ஈழத் தமிழின அழிவுக்கு திரிகோணமலை காரணமா?

இந்தியாவின் திரிகோணமலை மீதான மோகமும் பிராந்திய ஆக்கிரமிப்பு வெறியும் பலவித தந்திர நகர்வுகளுக்கு ஈழத் தமிழினம் பலியாகி முற்றாக அழிந்து கொண்டிருக்கிறது.

தமிழ் நாட்டு மக்களின் ஈழத் தமிழர் பற்றிய உணர்வலைக் கொந்தளிப்பையும்; புறந்தள்ளி வந்தது இந்திய மத்திய அரசு. ஈழத் தமிழின அழிப்பை நடத்தும் காங்கிரஸ் கட்சியின் இந்திய மத்திய அரசு இதுவரை பலமுறை அவமதிக்கப்பட்டு வரப்பட்ட தமிழர் தேசியக் கூட்டமைப்பு கூடக் கோபுரக் கலசமாக இப்போ அதன் கண்ணுக்குத் தெரிகிறது.

ஈழத் தமிழரின் அரசியல் தலைமைகள் போதிய அரசியல் தூர நோக்கோ அல்லது இராச தந்திர நகர்வுகளையோ செம்மையாகவும் உறுதியாகவும் செயற்படும் ஆற்றலோ இல்லாது இருப்பது தமிழினத்தின் சாபக் கேடே எனலாம். அகில இலங்கைத் தமிழக் காங்கிரஸின் காலத்தில் பெற்ற அனுபவத்தையும் பின்னடைவையும் அடுத்த நிலைக்குப் பயன் படுத்த நினைக்காது காட்டிக் கொடுப்போரின் பின்னால் அதன் தலைவர் திரு.ஜீ.ஜீ.பொன்னம்பலம் தாமும் காட்டிக் கொடுக்கும் அரசியலைத் தொடர்ந்தார்.

அன்றே அவர் தொடர்ந்தும் 50க்கு 50 என்ற அடிப்படையில் தமது அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்ந்திருந்தால், பண்டாக்களும் ஜயவர்த்தனாக்களும் நின்று யோசித்து தமிழர் என்ற ஒரு இனம் இலங்கைக்கு சொந்தமானவர்கள் என்ற நினைவைச் சிங்கள மக்களின் மனதில் வேரூன்றச் செய்திருக்கும். அடுத்து வந்த இந்திய மக்களுக்கு எதிரான சட்டங்களையும் நீதி மன்றங்களில் அன்றைய அரசமைப்பின் 29. பிரிவின் கீழ் தீர்வுகள் தேடியிருந்தால் பின்னர் பண்டாரநாயக்கா தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரத் துணிந்திருக்க மாட்டார்.

1956ல் தனிச் சிங்களச் சட்டம் இனப் பாகுபாடு காட்டுகிறது என நீதி மன்றுக்கு எடுத்துச் சென்றிருந்தால் அப்போதே சிங்கள இனவெறி அடியோடு சாய்ந்திருக்கும். முடிவில் 1960களில் தமிழ் அரச ஊழியர்கள் தமது அரசாங்க எழுது வினைஞர் சங்கம் என்ற தமிழ் தொழிற் சங்கம் மூலமாக நீதி மன்றத்துக்குத் தனிச் சிங்கள அரச மொழிச் சட்டம் இனப் பாகுபாடு உள்ளது என எடுத்துச் சென்றனர்.

அந்த வழக்கை விசாரணை செய்த கொழும்பு மாவட்ட நீதிபதி திரு.ஓ.எல்.:டி. கிறெற்ஸர் தனிச் சிங்கள அரச மொழிச் சட்டம் தவறானது எனத் தீர்ப்பளித்தார். அந்த வழக்கின் வாதியான திரு.செ.கோடீசுவரன் ஒரு அரச ஊழியர் அதனால் பிரித்தானியச் சட்டத்தின் கீழ் அரசியாரின் ஊழியர் அரசியார் மீது பிழை பிடித்து வழக்குத் தொடுக்க முடியாது என அரசுதரப்பு உயர் நீதி மன்றத்தில் வாதிட்டு வழக்கை வெற்றி கொண்டது.

வாந்தி எடுத்து வந்த பேர்களுக்கு இப்போ மக்களின் எதிர் கருத்துக் கணிப்புகள் ஏற்படுத்தும் பேதியும் சேர்ந்து கொண்டதால் ஈழத் தமிழர் தேசியக் கூட்டணியைக் கொண்டு கூட்டிச் சுத்தம் செய்யும் பணிக்காக அழைக்கப் பட்டுள்ளார்கள்

அப்போது அரசின் தேவைக்கு உதவியது பிரித்தானியக் குடியேற்ற அரசுச் சட்டம் என்பதை நாம் கவனிக்க வேண்டும். அதன் படியே மாவட்ட நீதி மன்றத் தீர்ப்பைச் செல்லுபடி அற்றது ஆக்கியது சிங்கள அரசு. ஆனாலும் தமிழ் அரச ஊழியர்கள் கோடீசுவரன் வழக்கை பிரித்தானிய பிரபுக்கள் சபைக்கு (Privy Council) மேன் முறையீடு செய்தது. நீண்ட கால பெரும் பொருட் செலவில் அரச ஊழியர் சார்பாக வாதாடிப் பெற்ற தீர்பின் பிரகாரம் கோடீசுவரன் வழக்கை இலங்கையின் மேல் நீதிமன்றம் விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. இதனை முன்னர் இருந்த சோல்பரி அரசமைப்புத் திட்ட வரைவின் கீழ் வெறும் அரச ஊழியர்களால் செய்ய முடிந்தது.

