இந்த மோதல்களில் படைத்தரப்பு சந்தித்த பேரழிவுகளை தொடர்ந்து கடந்த புதன்கிழமை (01) வன்னி பகுதியில் மோதல்கள் ஓரளவு மந்த நிலையை அடைந்துள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவித்துள்ளன.
சிறீலங்காவின் எல்லா பகுதிகளிலும் இருந்தும் வன்னி பகுதிக்கு பெருமளவான இராணுவத்தினரை நகர்த்திய சிறீலங்கா அரசு, கடந்த வாரத்தில் இருந்து வன்னி மீதான படை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருந்தது. கொழும்பு நகரத்தின் பாதுகாப்புக்களும் கடந்த மாதம் 23ம் நாளுடன் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கொழும்பில் உள்ள எல்லா வீதிகளிலும் தற்போது கடற்படைச் சிப்பாய்களையே காணமுடிகின்றது.
எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் போரில் பெரும்பகுதியை நிறைவுசெய்துவிட அரசு முயன்று வருகின்றது. இந்த நடவடிக்கைக்கு உதவியாக நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் படையணிகளினதும், அதற்கு துணையாக பின்னணியில் இயங்கிவரும் படையணிகளினதும் படைவலுவும், சூட்டுவலுவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 59வது படையணியுடன் இரண்டு புதிய பிரிகேட்டுக்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன், 55வது மற்றும் நடவடிக்கை படையணி மூன்று என்பவற்றுடன் தலா ஒவ்வொரு புதிய பிரிகேட்டுக்களும் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும் 30,000 படையினரை பின்னிருக்கையாக வைத்துகொண்டு ஐந்து டிவிசன்களை சேர்ந்த 40,000 படையினரை நேரடியாக களத்தில் அரசு இறக்கியிருந்தது. புதுக்குடியிருப்புக்கு வடக்குப்புறமாக 55வது படையணியும், கவசத்தாக்குதல் படையணியின் பெரும் பகுதியும், கொமோண்டோ படையணி ஒன்றும் நடவடிக்கையில் ஈடுபட, புதுக்குடியிருப்புக்கு வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் 58வது படையணி, இரண்டாவது கொமோண்டோ பிரிவு, நடவடிக்கை படையணி 3 என்பன நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன. தென்முனையில் 53வது படையணி மற்றும் நடவடிக்கை படையணி 8 என்பன நகர்வில் ஈடுபட படைத்தரப்பு அவர்களுக்கு செறிவான எறிகணை மற்றும் வான்குண்டு தாக்குதல் உதவிகளை வழங்கிவந்தது.
கடந்த வாரத்தின் சில நாட்களில் 24 மணிநேரத்தில் 15 இற்கு மேற்பட்ட தடவைகள் கூட வான் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டிருந்தன. இராணுவம் தனது சுடுவலுவை அதிகரிக்கும் நோக்கத்துடன் 30 மி.மீ மற்றும் 23 மி.மீ கனரக பீரங்கிகளை இலகுகாலாட் படையணியுடன் இணைத்துள்ளதுடன், பாகிஸ்தானில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட பக்தர் சிகான் என்னும் ஏவுகணைகளையும் தரை மற்றும் கடல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக சாலை கடற்கரையில் நிறுவியுள்ளது. மேலும் விடுதலைப் புலிகளின் பதுங்குகுழிகளை தகர்ப்பதற்கு உதவியாக அதனை வாகனங்களிலும் பொருத்தியுள்ளது. இந்த ஏவுகணைகளை காவுவதற்கு என சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மிலான் ரக ஜீப் வண்டிகளை இந்திய மத்திய அரசு வழங்கியிருந்தது.
