பாரிய கடல் வழித் தரையிறக்க முயற்சி முறியடிப்பு: கடும் கடற் சமரில் பீரங்கிப் படகை மூழ்கடித்தனர் புலிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் பெரும் எடுப்பில் சிறிலங்கா கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தரையிறக்க முயற்சி கடற்புலிகளால் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் வன்னி சமர் - கட்டளைப் பீடத்தை மேற்கோள் காட்டி 'புதினம்' செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்துள்ளதாவது:

முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் இன்று புதன்கிழமை அதிகாலை 15 'டோறா' பீரங்கிப் படகுகள், 25 வரையான 'அரோ' படகுகள் மற்றும் 'கூகர்' படகுகளில் பெரும் எண்ணிக்கையிலான படையினரை தரையிறக்கும் முயற்சியாக பெரும் கடற் தாக்குதல் ஒன்றில் ஈடுபட்டனர்.

இந்த தரையிறக்க முயற்சிக்கு எதிரான பாரிய முறியடிப்புத் தாக்குதலை கடற்புலிகளின் தாக்குதல் படகுகள் மேற்கொண்டன.

இந்த கடும் கடற் சண்டையின் போது - சிறிலங்கா கடற்படையினரின் 'டோறா' பீரங்கிப் படகு ஒன்று முற்றாக அழித்து மூழ்கடிக்கப்பட்டதுடன், மூன்று 'அரோ' படகுகளும் கடும் சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டன.

பல மணி நேரம் நீடித்த இந்த கடும் சண்டையின் பின்னர், தமது தரையிறக்க முயற்சி கைகூடாத நிலையில் - சிறிலங்கா கடற் படையினர் பின்வாங்கிச் சென்றனர்.

பின்வாங்கிச் சென்றதன் பின்னர் - இன்று பிற்பகல் - கரையோர இடம்பெயர் மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து கடற்படையினர் அகோர பீரங்கித் தாக்குதலை நடத்தினர்.

Comments