கம் செலுத்துகின்றேன். தம்மையே வருத்தி அவர்கள் செய்த அந்தத் தியாகங்கள் மனித மொழிகளால் மதிப்பளிக்க முடியாத அளவுக்கு ஒப்பற்றவை.
ஆனால் - உயிர்கள் உன்னதமானவை. அவை மிகப் பெறுமதியானவை. உயிர்கள் விலையாகக் கொடுக்கப்படுகின்ற போது அவற்றுக்கு நிகரான விளைவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால், இந்தத் தியாகங்களுக்கு மதிப்பளித்தும், தமிழக மக்களின் ஏகோபித்த உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் - சரியான முடிவுகளை எடுப்பதற்கு இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து தவறுகின்றனர் என்பது தான் எமக்கு வேதனையை அளிக்கின்றது.
"காலம் கடந்த நீதி, அநீதிக்கு சமமானது" என்று முத்துகுமார் தனது இறுதி சாசனத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இன்னும் காலத்தை தாழ்த்திகொண்டு தானே இருக்கிறது இந்திய அரசு?
முத்துக்குமாரும் நீங்களும் இந்தியாவின் குடிமக்கள். இந்தியாவைப் பற்றி உங்களில் ஒருவர் கேட்ட கேள்விக்கு, இன்னொருவர் பதில் சொல்லிவிட்டீர்கள். இதில் இனி நான் சொல்லுவதற்கு எதுவுமே இல்லை.
புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்று சொல்லப்படும் குற்றச்சாட்டு பற்றி?
தமது சொந்த வாழ்விடங்களில் அமைதியுடனும், பாதுகாப்புடனும் வாழ வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பம். அவர்களது நிலத்தின் மீது ஒரு படையெடுப்பை நடத்தி, அந்த மக்களை விரட்டியடித்துவிட்டு, வளமான அவர்களது நிலங்களை நிரந்தரமாக ஆக்கிரமித்து வைத்து, நாசமாக்கி, சிங்களவர்களைக் குடியேற்றி, சிங்கள மயமாக்கி, தமிழர்களின் தேசியத் தன்மையைச் சிதைக்கவே முனைகின்றது சிறிலங்கா அரசு.
அதற்காகவே மக்களை நாம் மனிதக் கேடயங்களாக வைத்திருக்கின்றோம் என்று அது கதைகளை உருவாக்கி, இந்த மண்ணிலிருந்து அனைத்துலக ஆதரவுடன் தமிழர்களை வெளியேற்றி நிரந்தர அகதிகளாக தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்க அது முனைகின்றது.
"மனிதக் கேடயம்" என்ற இந்த வார்த்தைப் பிரயோகத்திற்குப் பின்னால் சிங்களப் பேரினவாதம் புதைத்து வைத்திருக்கும் ஆழமான அரசியல் சதியையும், இந்த சதி 61 ஆண்டு கால வரலாற்றில் பல பரிமாணங்களை எடுத்துள்ளது என்பதையும், அனைத்துலக சமூகம் மட்டுமன்றி தமிழினமும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
எமது மக்களை, அவர்களது போராளிகளான நாங்கள், எமது கேடயங்களாக வைத்திருக்க வேண்டிய தேவை தான் என்ன?
இதுகாலம் வரையில் எதிர்நிலையில் இருந்த ஜெயலலிதா இப்போது மனம் மாறி உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். ஈழத் தமிழர்களுக்காக அ.தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபா நிதியும் திரட்டப்பட்டிருக்கின்றது. இலங்கைக்குள்ளேயே தமிழர்களுக்கு தனி ஆட்சி வேண்டும் என்பதை வரவேற்கிறோம் என ஜெயலலிதா கூறுகின்றார். உங்கள் கருத்து?...
தமிழீழ மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளையும், அவற்றை அடைவதற்கு உரிய தீர்வு என்ன என்பதையும் அவர் இப்போது புரிந்து வருகின்றார் என்பதையே இது காட்டுகின்றது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு அவர் அளிக்கும் மதிப்பாகவும் இதனை நாம் கருத முடியும்.