கடந்த திங்கட்கிழமை அதிகாலை புதுக்குடியிருப்பு கடல்பகுதி ஊடாக வடமராட்சி கிழக்கு கடற்பகுதியை அடைய முற்பட்ட பொதுமக்களின் படகுகள் மீது இந்த ஏவுகணைகளை கொண்டே 55வது படையணியினர் தாக்குதலை நடத்தியிருந்தனர். கடந்த வாரம் படையினர் மேற்கொண்ட பல வலிந்த தாக்குதல்களை எதிர்த்து விடுதலைப் புலிகள் பல வழிமறிப்பு சமர்களை நடத்திய அதே சமயம் மட்டுப்படுத்தப்பட்ட வலிந்த தாக்குதல்களையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த புதன்கிழமை (25) அதிகாலை இரணைப்பாலை கிழக்கு பகுதியில் நிலைகொண்டிருந்த 58வது படையணியினர் மீது ஒரு ஊடறுப்பு தாக்குதலை மேற்கொண்ட அதே சமயம், புதுக்குடியிருப்பின் கிழக்கு பகுதியில் நகர்வில் ஈடுபட்டு வந்த 53 மற்றும் 8வது நடவடிக்கை படையணியினர் மீதும் வலிந்த தாக்குதல் ஒன்றை நிகழ்தியிருந்தனர். சம காலத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலால் படைத்தரப்பு பாரிய அதிர்ச்சியடைந்ததுடன், விடுமுறையில் இருந்த 58வது படையணியின் கட்டளை தளபதி பிரிகேடியர் சவீந்தர் டி சில்வா அவசரமாக களமுனைக்கு அழைக்கப்பட்டிருந்தார். மேலும் இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தலைமையகத்திற்கு விரைந்து பதில் தாக்குதலையும் பொறுப்பெடுத்துக் கொண்டார்.
58வது படையணியின் 7 சிங்க றெஜிமென்ட் அற்றும் 8வது கஜபா றெஜிமென்ட் பற்றாலியன்களின் நிலைகள் மீது நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலின் ஆரம்ப கட்டத்தில் 7வது சிங்க றெஜிமென்ட் பற்றாலியனின் பல பதுங்குகுழிகள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டதுடன், படையணிகளும் 500 மீற்றர் து£ரம் பின்வாங்கியிருந்தன. இந்த மோதல்களில் படைத்தரப்பு 80 மேற்பட்ட சிப்பாய்களை இழந்ததுடன், பல நுாறு படையினர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதல் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள படை அதிகாரிகள் இது இந்த மாதத்தின் ஆரம்பமான 4-8 நாள் வரையிலும் தேவிபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்பு தாக்குதலை போன்ற பெரும் தாக்குதல் இது என தெரிவித்துள்ளனர்.தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதிக்கு 14வது கஜபா றெஜிமென்ட் பற்றாலியன் படையணி அனுப்பப்பட்டதுடன், தமது பதுங்கு குழிகளின் வடிவத்தை படையினர் மாற்றி அமைத்துள்ளதாகவும், அதாவது 'ப' வடிவத்தில் அவை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை அதிகாலை ஆரம்பமாகிய சமர் மாலை வரை தொடர்ந்ததுடன், அன்று மாலை 20வது கஜபா படையணி மீதும் விடுதலைப் புலிகள் ஊடறுப்பு தாக்குதல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இந்த ஊடறுப்பு தாக்குதல்களை தொடர்ந்து விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் இராணுவத்தின் பின்னணி நிலைகளுக்குள் ஊடுருவியிருக்கலாம் என்ற அச்சம் படைத்தரப்பை ஆட்கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து படைத்தரப்பு தனது சிறப்பு படையணிகளையும், கொமோண்டோ பிரிவுகளையும் அங்கு தேடுதலில் ஈடுபடுத்தி வருகின்றது. கடந்த மாதம் 4ம் நாள் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்பு தாக்குதலின் போதும் விடுதலைப் புலிகளின் ஆழஊடுருவும் சிறப்பு படையணிகள் பல இராணுவத்தின் பின்னணி நிலைகளுக்குள் ஊடுருவியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு ஊடுருவிய விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகளில் ஒன்றான லெப்.கேணல் விக்டர் கவச எதிர்ப்பு படையணியினர் சிறீலங்கா இராணுவத்தின் பிரதான போர் டாங்கியான ரீ-55 ரக டாங்கி ஒன்றை ஆனந்தபுரம் பகுதியில் வைத்து தாக்கி அழித்திருந்தனர். டாங்கி மீது மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் 17 சிறீலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதே சமயம் 53வது படையணி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படையினரின் இரு பாதுகாப்பு நிலைகள் இழக்கப்பட்டதாக படைத்தரப்பு தகவல்கள் தெரிவித்திருந்தன. இதனிடையே இந்த தாக்குதலின் பின்னர் இராணுவம் தனது வளங்களை ஒன்று திரட்டி கடந்த வாரத்தின் இறுதி நாட்களிலும், இந்த வாரத்தின் முற்பகுதியிலும் பெரும் வலிந்த தாக்குதல்களை நிகழ்த்தியிருந்தது.
