சீக்கியரும் தமிழரும்! - ஓர் இனமான ஒப்புமை‏

சர்தார்ஜி ஜோக்குகள் மூலம் முட்டாளாக வர்ணிக்கப்படும் சீக்கியர்கள், நிஜத்தில் புத்திசாலிகள். சக சீக்கியனை கஷ்டத்தில் வைத்துப் பார்க்க விரும்பமாட்டார்கள். அவ்வளவு சகோதரத்துவம் உள்ளவர்கள். ஆனால் சீக்கியர்கள் கோபப்பட்டால்? 25 ஆண்டுகள் ஆனாலும் அது ஆறாமல் அப்படியே இருக்கும் என்பதைத் தமிழரான(?) ப.சிதம்பரம் தன் மீதான "காலணி" வீச்சு சம்பவத்தால் உணர்ந்த அடுத்த சில மணி நேரங்களில் இந்தியாவே உணர்ந்தது.

அந்த சம்பவம் உணர்த்தும் சேதி? அந்த உணர்வை அப்படியே உள்வாங்கி, நம் "தன்மான"(?!)த் தமிழனத்தைத் திரும்பிப் பார்த்தால்..?

சீக்கியர்களுக்கு எதிரான கேவலமான திட்டமிட்டு நடத்தப்பட்ட அந்த மாபாதகச் செயல்கள் உண்மையாகவே கொடுரமான இன் வெறித்தாக்குதல். கண்டிக்க வேண்டிய காட்டுமிராண்டித்தனம். மறுக்கவே முடியாது.

ஆனால், அந்தக் கலவரத்தில் எந்தப் பெண்ணும் கற்பழிக்கப்படவில்லை.(சீக்கிய
ர்கள் மன்னிக்க!) சீக்கியக் குழந்தைகளின் அனாதை இல்லங்களில் குண்டு போடவில்லை. தன் குடும்பத்தார் கொலை செய்யப்படுவதைப் பார்த்து அழுத "மாபெரும்" தவறுக்காக எந்த சீக்கிய பெண்ணும் வன்புணர்ச்சி செய்யப்படவில்லை. (மீண்டும் மன்னிக்க) கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்து எந்தக் குழந்தையும் கத்தியால் கிழித்து எடுக்கப்பட்டு, காலணியால் சதைக்குழம்பாக ஆக்கப்படவில்லை. கிளஸ்டர் குண்டுகள், பாஸ்பரஸ் குண்டுகள், பல்முனையில் பாய்ந்து தாக்கும், கொடிய குண்டுகள் சீக்கியர்கள் மேல் போடப்படவில்லை. விச வாயு செலுத்தி அப்பாவி சீக்கிய மக்கள் கொல்லப்படவில்லை.

அந்த மாபாதகத்தைச் செய்தவர்களுக்கு அன்றைய காங்கிரஸ் அரசு ஆயுதம் வழங்கவில்லை. வட்டியில்லாக் கடன் கொடுத்து கத்தி வாங்கச் சொல்லவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும் நிவாரணம் அவர்களுக்குக் கிடைக்காமல், அதையும் வன்முறையாளர்களுக்கே தரவில்லை. அப்பாவி சீக்கியர்களை கொடூரமாக அழிக்க வதை முகாம்கள் அமைக்கச் செய்யவில்லை.

நல்ல வேளை, நம் சீக்கிய சகோதர, சகோதரிகளுக்கு இந்தக் கொடுமைகள் நடக்கவில்லை. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு இது எல்லாம் நடக்கிறது. இதற்கு மேலும் நடக்கிறது. எழுதக்கூடாததும் நடக்கிறது.

சீக்கியர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டது நேற்றல்ல... போன வருடம் அல்ல...பத்து வருடம் முன்பு கூட அல்ல..1984-ல், அதாவது 25 வருடங்களுக்கு முன்பு! பொதுவாக நம் குடும்பத்தில் யாராவது ஒரு ரத்த உறவு.. ஒரே ஒரு ரத்த உறவு அநியாயமாகக் கொல்லப்பட்டால், நாமும் சீறி எழுவோம். எவ்வளவு நாட்களுக்கு? சில பல வருடங்கள்? ஐந்து வருடங்கள் ஆகிவிட்டால் மனைவி நம்மிடம், " நடந்தது நடந்துப் போச்சு பழிக்குப் பழி வாங்கணும்னு போய் வங்களை அனாதையாக்கிடாதீங்க" என்பாள். பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டால் அதே விசயத்தை மகனோ, மகளோ சொல்வார்கள். பாரம் கடவுள் மேல் போடப்படும்.

