எங்களை காப்பாற்றுவதற்கு வலிமையின்றி இருக்கிறார்களே: தமிழகம் சென்ற இலங்கை அகதி கண்ணீர் பேட்டி

என் மக்களை காப்பாற்றுவதற்கு முன்வர யாருக்கும் வலிமை இல்லையே. மக்கள் சாவதை பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை. இவ்வாறு நேற்று முன்தினம் வன்னிப்பகுதியில் இருந்து தமிழகம் சென்ற இலங்கை அகதி கண்ணீர் மல்க கூறினார்.

இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வரும் போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதனால் அப்பாவி தமிழர்கள் பதுங்கு குழிகளில் வாழ்க்கை நடத்தி வரும் அவலம் உள்ளது. மேலும் பாதுகாப்பு பகுதிகளிலும் இலங்கை இராணுவம் குண்டுகளை கொத்து கொத்தாக வீசி வருவதால் உயிருக்கு பயந்து போய் அப்பாவி தமிழ்மக்கள் படகு மூலம் தமிழகத்திற்கு அகதிகளாக வந்து கொண்டு இருக்கின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட கண்ணாடி இழைப் படகில் 5 ஆண்கள், 4 பெண்கள், 2 குழந்தைகள் என 11 பேர் அகதிகளாக வேளாங்கண்ணி புதிய கடற்கரையில் வந்து இறங்கினர். இந்த தகவலை அறிந்த வேளாங்கண்ணி பொலிஸார், அந்த 11 அகதிகளையும் பொலிஸ் வானில் ஏற்றிக் கொண்டு நாகைக்கு வந்தனர்.

அங்கு தனி அறையில் வைத்து, உண்மையிலேயே இவர்கள் அனைவரும் அப்பாவி தமிழர்கள் தானா? அல்லது விடுதலை புலிகளா? என்று தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் இவர்கள் அனைவரும் விடுதலை புலிகள் அல்ல என்பது தெரியவந்தது. மேலும் முல்லைத்தீவில் இருந்து அதிகாலை 41/2 மணிக்கு படகில் புறப்பட்டு சுமார் 15 மணி நேர பயணத்திற்கு பின்பு வேளாங்கண்ணி வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து நேற்றுகாலை 11 பேரையும் பொலிஸார் பலத்த பாதுகாப்புடன் மண்டபம் அகதிகள் முகாமிற்கு கொண்டு சென்றனர்.

முன்னதாக அகதியாக வந்த ரொபேர்ட்சன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கை இராணுவம் விமானங்கள் மூலமாகவும், பீரங்கி மூலமாகவும் குண்டுகளை கொத்து கொத்தாக எங்கள் மக்கள் மீது வீசி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் பதுங்கு குழிகளில் தங்கி, வாழ்ந்து வருகின்றனர். சிறுவர்களும் பதுங்கு குழிகளில் தான் உள்ளனர். எந்தநேரமாக இருந்தாலும் சரி பதுங்கு குழியை விட்டு வெளியே வரவே முடியவில்லை. எப்போதும் குழிக் குள்ளேயே இருக்கக்கூடிய நிலை உள்ளது.

கடுமையான சண்டை நடப்பதால் எங்கள் கண்முன்பே எம் மக்கள் செத்து மடிகின்றனர். பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கிறது. பயந்து கொண்டே வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது. எம் மக்களை காப்பாற்றுவதற்கு முன்வர யாருக்கும் வலிமை இல்லையே. மக்கள் சாவதை பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை. இதனால் அதிகாலை 41/2 மணிக்கு படகில் புறப்பட்டோம். வேளாங்கண்ணிக்கு தான் வர வேண்டும் என்று எண்ணி வரவில்லை. இந்தியாவில் எங்காவது ஓரிடத்திற்கு செல்ல வேண்டும் என்று தான் புற பட்டோம். ஆனால் வேளாங்க ணிக்கு வந்துள்ளோம்.
இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.

Comments