இத்தனைக்கும் ஈழத் தமிழர்களின் அரசில் கட்சித் தலைவர்களாக சி.சுந்தரலிங்கம்,.ஜீ.ஜீ. பொன்னம்பலம், செல்வநாயகம் திருச்செல்வம் எனப் பெரும் இராணி அப்புக்காத்து தரத்திலான பட்டாளமே இருந்துள்ளனர். இவர்களைத் தவிர அரசியலுக்குள் நுழைந்த அரை வேக்காடுகள் எல்லாம் சட்டக் கல்லூரி சென்று சட்டவாளர்களாகச் சத்தியப் பிரமாணம் எடுத்தும் இருந்தனர்.


இவர்கள் எல்லாரும் சோல்பரிப் பிரபுவையும் அவரது அரசுத் திட்டத்தையும் மேடைகளில் திட்டித் தீர்கத் தெரிந்ததே அல்லாது அதனைப் படித்துப் பயன் படுத்தும் பகுத்தறிவு கூட இல்லாமலே தமிழர் சமுதாயத்துக்குப் பாரமாய் வாழ்ந்து மடிந்தனர்.

ஈழத் தமிழர்களின் முன்னைய தலைவர்களின் வழியில் இன்று தமிழர் தேசியக் கூட்டணி போவது தமிழ் மக்களின் அழிவுக்கு துணை போவதாகவே இருக்கும்


இதற்கும் மேலாக 1965ல் டட்லி செல்வா ஒப்பந்தத்தின் மூலம் தேசிய அரசு அமைத்த பின்னர் தமிழ் அரச ஊழியர்கள் தொடுத்த வழக்கை இலண்டன் பிரபுக்கள் சபையில் தொடர்ந்தும் நடத்த வேண்டாம் எனவும் அதற்காக வழங்கி வந்த ஆதரவையும் தமிழ் அரசுக் கட்சி மீளப் பெற்றுக் கொண்டது. இந்த வழக்கின் முக்கியம் அறிந்து சிங்களம் அதனைத் தடுக்க முயன்ற வேளையிலும் தமிழ்த் தலைமை உணரத் தவறிவிட்டதையே அவர்களின் செயல் காட்டியது.

ஆனால் கோடீசுவரன் வழக்கு உயர் நீதி மன்றத்தில் விவாதிக்கும் நிலை ஏற்பட்டால் அரசுக்கு தோல்வி நிச்சயம் எனத் தெரிந்தே சிங்களம் அடுத்த பொதுத் தேர்தலை பயன்படுத்தியது. எனவே சோல்பரியின் அரசமைப்பை அவசரமக மாற்றிவிட வேண்டும் என்ற அவசியமும் அவசரமும் சிங்களத்துக்குத் தெரிந்து தன்னைத் தயார்ப் படுத்தியது. இலங்கையின் அரசமைப்பு குடியாட்சி முறைக்கு மாற்றும் முயற்சியில் ஸ்ரீமா அரசு முற்பட்ட வேளையிலும் கூட தமிழ்ச் சட்டவாதித் தலைவர்கள் தமக்கு இடையில் உள்ள முரண்பாடுகளை நீக்க முற்படாது பூசல்களை வளர்பதிலே கண்ணாக இருந்தனர்.

ஈழத் தமிழின அழிப்புக்குச் சாட்சியாக தமிழர் தேசிய முன்னணியின் துணையை நாடி நிற்பது எதுவும் புதுமை அல்ல

இந்த தலைவர்களை ஒன்றிணைந்து தமிழர் சார்பான உரிமைகளை முன்வைக்க வேண்டும் எனத் தமிழ் அரசாங்க எழுது வினைஞர் சங்கம் விடுத்த கோரிக்கைகளைத் தமிழரசுக் கட்சியினர் எள்ளி நகையாடியும் ஏனைய தமிழ்த் தலைவர்களை ஏளனம் செய்தும் தமிழர் சார்பான ஒருமித்த அரசமைப்புத் திட்ட வரைவுக்கான கோரிக்கைகளை வலியுறத்தாது விட்டனர். இது பற்றிய முழு விபரங்களையும் அன்றைய தினகரன் நிரூபரும் இன்று கனடாவில் வாழும் ஊடகவாளரும் பிரபல ஆய்வாளருமான திரு. திருச்செல்வம் தினகரன் ஞாயிறு இதழில் வெளிப்படுத்தினார்.

