சிதம்பரங்களின் வாயை மூட வேண்டும் என்றால் அவர்களை தேர்தலில் தோற்கடியுங்கள்: கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம்
ஆனால் போர் நிறுத்தம் இல்லை என சிங்கள இராணுவ பேச்சாளர் சொல்லிவிட்டார். சிங்கள அரசும் சொல்லிவிட்டது. விமானத் தாக்குதலும் கனரக ஆயுதத் தாக்குதலும் நிறுத்தப்படும் எனத் தெரிவித்ததும் பொய்யாகிவிட்டது. தாக்குதல் தொடர்கிறது. நேற்று மட்டும் 5000 செல்கள் விழுந்து வெடித்ததில் 272 தமிழர்கள் பலியாகியுள்ளார்கள்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதற்குத் தலைமை தாங்கிப் போராடி வரும் தேசியத் தலைவர் பிரபாகரனைப் பற்றித் தெரியாத அறிவிலிகளே அவரைப் பார்த்து "ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டுப் பேச்சுக்கு வந்தால் அவர்களுடைய உயிர்களுக்கு ஆபத்து நேரும் என்று அஞ்சுவதற்கு முகாந்திரம் இல்லை" என்று சொல்வார்கள்.
அமைச்சர் சிதம்பரம் வைகைப் புயல் வடிவேலுவை விட நல்ல நகைச்சுவை நடிகர் என்பதை எண்பித்துக் கொண்டிருக்கிறார். "நாய்க்குத் தெரியுமா போர்த் தேங்காயின் அருமை" என்ற பழமொழி தமிழில் உண்டு. சிதம்பரம் விடுதலை என்றால் வீசை என்ன விலை என்று கேட்கக் கூடியவர். மரண பயத்தை வென்றவர்களே தமிழீழ விடுதலைப் புலிகள்.
எனவே அவர்களைப் பார்த்து "ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டுப் பேச்சுக்கு வந்தால் அவர்களுடைய உயிர்களுக்கு ஆபத்து நேரும் என்று அஞ்சுவதற்கு முகாந்திரம் இல்லை" என்று சொல்வது அவரது அறியாமையைக் காட்டுகிறது.
தெரியாமல்தான் கேட்கிறோம். ஆயுதங்களை கீழே போடுங்கள் என்று சொல்வதற்கு சிதம்பரம் யார்? தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தவரா? ஆயுதங்கள் கொடுத்தவரா? இல்லை பணமாவது கொடுத்தவரா?
சிதம்பரத்தின் திமிர்ப் பேச்சு அவரது வாய்க் கொழுப்பையும் மண்டைக் கனத்தையுமே காட்டுகிறது. அவருக்கு நாம் சொல்லும் அறிவுரை "நாகாக்க, காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்கப்பட்டு" என்பதுதான்.
இந்தியா என்ன என்ன இராணுவ உதவிகளை கொடுங்கோல் சிங்கள அரசுக்குச் செய்தது, செய்து வருகிறது என்பதை சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய பட்டியல் போட்டுக் காட்டியிருக்கிறார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு பிரதமர் மனமோகன் சிங் எழுதிய கடிதத்தில் சிறிலங்காவிற்கு அதன் பாதுகாப்புக் கருதி இந்தியா ஆள், ஆயுதங்கள் கொடுத்ததை ஒத்துக் கொண்டுள்ளார்.
கடைசியாகக் கிடைத்த செய்தி சிதம்பரம் கைகட்டி வாய்பொத்திச் சேவகம் செய்யும் காங்கிரஸ் அரசு தலைவர் பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி முதன்முறையாக அரசமுறையில் கேட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.
அத்துடன் விடுதலைப் புலிகள் சரணடைவதுடன் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென என்.ரி.ரி.வி.க்கு வழங்கிய விசேட செவ்வியில் இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிதம்பரங்களின் வாயை மூட வேண்டும் என்றால் எதிர்வரும் தேர்தலில் மானமுள்ள தமிழக வாக்காளர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை மண்கவ்வ வைக்க வேண்டும்.
Comments