29ம் நாள் 53வது படையணி மற்றும் நடவடிக்கை படையணி எட்டு என்பன புதுக்குடியிருப்பு நோக்கி மேற்கொண்ட பாரிய நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கடுமையான எதிர்ச்சமரில் 53வது படையணியை சேர்ந்த 5வது விஜயபா றெஜிமென்ட், 6வது கஜபா றெஜிமென்ட், 7வது கெமுனுவோச் பற்றாலியன்கள் கடுமையான சேதங்களை சந்தித்திருந்தன. அதன் பின்னர் கடந்த 30ம் நாள் பளமாத்தளன் பகுதியை நோக்கி 55வது படையணியின் 55-2, 55-3 ஆகிய இரு பிரிகேட்டுக்கள் நகர்வை மேற்கொண்ட போதும் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு மணல் அரண்களை கைப்பற்றமுடியாது போனதுடன் இராணுவம் பெரும் இழப்புக்களையும் சந்திதிருந்தது.
55வது படையணியின் தாக்குதல் வலிமையுள்ள இலகுகாலாட்படை பிரிகேட்டுக்களாக இந்த இரண்டு பிரிகேட்டுக்களுமே இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை (31) அதிகாலை இராணுவத்தின் முன்னணி டிவிசன்கள் ஒன்றிணைந்து மூன்று முனைகளில் சமநேரத்தில் மிகவும் உக்கிரமான வலிந்த தாக்குதல் ஒன்றை படைத்தரப்பு மேற்கொண்டிருந்தது. 58வது படையணியின் இரண்டு பிரிகேட்டுக்களை (58-1, 58-2) சேர்ந்த 9வது கெமுனுவோச், 8வது கஜபா றெஜிமென்ட், 12வது கஜபா றெஜிமென்ட் 11வது சிறீலங்கா இலகுகாலாட்படையணி ஆகிய பற்றாலியன்கள் இரணைப்பாலைக்கு கிழக்காக இரு முனை நகர்வுகளை மேற்கொள்ள, 53வது படையணியும், நடவடிக்கை படையணி எட்டும் புதுக்குடியிருப்புக்கு தெற்காக நந்திக்கடலுக்கு சமாந்தரமாக நகர்வில் ஈடுபட்டதுடன், 55வது படையணியின் 55-3 மற்றும் 55-4வது பிரிகேட்டுக்கள் புதுக்குடியிருப்புக்கு வடக்காக பளமாத்தளன் பகுதியை நோக்கி நகர்வை மேற்கொண்டிருந்தன.
அதாவது நான்கு டிவிசன்களை சேர்ந்த ஐந்து பிரிகேட்டுக்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன. இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான முறியடிப்பு தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். ஏறத்தாழ 20 மணிநேரம் நீடித்த இந்த சமரில் படையினரின் முன்னனி பற்றாலியன்கள் பல கடுமையான சேதங்களை சந்தித்திருந்தாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் அன்று மாலை இரணைப்பாலைக்கு கிழக்குப்புறம் நிலைகொண்டுள்ள 20வது கஜபா றெஜிமென்ட் படையணியின் நிலைகளையும் விடுதலைப் புலிகள் மீண்டும் ஊடுருவி தாக்கியுள்ளனர்.