ஆனால் பொதுவில் தமிழனைவிட பக்தி நிறைந்த சீக்கியர்கள்? 25 என்ற நீண்ட கால் இடைவெளி அவர்களது மீசையில் உள்ள ஒரு முடியைக்கூட அசைக்கவில்லை. அசைக்க முடியவில்லை. செருப்பு வீசிய அன்றே சோனியா வீடு முற்றுகை, செருப்பு சீக்கிய நிருபரைத் தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைக்க முயற்சிகள்!

ஆனால் ஈழத்தில்..?

சீக்கியர்கள் டெல்லியில் தாக்கப்பட்ட 1984-ம் ஆண்டுக்கு ஒரு வருடம் முன்பு 1983-லேயே இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கொதிக்கும் தார் பீப்பாய்களில் குழந்தைகளைத் தூக்கிப்போட்டது...கசாப்புக் கடைகளில் தமிழனின் உடலை உறித்து ஆட்டுக்கறி போலத் தொங்கவிட்டு, "தமிழனின் ரத்தம் இங்கே கிடைக்கும்" என்று எழுதி வைத்தது...என்னென்னவோ நடந்தது...
தொடர்ந்து நடந்தது...நடந்துகொண்டே இருந்தது...இருக்கிறது. இன்னும்...இப்போதும்... இந்த நிமிடமும் நடக்கிறது.

ஆனால் தமிழன்?

ஆம்! 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அநியாயத்துக்கு எதிராக - இன்று நடந்ததுபோல் பொங்கி எழுகிறது சீக்கிய இனம். ஆனால் 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்துகொண்டே..இருக்கிற கொடுமைகளுக்கு எதிராக, இன்றுவரை ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாமல், சுயநல அரசிரல்வாதிகளின் கபட நாடக அரசியல் வேசித்தனத்தை நம்பி ஏமாந்து கொண்டுள்ளது தமிழினம்.
சீக்கியர்களிடம் மட்டும் ஆளும்கட்சி, எதிக்கட்சி, கூட்டணிக் கட்சிகள்... இவரைக் கவிழ்க்க அவரின் சதி, அவரைக் கவிழ்க்க இவரின் சதி இவை எல்லாம் இல்லையா? அங்கும் உண்டு. ஆனாலும் உலகின் எந்த மூலையில் ஒரு சீக்கியன் பாதிக்கப்பட்டாலும் இன்னொரு சீக்கியன் சும்மாயிருக்க மாட்டான்.

ஆனால் சீக்கியர்களின் கோபத்திலும் ஒரு கண்ணியம். அந்த நிருபர் ப.சிதம்பரத்தை "காலணி"யால் அடிக்கவேண்டும் என்று நினைத்திருந்தால், மிக அருகில் இருந்த அவரின் அடியில் நிலைமை விபரீதம் ஆகியிருக்கும். ஆனால், அவர் காலணியை தூக்கிப்போட்டார். மிகச் சரியான லட்சியம் உள்ள, ஆக்கபூர்வமான, உணர்ச்சிவசமில்லாதத் திட்டமிட்டு செலுத்தப்பட்ட கோபம்! அதுதான் கோபத்தின் அழகு! (இச்செயல் கண்டனத்துக்குரியது என்றாலும்).
ஆனால் இழங்கைத் தமிழனுக்கு ஆதரவான தமிழனின் கோபம்?
ஒரு நாள் உண்ணாவிரத்தில் உட்கார்ந்து, தொண்டை வறளக் கத்திவிட்டு, தமிழினத் துரோகம் செய்யும் நமது அரசியல்வாதிகளில் பிடிக்காதவர்களை மட்டும் கரித்துக்கொட்டிவிட்டு, தனக்கு எலும்புத்துண்டு போடுகிற இன்னொரு தமிழினத் துரோக அரசியல் தலைவனுக்கு ஆரத்தி எடுத்து, பூசி மெழுகி, மழுப்பி உண்ணாவிரதம் உட்கார்ந்ததன் நோக்கத்தைத் தானே கெடுத்து அழித்துவிட்டு...இரவில் சாராய போதையிலோ அல்லது தனது மன்க்கொதிப்புக்கு ஒரு தற்காலிக மருந்து கிடைத்துவிட்ட சமாதான போதையிலோ தூங்கிவிடுவது. என்ன அசிங்கமான கோபம்! இது எங்கே உருப்படும்?