எம்.ஜி.ஆர் அவர்கள் வாழ்ந்த காலத்தில் எமது போராட்டத்தின் ஒரு நிபந்தனையற்ற காவலனாக விளங்கினார். அவர் உருவாக்கி வளர்த்த அந்த மரபு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இப்போது மீண்டும் உயிர்ப்புப் பெற்று தொடருகின்றது என்றே நாம் கருதுகின்றோம். தமிழீழ மக்களுக்கான அவர்களது இந்த ஆதரவு நிலை இனி எப்போதும் மங்காது நிலைத்து இருக்க வேண்டும் என்பதே தமிழீழ மக்களின் விருப்பம் ஆகும்.
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாய் இருப்பது தொடர்பாக தான் பெருமைப்படுவதாக வைகோ அவர்கள் அண்மையில் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஈழத் தமிழர்களுக்கு மிகுந்த ஆதரவாய் உள்ளார்கள். உங்கள் கருத்து?
வைகோ அவர்கள் எமது போராட்டத்தின் சலசலப்பற்ற ஒரு துணைவனாக எப்போதுமே இருந்து வருகின்றார். தமிழீழ மக்களின் போராட்டம் தொடர்பான ஒரு தெளிவான, ஆழமான பரிந்துணர்வு அவருக்கு எப்போதும் இருக்கின்றது. அவரை எமது நண்பனாகப் பெற்றதற்காக நாங்களும் பெருமைப்படுகின்றோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவர்கள் எல்லோருமே தமிழீழ மக்களின் அவலங்கள் கண்டு நேர்மையாகவே துடிக்கின்றவர்கள். ஈழத் தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளைப் பெற்று, தம்மைத் தாமே ஆளும் சூழல் பிறக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியுடையவர்கள். இவ்வாறான அரசியல் தலைவர்களது ஆதரவு தான் தமிழீழ மக்களுக்கு நிம்மதியையும், எதிர்காலம் பற்றிய ஒரு நம்பிக்கையையம் தருகின்றது.
சிறிலங்காவுக்கு இராணுவ உதவிகளையும் தடவாளங்களையும் இந்திய அரசுதான் தந்து கொண்டிருக்கிறது என்று தொடந்து சொல்லப்பட்டு வந்த போது இந்திய அரசு அதை மறுத்து வருகிறதே?
எமது போராட்டத்தை அழிப்பதற்காக இன்று நடந்து கொண்டிருக்கும் போரில் இந்தியா ஆற்றிய பங்கு மிகப் பெரியது என்று சிறிலங்கா அமைச்சர் ஒருவரே நாடாளுமன்றத்தில் சொல்லியிருக்கின்றார். அதுவே உங்கள் கேள்விக்கான பதிலாக அமைகின்றது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ஈழப் பிரச்சனை தமிழகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்கிற பேச்சு இருக்கிறது. ஆயுத உதவிகளை வழங்கி வரும் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி சேர்ந்திருக்கிறது. ஈழப் பிரச்சினையில் காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது. உங்கள் கருத்து என்ன?
தமிழகத்தின் 7 கோடி தமிழர்கள் தான் தமிழீழ மக்களின் பலம்; அவர்களே எமது நம்பிக்கை. தமிழீழ மக்களின் சுதந்திர வாழ்வே தமிழக மக்களின் முதன்மைச் சிந்தனையாகவும் இப்போது உள்ளது. அதற்காக - எந்த நேரத்தில் எதனைச் செய்ய வேண்டும் என்பதில் தமிழக மக்கள் மிகுந்த தெளிவாகவே இருக்கின்றார்கள். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை அவர்கள் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு எப்போதும் உண்டு.
ஈழத் தமிழர் பிரச்சனைக்கு நீங்கள் வைத்திருக்கும் அரசியல் தீர்வு தான் என்ன?
1985 ஆம் ஆண்டில், பூட்டான் தலைநகர் திம்புவில் முன்னெடுக்கப்பட்ட முதலாவது சமரச முயற்சியின் போது ஒட்டுமொத்த தமிழீழ மக்களின் சார்பாக - தமிழர் பிரச்சினை தீர்வின் அடிப்படைகளாக "திம்பு கோட்பாடு" முன்வைக்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் மத்தியத்துவத்தில் முன்வைக்கப்பட்ட இந்தக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு - தமிழர்களின் தன்னாட்சி உரிமையையும், தமிழர் தாயகத்தையும் அங்கீகரிக்கின்ற ஒரு நியாயமான அரசியல் தீர்வையே நாம் எதிர்பார்க்கின்றோம்.
Comments