மேஜர் குமார பீரீஸ் தலைமையிலான இந்த பற்றாலியனின் படையினர் விடுதலைப் புலிகளின் 12.7 மி.மீ கனரக துப்பாக்கி அணியினரின் தாக்குதலில் சிக்கி அதிக சேதங்களை சந்தித்ததாக படைத்தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. இதுவரை நிகழந்த மோதல்களில் இந்த மோதலே மிகவும் உக்கிரமாக இருந்ததாக இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகர் ஒருவர் கருத்து கூறியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த மோதல்களை தொடர்ந்து கடந்த 31ம் நாள் வரையிலுமான 7 நாட்கள் நடைபெற்ற உக்கிர சமரில் 1412 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 6,123 படையினர் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகளின் வன்னி சமர்க் கட்டளைப்பீட வட்டாரங்கள் கடந்த செவ்வாய்கிழமை தெரிவித்திருந்தன.
இராணுவத்தின் போரிடும் வலு கொண்ட 58 மற்றும் 53வது படையணிகளும், 55-3 பிரிகேட்டும் இந்த மோதல்களில் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளன. இராணுவத்தின் இலத்திரனியல் தொலைதொடர்ப்பு தகவல்களை இடைமறித்து விடுதலைப் புலிகள் தகவல்களை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. அதாவது கடந்த ஏழு நாட்களில் சிறீலங்கா இராணுவத்தின் ஒரு டிவிசன் படையினர் களமுனைகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர். மேலும் விடுதலைப் புலிகளின் பீரங்கிகளில் கணிசமானவற்றை கைப்பற்றி விட்டதாக அரசு பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்த நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற சமர்களில் விடுதலைப் புலிகள் 122 மி.மீ, 130 மி.மீ மற்றும் 152 மி.மீ பீரங்கிகளையும், இலகுவாக நகர்த்தும் திறன் கொண்ட 38 மி.மீ பீரங்கிகளையும் அதிகளவில் பயன்படுத்தி உளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
தென்னிலங்கை தகவல்களின்படி மார்ச் மாதத்தின் கடந்த 29ம் நாள் வரையில் படைத்தரப்பு ஏறத்தாழ 3,000 பேரை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் பல ஆயிரமாக உயர்ந்துள்ளது. விடுதலைப் புலிகளின் வழிமறிப்புச் சண்டைகள் மற்றும் மட்டுப்படுத்திய வலிந்த தாக்குதல் நடவடிக்கையின் காரணமாகவே இந்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இது சிறீலங்கா படைகளிடையே மனச்சோர்வையும் அச்சத்தையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது வலிந்த தாக்குதல் மனநிலையில் இருந்து தற்காப்பு மனநிலையை நோக்கி சிறீலங்கா படைகள் மெல்ல மெல்ல சரிந்து செல்கின்றன. ஆனால் களமுனையில் என்ன நடைபெறுகின்றது என்பது கூட தெரியாத ஒரு நிலையில் தென்னிலங்கை சிங்கள மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் வன்னியில் தற்போது தங்கியுள்ள ஏறத்தாழ 250,000 மக்களில் போரிடும் தகமையுள்ள பல ஆயிரம் மக்களுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கும் நிலையில் விடுதலைப் புலிகளின் ஆயுத வளங்கள் இருப்பதாகவும், அவ்வாறு நிகழ்ந்தால் தற்போது வன்னியில் குவிக்கப்பட்டுள்ள படையினரின் படை வலுவை விட விடுதலைப் புலிகளின் படை வலு உயர்ந்துவிடும் எனவும் படைத்தரப்பு கடந்த வாரம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் மோதல்களில் இராணுவம் நலிவடைந்து வருவதும், தமது படை வளங்களை அதிகளவில் அதிகரிக்கும் வாய்ப்புக்களை விடுதலைப் புலிகள் கொண்டுள்ளதும் தற்போது சிறீலங்கா படை அதிகாரிகளையும், அரச தலைவர்களையும் அச்சமடைய வைத்துள்ளது.
வேல்ஸ் இல் இருந்து அருஷ்
நன்றி
ஈழமுரசு (03.04.2009)
Comments