அன்று சீக்கிய கலவரத்துக்குக் காரணமாக இருந்துவிட்டு, இன்று "சீக்கியர்கள் நடத்தும் போராட்டத்தில் சீக்கியருக்கு ஆதரவாக நானும் கலந்துகொள்கிறேன்" என்று ஜெகதீஸ் டைட்லரோ அல்லது கலவரத்துக்குக் காரணமான வேறு யாருமோ, 25 ஆண்டுகள் ஆனபிறகும்கூட சொல்ல முடியாது. நடப்பதே வேறு. கிழிந்துவிடும்.

ஆனால், சிங்கள அரசுக்கு ரேடாரும், வட்டியில்லாக் கடனும், உயிர்க்கொல்லி ஆயுதங்களும், ராணுவ வீரர்களையும் வழங்கும்போது, அதற்குத் துணை போய்விட்டு, "இலங்கை அரசைக் கண்டித்து மாபெரும் பேரணிக்கு வாரீர்..." என்று கூவி, கலைஞரும், தங்கபாலுவும் பேரணியே நடத்த முடியும்.
ஏன், சோனியா காந்தியே வந்து நடத்தினாலும் தமிழன் வேடிக்கைப்பார்ப்பான். 1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் கொல்லப்பட்ட சீக்கியர்கள் சுமார் நான்காயிரம் பேர். அந்தக் கோபம் எட்டுக்கோடி தன்மானச் சிங்கங்களின் கோபமாக இன்று சீக்கிய இனத்தில் பொங்கிப் பாய்கிறது. ஆனால் ஈழத்தில் தினசரி நான்காயிரம் பேர் கொல்லப்பட்டாலும்கூட, ஏழுகோடி தாயகத்தமிழர்களும், அரசியல் வியாபாரிகளின் வாய்ப் பந்தல் பேச்சில் மயங்கி சுரணையில்லாமல், தங்களுக்குள் கட்சி ரீதியாக அடித்துக்கொண்டு நிற்கின்றனர்.

இந்திரா கொல்லப்பட்டதும், பிரதமராகப் பதவி ஏற்ற "பைலட்" ராஜிவ்காந்தி அரசியல் விவரம் புரியாமல், அல்லது மனிதாபிமானமின்றி - சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்தும் விதத்தில் - ஒரு பெரிய ஆலமரம் சாயும்போது, சுற்றியுள்ள நிலத்தில் அதிர்வுகளை ஏற்படுவது சகஜம்தானே" என்று பேசினார்.

ஆனால் 1984-ம் ஆண்டு ராஜிவ் பேசிய பேச்சை சீக்கிய இனம் கடைசிவரை மன்னிக்காததன் விளைவாக 1998-ம் ஆண்டு 14 வருடம் கழித்து கணவரின் பேச்சுக்காக மனைவி சோனியா மன்னிப்புக் கேட்டார். அது சீக்கியரின் இனமான உணர்வு. ஆனால், இங்கே கலைஞர் தூக்கும் காங்கிரஸ் பல்லக்குகளின் விளைவாக, உணர்வுபூர்வமாக நடக்கும் சில போராட்டங்களும்கூட வலுவிழந்தும் அர்த்தமற்றும் போய்விடுகின்றன.
டெல்லியில் நடந்த, அந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தைக் கண்டித்து, பல சிறுகதைகள், நாவல்கள் வந்தன. தமிழில்கூட பல டெல்லிவாலா எழுத்தாளர்கள் "குருத்து குருத்தாக" சிறுகதை எழுதினார்கள். அது சிக்கிய இனத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுவதாக இருந்தது.

ஆனால் அப்படி சீக்கியர்கள் பரிதாபம் பற்றி தமிழில் பிலாக்கனமாக எழுதிய எழுத்தாளர்களே-ஈழத்தில் பொழியப்படும் குண்டு மழைகளுக்கு நடுவே தன் கைக்குழந்தையை தன் உடலுக்குக் கீழே மறைத்து தரையோடு தரையாகத் தவழ்ந்து செல்லும் பாச வீரத் தாய்மார்களைப் பற்றி ஒரு குட்டிக்கதை எழுதக்கூடத் தயாரில்லை.

ப.சிதம்பரம் மீது பத்திரிகையாளர் காலணி வீசிய சம்பவத்தைச் சிறு பொறியாகக் கொண்டு எரியத் தொடங்கிய சீக்கிய வீரத்தின் வெம்மையில் பொசுங்கி அலறிய சோனியாவின் ஆணவம்...இந்தத்தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஜெகதீஷ் டைட்லரையே வாபஸ் வாங்கிக் கொண்டது.
1984-ல் சீக்கியனுக்குச் செய்த தவறின் பலனை இன்னும் காங்கிரஸ் அனுபவிக்கிறது. இன்னும் 25 ஆண்டுகள் போனாலும் அது அனுபவிக்கும். ஒரு சீக்கியரை ஐந்து வருடம் பிரதமராக வைத்திருந்து, இன்னும் ஐந்து வருடம் பிரதமராக வைக்க தயார் என்று காங்கிரஸ் கூறியும் அதனால் விலை போகாத சுத்தமான் தன்மானம் சீக்கியனுக்குச் சொந்தமானது.

