பொதுமக்களை விருப்பத்திற்கு மாறாக தடுக்கவில்லை: புலிகள் தெரிவித்ததாக ஜோன் கோம்ஸ் தெரிவிப்பு

மோதல் நடைபெறும் பகுதியில் உள்ள மக்கள் தொடர்பாக நான் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கடந்த சில வாரங்களாக தொடர்புகளை மேற்கொண்டிருந்தேன். அதன்போது தாங்கள் விருப்பத்திற்கு மாறாக பொதுமக்களை தடுத்து வைக்கவில்லை என விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் கோம்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை ஜோன் கோம்ஸ் ஊடகவியலாளர்களிடம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மோதல் நடைபெறும் பகுதியில் உள்ள மக்கள் தொடர்பாக நான் விடுதலைப் புலிகளுடன் கடந்த சில வாரங்களாக தொடர்புகளை மேற்கொண்டிருந்தேன். அதன்போது தாங்கள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக பொதுமக்களை தடுத்து வைக்கவில்லை என விடுதலைப் புலிகள் தெளிவாக தெரிவித்தனர்.

தமது பகுதிகளுக்கு மக்கள் விருப்பத்துடனே வந்து தங்கியுள்ளனர் எனவும் அவர்கள் அந்தப் பிரதேசத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்த மக்கள் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தனர்.

நோர்வேயை அமைதி முயற்சிகளின் அனுசரணையாளர் பணியில் இருந்து சிறிலங்கா அரசு முற்றாக வெளியேற்றியது ஒரு உபயோகமான நடவடிக்கை அல்ல. ஆனால் அரசின் இந்த நடவடிக்கை விடுதலைப் புலிகளுடன் நோர்வே பேசுவதை தடுக்காது.

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வெளியேறுவதற்கு இரு நாள் போர் நிறுத்தம் போதுமானதல்ல. அங்கு உதவிப் பொருட்களை எடுத்துச்செல்வதற்கும் உதவி அமைப்புக்களை சேர்ந்தவர்கள் செல்வதற்கும் இந்த கால அவகாசம் போதுமானதல்ல. அரசின் போர் நிறுத்த காலத்தில் மோதல் நடைபெறும் பகுதிகளில் இருந்து மிகவும் குறைந்த அளவிலான மக்களே வெளியேறியுள்ளனர். தென்னாசியா தீவின் கடற்கரையில் பேரழிவு ஏற்படும் சாத்தியங்களே அதிகம் உள்ளன.

விருப்பத்துடன் வெளியேறும் மக்களை விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும். கனரக ஆயுதங்களை பொதுமக்கள் செறிவாக வாழும் பாதுகாப்பான பிரதேசத்தின் மீது பயன்படுத்துவதில்லை என்ற வாக்குறுதிகளை சிறிலங்கா அரசு காப்பாற்ற வேண்டும். அதனால் தான் அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன என்றார் அவர்.

Comments