திரு. கலைஞர் டாக்டர் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு!
மாண்புமிகு முதல்வருக்கு, வணக்கம்.
உண்மையைச் சொன்னால் இந்த மடல் எழுதுவதால் ஏதாவது பயன் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு அடியோடு இல்லை. உங்களுடைய அண்மைக் காலப் பேச்சும் செயலும் அவ்வாறுதான் எம்மை எண்ண வைக்கிறது.
இருந்தும் 1990 இல் தமிழீழ மக்களை கண்டபடி சுட்டும், வெட்டியும் கொன்றும் குருதிக் கறைபடிந்த கையோடு வந்த இந்திய அமைதிப்படையை வரவேற்க மறுத்த முதல்வர் கருணாநிதியின் தமிழின உணர்வு எங்கோயாவது ஒளிந்திருக்கலாம் என்ற நப்பாசையில் இந்த மடலை வரைகிறோம்.
கடந்த ஆகஸ்ட் 7 ஆம் நாள் 1990களில் பிரிந்து போன தென் ஒசெட்டியாவைத் (South Ossetia) தாக்கி அதன் தலைநகரை யோர்ஜிய படைகள் பிடித்தது. தென் ஒசெட்டியா யோர்ஜியாவின் நிலப்பரப்பில் ஒரு பகுதி என்பதுதான் யோர்ஜியா தனது படையெடுப்புக்குச் சொன்ன காரணம் ஆகும்.
இந்தப் படையெடுப்பில் ஒசெட்டியாவின் தலைநகர் தரைமட்டமாக்கப் பட்டிருப்பதாகவும் 2,000 பொதுமக்கள் கொல்லப் பட்டிருப்பதாகவும் அது முழுமையான இன வடிகட்டல் எனவும் உருசியா யோர்ஜியா மீது குற்றம் சுமத்தியது.
தென் ஒசெட்டியாவின் மக்கள் தொகை 70,000 மட்டுமே. இதில் 3 விழுக்காட்டினர் உருசியர்கள். ஆனால் உருசிய நாட்டுக் கடவைச் சீட்டைப் பலர் வைத்திருக்கிறார்கள். ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் இந்தப் பகுதி யோர்ஜியாவோடு இணைக்கப்பட்டது.
யோர்ஜியாவின் படைகள் தென் ஒசெட்டியாவைத் தாக்கி அதைத் தனது கட்டுப்பாட்டுக்குள்; மறுபடியும் கொண்டுவந்ததைக் கண்டு கடுஞ்சினம் கொண்ட உருசியா யோர்ஜியா மீது படையெடுத்தது. யோர்ஜியா தலைநகர் திபிலிசியிலுள்ள (Tbilisi) இராணுவ விமானத் தளங்கள் மீது உருசிய போர் விமானங்கள் குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளன.
தென் ஒசெட்டியா போல யோர்ஜியாவிலிருந்து பிரிந்த மற்றொரு மாகாணமான அப்ஹாஸியாவின் எல்லைப் பகுதிகளிலிருந்தும் சுமார் 10,000 உருசிய படை யோர்ஜியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது.
தென் செட்டியாவிலிருந்து தமது படைகளை வாபஸ் பெற்றுள்ளதாக யோர்ஜியாவின் உள்நாட்டமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால் உருசியா விடுவதாக இல்லை. யோர்ஜியா மீது மேற்கொண்ட படை நடவடிக்கை தொடர்ந்தது. அயந்து நாள் சண்டையின் பின் பிரான்ஸ் நாட்டு அதிபரது முயற்சியால் போர் நிறுத்த உடன்பாடு ஒன்று எழுதப்பட்டுள்ளது.