ஆனால் இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர். ஆகியோரின் மறைவிற்குப் பின்பு, 1988-ல் இருந்தே இலங்கையில் தமிழினத்துக்கு எதிரான துரோகச் செயலை இந்திய மத்திய அரசுகள் மிக அதிகமாக காங்கிரஸ் அரசுகள் செய்துதான் வருகின்றன. அதுவும் ஈழப்பிரச்சனையில தமிழினத்திற்கு ஆதரவாகப் பேசிய அத்தனை பேரையும் கைது செய்து சிறையில் போட்ட அத்தனை பிள்ளைப் பிடிப்பவர்களும், இதோ காங்கிரஸ் வேட்பாளர்களாக - அந்தக் கூட்டணி வேட்பாளராகப் பவனி வரப்போகிறார்கள்.

பொங்கி எழுந்து - அப்படிப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் ஒருவரையாவது வாபஸ் பெற்றுக்கொள்ளும் நிலைமையை டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு ஏற்படுத்தும் தெம்போ, திராணியோ, இன உணர்வோ தமிழனுக்கு உண்டா? ஓட்டுக்குப் பணம் வாங்கும் மந்தையால் எப்படி முடியும்?
இந்திராகாந்தியைச் சுட்டுக்கொன்ற பியாந்த் சிங் மனைவியை சுயேச்சையாகத் தேர்தலில் நிறுத்தி மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தவர்கள் சீக்கியர்கள். மாமியாரைக் கொன்ற அந்த இனத்தைப் பாராட்டிதான் அதற்குப் பரிசாக ஒரு சீக்கியரை பிரதமர் ஆக்கினார் மருமகள் சோனியா. இதோ இப்போது சிதம்பரம் மீது காலணி வீசியவரை நாடாளுமன்றத்தேர்தலில் வேட்பாளராக ஆக்கத் தீர்மானித்துள்ளனர் சீக்கியர்கள்.

ஆனால் ஈழத்தமிழருக்கு ஆதரவாகப் பேசும் எல்லோரையும், அட, தேர்தலில் நிற்க வைத்து ஜெயிக்க வைக்க வேண்டாம்...ஜெயிலில் உட்கார வைத்துக் களி திங்க விடாமல் தூங்குவதில்லை என்று கங்கணம் கட்டியதா தமிழினம்?
சீக்கியர்களுக்கு எதிராக நடந்த அந்த 1984 கலவரத்தில் ஜெகதீஷ் டைட்லர் குற்றமற்றவர் என்று தற்போது சி.பி.ஐ.-யால் விடுவிக்கப்படுவதற்கு முன்பு பஞ்சாபில் சில் இடங்களிலாவது காங்கிரஸ் வெற்றிபெறும். இப்போது அதுக்கூட இல்லை என்கின்றனர். பிரதமர் பதவியைக் கொடுத்தும் அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை.

அப்படி பார்த்தால் அதே வகையில் ஈழத்தமிழர்கள் மற்றும் சுட்டுக்கொல்லப்பட்ட 450 ராமேஸ்வரம் மீனவர்கள் விசயங்களில் தமிழனுக்கு நியாயமான சூடு, சுரணை, மானரோசம், கோபம் இருந்தால் காங்கிரஸ் தமிழகத்தில் ஒரு தொகுதியிலகூட டெபாசிட்டை மீட்கக் கூடாது. ஆனால் பிரதமர் பதவி எல்லாம் தேவையில்லை. சில ஆயிரங்களைப் பிச்சையாகப் போட்டே, தமிழனின் ஓட்டுகளைப் பெற்றுவிட முடியும். எனவேதான் கரன்சி வாசத்தில் "நாற்பதும் நமதே" என்கின்றனர்.

மொத்தத்தில் காலம்காலமாக "சிங்"குகளைக் கொண்ட சீக்கிய இனம் சிங்க இனமாகவே உள்ளது. ஆனால் அரசியல் நயவஞ்சகர்களின் வாய்ச்சவடால்களை நம்பிய தமிழினம் அசிங்க இனமாகி விட்டது.

திருமொழி

Comments