உண்ணாநிலைப் போராட்டத்தில் இருப்பவரில் ஒருவரை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்கிறது பிரித்தானிய அரசு: பிரான்சிலும் நால்வர் உண்ணாநிலைப் போராட்டம்
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 21 வயதுடைய சிவதர்சன் சிவகுமாரவேல், 28 வயதுடைய சுப்பிரமணியம் பரமேஸ்லரன் ஆகிய இளைஞர்கள் கடந்த நான்கு நாட்களுக்கு முதல் இந்த போராட்டத்தை தொடங்கியிருந்தனர்.
கடும் குளிருக்கு மத்தியிலும் பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக உள்ள மைதானத்தில் இவர்கள் இருவரும் தமது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இவர்களில் ஒருவரின் உடல்நிலை மிகவும் பாதிப்படைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை உண்ணாநிலைப் போராட்ட மேடைக்கு வந்த மைக் டொனால்ட் என்ற பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர், உண்ணாநிலை போராட்டத்தில் இருப்பவர்களில் ஒருவரை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்ல பிரித்தானிய அரசாங்கம் ஏற்பாடு செய்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி எதிர்வரும் புதன்கிழமை அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகத்திற்கு அவரை அழைத்துச் சென்று வன்னியில் தமிழர்கள் படும் இன்னல்கள் குறித்து ஆராய பிரித்தானிய அரசாங்கம் ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சந்திப்பிற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எழுத்து படிவவமும் பயண விவரமும் இன்று பிற்பகல் தொடர்புபட்ட தரப்புக்களிடம் கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.
சந்திப்பில் ஏழு உலக நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு இலங்கை பிரச்சினை குறித்து சிவதர்சன் சிவகுமாருடன் கலந்துரையாடவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் உண்ணாநிலைப் போராட்டம் இருக்கும் இருவரையும் பானம் அருந்தியவாறு உண்ணாநிலைப் போராட்டத்தை தொடருமாறும் பிரித்தானிய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.
இந்த வேண்டுகோளை மேற்படி இருவரும் ஏற்று பானம் அருந்தியவாறு தொடர்ந்தும் தமது உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
பிரான்சிலும் நால்வர் உண்ணாநிலைப் போராட்டம்
பிரான்சில் தொடரும் கவனயீர்ப்பு நிகழ்விலும் நால்வர் உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கியிருக்கின்றனர்.
பிரான்சின் இன்வலிட் பகுதியில் கடந்த திங்கட்கிழமை தொடங்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வானது நேற்று முன்நாள் புதன்கிழமை முதல் ஈபிள் கோபுர வளாகத்தில் உள்ள மனித உரிமைகள் சதுக்கத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளதுடன், அங்கு நடைபெறும் இப்போராட்டத்தில் நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.
அதேநேரம் பரிஸ் நகரத்தில் உள்ள அமைதிச்சுவர் அமைந்துள்ள பகுதியிலும் கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருகின்றது.
பிரான்சில் நடைபெறும் இந்த போராட்டங்களில் நேற்று முன்நாள் இரவு தொடக்கம் நால்வர் சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
ஈபிள் கோபுர வளாகத்தில் ரவிராஜ் ஆனந்தகுமாரசாமி, வர்ணன் விக்கினேஸ்வரன் ஆகிய இருவரே சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினர்.
- விடுதலைப் புலிகளை அனைத்துலகம் அங்கீகரிக்க வேண்டும்
- வணங்கா மண் பயணத்திற்கான அனுமதியை வழங்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளை பிரான்ஸ் அரசாங்கத்திடம் முன்வைத்து இவர்கள் தமது சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதேவேளையில் பரிஸ் நகரத்தில் உள்ள அமைதிச்சுவர் அமைந்துள்ள பகுதியில் நேற்று தொடக்கம் மேலும் இருவர் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினர்.
நவநீதம் சண்முகராஜா, செல்வகுமார் அல்பேட் ஆகியோரே இங்கு உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதேநேரம் அமைதிச்சுவர் அமைந்துள்ள பகுதியில் நடத்தப்படும் இப்போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி எழுச்சி முழக்கங்களை முழங்கிப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதுடன், தமது போராட்டம் காலவரையறை இல்லாமல் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
காலத்தின் தேவையை உணர்ந்து அனைத்து மக்களையும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.
Comments