இதே தமிழ்த் தலைவர்கள் பின்னர் 1977 தேர்தல் தேவை கருதி வட்டுக் கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணி என இணைந்து கொண்டனர். கொள்கை ஏதும் இல்லாது தொடங்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி இன்று பட்ட மரமாகிக் கோடரிக் காம்பாகி விட்டது. அதன் வழியல் வந்த தமிழர் விடுதலைக் கூட்டணி இன்று என்ன செய்யக் காத்திருக்கிறது எனப் புரியவில்லை.

இந்திய அரசு 2007ல் பெற்றுக் கொண்ட திருகோணமலைக்கு விலையாக கிழக்கு மாகாணத் தமிழர் அழிப்புக்குத் துணை நின்று மகிந்தவின் சிங்கள இனவெறி ஆட்டத்துக்கு உதவியது. அதனால் மகிந்தவுக்காக தமிழருக்கும் முஸ்லீம்களுக்கும் சொந்தமான நிலங்களைப் பறித்துச் சிங்களக் குடியேற்றத்துக்கு உதவியது.

இன்று வன்னிப் பெரு நிலப் பரப்பை சுடுகாடாக்கி அங்குள்ள தமிழ் மற்றும் கிருஸ்தவ மக்களின் மிகப் பெரும் இன அழிப்புக்கும் அவலத்துக்கும் இந்தியா தனது படையினரைக் கொண்டே நடத்தும் ஈழத் தமிழின அழிப்புக்குச் சாட்சியாக தமிழர் தேசிய முன்னணியின் துணையை நாடி நிற்பது எதுவும் புதுமை அல்ல.

பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலையில் தமிழக மக்களின் ஈழத் தமிழ் இன உணர்வலையை எதிர் நோக்க முடியாது இந்திய ஆட்சியாளர் தவிக்கின்றனர். சினிமா பட இயக்குநர் சீமான் போன்றவர்களை வெளியே வந்து மேடைகளில் பேசவிடாது தடுப்பதில் இந்திய மாநில மத்திய ஆட்சியாளர்கள் கவனமாக உள்ளனர். ஈழத் தமிழர் பிரச்சனை தேர்தல் களத்தில் ஒலிக்கக் கூடாது என முதலில் தடை போட முயன்று தோல்வி கண்ட நிலையில் அரசுகள் தவிக்கின்றன.

ஈழத் தமிழர் ஆதரவுச் சக்திகளின் வீரியத்தை நீர்த்துப் போகச் செய்வதிலும் எல்லா அணிகளும் ஈழத் தமிழர் பற்றி ஒப்புக்குப் பாடும் நிலையை உருவாக்கி விட்டதில் ஆட்சியாளர்கள் வெற்றி கண்டு விட்டனர். ஆனாலும் எல்லாக் கட்சிகிளன் வெற்றி வாய்ப்புகளும் பாதிக் கிணறு தாண்டும் அளவில் இருப்பதே யதார்த்த உண்மையாக இருக்கிறது. இந்த நிலையில் இந்திய மத்திய கொள்கை வகுப்பாளருக்குப் பேதியெடுத்து விட்ட நிலை தெரிகிறது.

வாந்தி எடுத்து வந்த பேர்களுக்கு இப்போ மக்களின் எதிர் கருத்துக் கணிப்புகள் ஏற்படுத்தும் பேதியும் சேர்ந்து கொண்டதால் ஈழத் தமிழர் தேசியக் கூட்டணியைக் கொண்டு கூட்டிச் சுத்தம் செய்யும் பணிக்காக அழைக்கப் பட்டுள்ளார்கள். பல முறை உதாசீனப் படுத்தப் பட்ட பின்னர் பாதுகாப்புச் செயலர் சிவசங்கர் மேனன் தமிழர் தேசியக் கூட்டமைப்பை சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். மாலை போட்ட ஆட்டுக் கடாக்களாக அவர்களும் போகிறார்கள். அவர்களோடு செய்யப்படும் பேரமோ மிரட்டலோ எதுவுமே உண்மை வடிவில் வெளியே வரப் போவதில்லை. ஆனால் நிச்சயமாக தேர்தல் பிரச்சாரப் பீரங்கியாக அவர்களின் சந்திப்பு முழங்கப் போவது மட்டும் உறுதி.

முதலில் வன்னிப் போர் நிறுத்தம் பின்னர்தான் சந்திப்பு என விறைப்பாக முதலில் பேசிய கூட்டமைபபின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று எதுவுமே இல்லாது அடங்கிப் போவதில் எங்கோ ஏதோ அழுத்தம் இருப்பது தெரிகிறது. ஈழத் தமிழர்களின் முன்னைய தலைவர்களின் வழியில் இன்று தமிழர் தேசியக் கூட்டணி போவது தமிழ் மக்களின் அழிவுக்கு துணை போவதாகவே இருக்கும். அப்படியான நிலைக்கு ஆகாமல் தமிழர் தேசியக் கூட்டமைப்பு இருக்க முடிந்தால் அது ஒன்றே ஈழத் தமிழருக்கான பேருதவியாக அமையும்.


என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்

ஈழப்பிரியன்

Comments