தமிழின அழிப்பு நடவடிக்கையை ஐநாவும் சர்வதேச சமூகமும் அங்கீகரிக்க முனைவதாக புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்

ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் தமிழின அழிப்பு நடவடிக்கையை ஐநாவும் சர்வதேச சமூகமும் அங்கீகரிக்க முனைவதாக தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

ஸ்ரீலங்கா அரசாங்கம் பாதுகாப்பு வலயத்தின் மீது தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் இன அழிப்பு தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் திராணியற்ற ஐநாவும் சர்வதேச சமூகமும் விடுதலைப் புலிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து தமது தரப்பு தவறுகளை மூடி மறைக்க முற்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் .

தமது தாயகத்தில் இருந்து மக்களை பலவந்தமாக வெளியேற்றுவதற்கு எந்த ஒரு மனித உரிமை சட்டமும் இடம்கொடுக்காத நிலையில் மனித உரிமைகள் குறித்து அக்கறை படும் சர்வதேசம் வன்னியில் இருந்து தமிழ் மக்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக ஸ்ரீலங்கா அரசாங்க தடை முகாம்களுக்கு அனுப்பி வைப்பதற்கு முயல்வதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யுத்த நிறுத்தம் சாத்தியமற்றது என ஜோன் ஹோம்சின் கூற்றும் விடுதலைப்புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி வருவதாக பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களின் கடும் தொனியிலான சாடல்களும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவான அனைத்துலக நிலைப்பாட்டை வெளிப்படுத்தி நிற்பதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளார்கள்

Comments