இந்தப் படையெடுப்புக்கு உருசிய ஆட்சித்தலைவர் டிமித்ரி மித்விடேவ (Russian President Dmitry Medvedev) கொடுத்த விளக்கத்தைத்தான் முதல்வர் கருணாநிதி உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். "உருசிய குடிமக்கள் எங்கிருந்தாலும் அவர்கது உயிரையும் தன்மானத்தையும் பாதுகாக்க வேண்டியது எமது கடமை. அதற்கான நடவடிக்கைகளையே உருசியா மேற் கொண்டுள்ளது" என உருசிய ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
அதேவேளை "உருசியாவின் நடவடிக்கை முற்று முழுதாக சட்ட அடிப்படையிலான ஒன்று" என பிரதமர் விளாடிமிர் புட்டின் (Prime Minister Vladimir Putin) தெரிவித்தார். இரு தரப்பினரில் யார் பக்கம் நியாயம், யார் பக்கம் நியாயம் இல்லை, யார் சரி, யார் பிழை என்பது ஒருபுறம் இருக்கட்டும். சிறுபான்மை உருசிய இனத்தவரைப் பெரும்பான்மை யோர்ஜியர் படைகொண்டு தாக்கிய போது உருசிய ஆட்சித்தலைவரும் பிரதமரும் தங்கள் சொந்தங்களது உயிரையும் மானத்தையும் காப்பாற்ற 30,000 படைகளைக் களம் இறக்கினார்கள். இதற்குப் பெயர்தான் இனவுணர்வு என்பது. இதற்குப் பெயர்தான் தன்மானம் என்பது.
தமிழீழத்தின் மீது சிங்களம் படையெடுத்து தமிழர்களது நிலத்தை தனது வல்லாண்மைக்கு உட்படுத்தி வருகிறது. வானில் இருந்து குண்டுமாரி பொழிகிறது. தரையில் இருந்து எறிகணைகளை வீசுகிறது. இதனால் நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப் பட்டுள்ளார்கள். இலட்சக்கணக்கான தமிழ்குடும்பங்கள் வீடு வாசல், கன்றுகாலி, தோட்டம் துரவுகள், பொன்விளையும் வயல் நிலங்கள் ஆகியவற்றை எல்லாம் இழந்து மரநிழல்களிலும் வீதியோரங்களிலும் வானமே கூரையாகவும் தரையே பாயாகவும் படுத்து உறங்குகின்றன.
ஒரு நேரக் கஞ்சிக்கும் வழியின்றி ஏதிலிகளாக அல்லல்படுகிறார்கள்.நீங்கள் படை அனுப்ப வேண்டாம் அந்த மக்களது பசிப்பிணி போக்க உணவு அனுப்புங்கள், உடல்நோய் நீக்க மருந்து அனுப்புங்கள் என நீங்கள் டில்லியைக் கேட்கலாம் அல்லவா? ஏன் கேட்கவில்லை? உங்களது தமிழினவுணர்வு இந்தளவுக்கு வரண்டு பாலைவனம் ஆகிவிட்டதா?
உருசிய ஆட்சித்தலைவர் டிமித்ரி மித்விடேவ அவர்களுக்கு இருக்கிற இனப்பற்றில் நூற்றுக்கு ஒரு விழுக்காட்டை ஆவது உங்களிடம் காணமுடியவில்லையே!
சிங்களப் படைகளின் பிடியிலிருந்து தப்ப தமிழகத்துக்கு ஓடிவரும் ஈழத்தமிழர்கள் ஏதிலிகள் அல்ல அவர்கள் எங்கள் விருந்தினர்கள் என்று சட்டசபையில் வீர வசனம் பேசினீர்களே? இன்று அதே உறவினர்களைத்தானே; தமிழகத்தில் வீடுகள் வாங்கக் கூடாது, வண்டிவாகனம் வைத்திருக்கக் கூடாது எனத் தடை செய்துள்ளீர்கள்?
தடையை நடைமுறைப்படுத்த தமிழக காவல்துறைக்கு அதிரடியாகக் கட்டளை பிறப்பித்துள்ளீர்கள்? அந்தக் கட்டளையைக் கையில் எடுத்துக் கொண்டு தமிழக காவல்துறை "விருந்தினர்"களை துரத்தித் துரத்தி வேட்டை ஆடுகிறதே?
