இணைத்தலைமைகளே, இனி என் செய்வீர்!

வன்னி முல்லைத்தீவு மக்களின் அவலங்கள் நீங்குவதற்கான எந்த நல்ல அறிகுறியும் தெரிய வில்லை. போர்ப் பிரதேசங்களில் உணவு மற்றும் அத்தி யாவசியப் பொருள்கள் கிடைப்பதில்லை. தேவையை விட கால்வாசி, அரைக்கால்வாசியைப் பெற முடிந்தாலும் யானை விலை, குதிரை விலை கொடுக்க வக்கற் றவர்கள், அதற்கான பணப்புழக்கம் இல்லாதவர்கள், முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்ட நிலையில் பொழுதைக் கழித்து உடல் வற்றிச் சாகும் நிலைதான்.

முல்லைத்தீவுப் பகுதியில் அரிசி, கோதுமைமா மற்றும் உப உணவுப் பொருள்கள் போதியளவு இல்லை என்பது வெளிச்சம். பணப்புழக்கம் இல்லாத பகுதி யில் அவற்றின் விலைகள் அவர்களுக்கு எட்டாத தொலை வில் உயரப் பறப்பது இயல்பே. தொழில் இன்றி, வருமானம் இன்றி, நிரந்தர அகதிகளாகிவிட்ட லட்சக் கணக்கான மக்கள் தங்கியுள்ள அந்தப் பகுதியில் ஆயுதத் தாக்குத லுக்கு இலக்காகி இறப்பதற்கு முன்ன தாகவே, மக்க ளில் மிகப் பெரும் எண்ணிக்கையினர் பட்டினியால் சாகும் நிலை உருவாகப்போகிறது!

இப்போது அங்கு கிடைக்கும் உணவு மற்றும் பொருள் களின் அளவு யானைப் பசிக்குச் சோளப் பொரி தான். அதுவே உண்மை நிலை. அவ்வாறு இல்லை எல்லாமே தாராளமாகக் கிடைக்கின்றன என்று கூறமுடியாது.

புதுவருட தினமான கடந்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் பிரதேசத்தில் கஞ்சி வார்க்கப்பட்டபோது அதனைப் பெறுவதற்கு முண்டி அடித்த சின்னஞ் சிறுசு களின் பிஞ்சு முகங்களில் அந்தப் பிரதேச மக்களின் வறுமையும், வெறுமையும், விரக்தியும் பிரதிபலிக் கின்றன!

முல்லைத்தீவில் ஏற்கனவே மனிதப் பேரவலம் தாண்டவமாடத் தொடங்கிவிட்டது என்பதனையே மேலே சுட்டிக்காட்டப்பட்டவை வெளிப்படுத்துகின்றன.

இத்தகைய ஒரு நிலையில், வன்னி மக்களுக்குத் தேவைப்படும் அவசர மனிதாபிமான உதவிகளை அனுப்பு வதற்கு இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிக ளும் ஒத்துழைப்பைத் தரவேண்டும் என்று இணைத் தலைமை நாடுகள் இரண்டு தரப்புகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளன.

வன்னியில் சிக்கியுள்ள மக்களுக்குத் தேவைப் படும் மனிதாபிமான உதவிகளை உணவு மற்றும் மருந்துப் பொருள்களை அவசரமாக அனுப்ப வேண்டும். காயமுற்றவர்களையும் மற்றும் நோயுற்றவர்களையும் அப்புறப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இவற்றைச் செயற்படுத்த இரண்டு தரப்புகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இணைத்தலைமை நாடுகள் கேட் டுள்ளன.

இலங்கை அரசு அறிவித்த 48 மணி நேரத் தாக்குதல் இடைநிறுத்தத்தை அடுத்து, இலங்கையில் உள்ள நிலைமை குறித்து அமெரிக்காவில், அந்நாட்டின் உதவி அமைச்சர் றிச்சார்ட் பௌச்சர் தலைமையில் திங்களன்று நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்கண்ட கோரிக்கையை விடுவதற்கு முடிவாகியது.

அந்தத் தகவல் இரு சாரரின் கைகளுக்கும் உடனடி யாகக் கிடைத்ததா என்பது குறித்துத் தகவல் எதுவும் இல்லை. இணைத்தலைமை நாடுகளின் கோரிக்கை செய்தியாகப் பத்திரிகைகளில் வெளிவந்து வாகசர் களுக்குக் கிடைக்கு முன்னரே, இலங்கை அரசின் இரண்டு நாள் அவகாசம் முடிவுற்று இராணுவம் பாதுகாப்பு வல யப்பகுதிகள் மீது தாக்குதல்களை ஆரம்பித்துவிட்டது. நேற்று, புதன்கிழமை அதிகாலை 2 மணிக்கே தாக்கு தல் இடைநிறுத்தம் நீர்த்துப் போயிற்று.
அதனால், இணைத்தலைமை நாடுகளின் கோரிக் கையும் கேள்வி நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

ஆனால், அதற்காக இணைத்தலைமை நாடுகள் தமது கோரிக்கையை தூக்கிவீசிவிட்டுப் பொறுப்பற்று இருக்க நினைக்கத் தகுமா?

அரசாங்கம் தனது தாக்குதல் இடைநிறுத்தத்தை முடி வுக்குக் கொண்டு வந்துவிட்டது. முல்லைத்தீவில் சிக் குண்டுள்ள மக்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வெளியே செல்ல விடுதலைப்புலிகள் அனுமதிக்க வில்லை. அதனால், எங்களால் மனிதாபிமான உதவி களைச் செய்யமுடியவில்லை என்று வாளாவிருப்பது நியாயமே அல்ல.

இரண்டு தரப்புகளுடனும் தொடர்பு கொண்டு மனிதாபிமானப் பணிகளை முன்னெடுத்து, முல்லைத் தீவில் நிகழும் பெரும் மனிதப் பேரவலத்தைத் தடுப் பதற்குரிய சரியான உத்தியை இனங்கண்டு, தமது சக்தி யைப்படுத்தி அவர்களைத் காப்பாற்ற வேண்டும்.

முல்லைத்தீவு நிலைமை உள்நாட்டுப் பிரச்சினை என்ற எல்லையைக் கடந்து, உலகப் பிரச்சினையாக லட்சக் கணக்கான மனித உயிர்களைக் காப்பாற்றும் மிகப் பெரும் மனிதாபிமான நெருக்கடியாக மாறியுள்ளது.

இதனை இராணுவத் தீர்வு வகைக்குள் வைத்து நோக்காது, மனித உயிர்களுடன் விளையாடும் பெரும் விவகாரமாக அணுகி, உரிய மாற்றுவழி மூலம் எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று மனித நேயத் துடன் சிந்தித்துச் செயற்பட வேண்டும். இணைத் தலைமை நாடுகள் தமது பிராந்திய நலன்களைத் தக்க வைக்கும் உள்நோக்கங்களுடன் செயற்படவும் முனை யக் கூடாது.

இயற்கை அனர்த்தங்களை, அவற்றால் வரும் விளைவுகளைத் தடுப்பதற்கு கூட்டுமுயற்சி யில் ஈடுபடுவது போன்று, இலங்கை விவகாரத்தை யும் மனதில் கொண்டு லட்சக் கணக்கான மக்களின் உயிர் மீட்புக்கு உதவ வேண்டும்.

நாகரிக யுகத்தின் பண்பு அதுவாகவே இருப்பது அவசியம். செய்வார்களா?

அல்லது காலத்தை விரயம் செய்து மனிதப் பேரவலத்திலும் கண்கட்டு வித்தை காட்டு வார்களா?

Comments