இதுதான்
"மோப்பக் குழையும் அனிச்சம் - முகம்
திரிந்து நோக்கக் குழையும் விருந்து"
என்று குறளுக்கு உரை எழுதியவர் விருந்தினர்களை நடத்தும் அழகா? வடநாட்டு மார்வாடி நிலம் வாங்கலாம், மாராத்திக்காரன் நிலம் வாங்கலாம், அந்நிய முதலீட்டாளர்கள் நிலம் வாங்கலாம் ஈழத்தமிழன் மட்டும் படுத்துறங்க வீடுமனை வாங்கக் கூடாதா?
இன்று மறைந்த பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் உயிரோடு இருந்திருந்தால் அரச செலவில் ஆயிரம் பதினாயிரம் என இந்த மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருப்பாரே!
பாவேந்தர் பாரதிதாசன்; தூங்கிக் கிடந்த தமிழினத்தை தன் கவிதைகள் மூலம் பொங்கி எழச் செய்தவர்.
"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" என்று சங்கநாதம் செய்தார்.
அவர் இன்று உயிரோடு இருந்தால் உங்களது இனப்பற்றைப் பார்த்து நாணித் தலை குனிந்திருப்பார்.
"தறுக்கினார் பிற தேசத்தார் தமிழன்பால் - என் -
நாட்டான்பால்வெறுப்புறும் குற்றஞ்செய்தார்
ஆதலால்
விரைந்தன்னாரை நொறுக்கினார்
முதுகெலும்பைத் தமிழர்கள் என்ற சேதி குறித்த
சொல்கேட்டின்பத்திற் குதிக்கும் நாள் எந்தநாளோ?"
என்ற புரட்சிக் கவிஞரின் பாடல் ஆவது உங்களுக்கு நினைவிருக்கிறதா?
உங்கள் நேரமும் நினைப்பும் உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுவதிலேயே இருக்கும் போது இவையெல்லாம் எங்கே நினைவில் இருக்கப் போகிறது?
"பதவி தோளில் போடும் துண்டு,
கொள்கை நாம் உடுக்கும் வேட்டி"
என்று அண்ணா சொல்லியதை கிளிப்பிள்ளை போல் சொல்கிறீகளே ஒழிய உங்கள் செயல் அதற்கு முற்றிலும் முரணாகவே இருக்கிறது. எதையும் நியாயப்படுத்துவது உங்களுக்கு கைவந்த கலை.
பாரதிய ஜனதா கட்சியினரைப் பண்டாரங்கள், பரதேசிகள் எனத் திட்டிவிட்டு "அரசியலில் தீண்டாமை இல்லை" என்று சொல்லிக்கொண்டு அவர்களோடு கை கோர்த்தவர்கள் நீங்கள் அல்லவா?
என்ன செய்வது கொண்ட கொள்கையில் சறுக்குவது என்று முடிவெடுத்து விட்டால் நொண்டிச் சாட்டுக்களும் சப்பைக் கட்டுகளும் வண்டி வண்டியாய் வரத்தான் செய்யும்!
எமக்கு உள்ள ஆழ்ந்த கவலை எல்லாம் வரலாறு கொடுத்த வாய்ப்பைத் தக்கமுறையில் நீங்கள் பயன்படுத்தத் தவறிவிட்டீர்கள் என்பதுதான். தமிழர்களது வரலாறு எழுதப்படும்போது "உரோம் பற்றி எரியும் போது அரண்மனையில் இருந்து கொண்டு பிடில் வாசித்த நீரோ மன்னனைப் போல் தமிழீழம் வெந்தழலில் வேகும் போது கோட்டையில் இருந்து கொண்டு குழல் வாசித்த முதல்வர் கருணாநிதி" என்றே எழுதப்படும்.
வணக்கம்.
அன்புடன்,
நக்கீரன், தலைவர்
Comments