இங்குள்ள குழந்தைகள் தாலாட்டுப் பாடல்களைக் கேட்கவில்லை. அவர்கள் கேட்பதெல்லாம் இறந்து கொண்டிருப்பவர்களின் மரண ஓலத்தைத் தான்

இலங்கை அரசாங்கம் அதனைப் பாதுகாப்பு வலயம் என்று கூறலாம். ஆனால் அங்கு பாதுகாப்பில்லை. எந்தக் கவனிப்பும் இல்லாத பிரதேசம் அது. உணவும் கூட எதுவும் இல்லை.

கடந்த மாத ஆரம்பத்தில் 24 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் காயமுற்றிருந்தார். 12 நாட்களின் பின்னர் மார்ச் 14ஆம் திகதி தற்காலிக இடத்தில் இயங்கி வரும் ஒரேயொரு வைத்தியசாலையில் அவர் ஒரு குழந்தையைப் பிரசவித்தார்.
குழந்தையின் தொடையில் ஒரு சிறிய ஷெல்துண்டு இருப்பதை மருத்துவப் பணியாளர்கள் அவதானித்தனர். பிறந்த அந்தக் குழந்தை பால்குடிப்பதற்கு முன்பதாகவே சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியதாயிற்று.

ஒரு வகையில் இந்தத் தாயாரும் குழந்தையும் அதிஷ்டவசமானவர்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஷெல் தாக்குதல் காரணமாக படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இன்னொரு கர்ப்பிணித்தாயாரின் வயிற்றில் இருந்த ஆறுமாத சிசுவின் பாதத்தில் செல் துண்டு ஒன்று கடுமையாகத் தாக்கியுள்ளது. அந்தக் கர்ப்பிணித்தாயாரும் சிசுவும் பின்னர் மரணமடைந்திருந்தனர்.
விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் கடுமையான மோதல் இடம்பெறும் பிரதேசத்தில் இவை எல்லாம் சர்வசாதாரணமானவை. இப்பிரதேசத்தில் ஏறத்தாழ மூன்று இலட்சம் மக்கள் இருக்கிறார்கள். இப்பிரதேசம் 12 கி.மீற்றர் நீளமானதும் 1.5 கி.மீ அகலமானதுமான இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயப் பிரதேசமாகும். மாத்தளன் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான பகுதி கடலால் சூழப்பட்டுள்ளது. மறுபுறத்தில் கடனீரேரி இருக்கிறது. போர் கடனீரேரியின் மேற்குப் புறத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் கடல் வழியாக இந்தப் பாதுகாப்பு வலயத்துக்குள் போய் வர முடியும்.

இந்தப்பிரதேசம் ஒவ்வொரு நாளும் படுகொலைக் களமாக இருக்கிறது. வைத்தியசாலை மீதும், நிவாரண உதவி வழங்குமிடங்களிலும், தெருக்களிலுமாக ஷெல் இப்பிரதேசம் எங்கணும் நாளாந்தம் வந்து விழுந்த வண்ணம் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணத்தின்படி நாளாந்தம் 63 பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். 145 பேர் படுகாயமடைகின்றனர்.

உயிரைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது என்பது அங்கு பெரும் சவாலாக இருக்கிறது. உணவு இல்லாத பிரச்சினை மிகப் பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
உணவு இருப்பு என்பது பெருமளவுக்கு இல்லாததால் வன்னி மிகப் பெரும் உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக உலக உணவு நிகழ்ச்சித் திட்டம் தெரிவித்திருக்கிறது.

இந்த மக்கள் நீண்டகாலமாக விவசாயம் செய்யும் வாய்ப்பற்று இருந்தனர். தேங்காயும் மீனும் மட்டும் தான் சந்தையில் கிடைக்கின்றது. ஆனால் தேங்காயின் விலை ரூபாய் 250. வெங்காயத் தாள்கள் கூட அங்கு கிடைப்பதில்லை. கடந்த மாதம் நான்கு சிறுவர்கள் அடம்பன் இலைகளைச் சாப்பிட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். 16 பேர் பட்டினி காரணமாக மரணமானதாக மாத்தளன் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

பெப்ரவரியில் தமக்குத் தேவையான உணவுப் பொருட்களில் 4950 தொன் 2.2 வீதமே 109.71 தொன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமூடாக கிடைத்ததாக கிளிநொச்சி ஆர்.டி.எச்.எஸ் தெரிவித்திருக்கிறது. ஆகவே 81 ஆயிரம் குடும்பங்களுக்கும் கிடைக்கும் உணவு பங்கீட்டடிப்படையிலேயே வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பாதுகாப்பு வலயத்துள் இருக்கும் மக்கள் தமது உயிரைக் கையில் பிடித்து வைத்திருப்பதற்காக நாளுக்கு ஒரு தடவையேனும் உணவு உண்பதற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். போசாக்கின்மை என்பது மிகச் சாதாரணமானது. குடிநீர் என்பதும் கூட இப்பிரதேசத்தில் மிகப்பற்றாக்குறையாக இருக்கிறது. இந்த 81 ஆயிரம் குடும்பங்களுக்கும் 10 இடங்களிலே வைத்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

சிறுசிறு கூடாரங்களிலேயே அவர்களுடைய நாட்கள் கழிகின்றன. ஷெல் தாக்குதலின் போதும், பல்குழல் ஏவுகணைத் தாக்குதலின் போதும், கிளஸ்டர் குண்டு வீச்சுக்களின் போதும் மக்கள் பங்கர்களுக்குள் பதுங்கிக் கொள்கிறார்கள். கடந்த மாதம் வீசிய காற்றும் பெருமழையும் இச்சிறு கூடாரங்களின் கூரையையும் சிதைத்து விட்டன. தற்காலிக மலகூடங்களும் பாதிப்புக்குள்ளாகின. இராணுவம் கட்டிடப் பொருட்களை இப்பிரதேசத்திற்கு எடுத்து வருவதற்கு தடைவிதித்துள்ளது. இதனால் மலசலகூடப் பிரச்சினை மிகப் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இதன்காரணமாக நீரால் பரவக்கூடிய வியாதிகள் இப்பிரதேசத்தில் பரவலாம் என மருத்துவப் பணியாளர்கள் அச்சம் கொள்கின்றனர்.

ஏன் இவ்வாறான இக்கட்டான நிலைக்குள் மக்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். அப்பிரதேசத்திலிருந்து அவர்கள் வெளியேறினால் மீள தமது பிரதேசத்திற்கு வர அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அத்தோடு இப்பிரதேசத்தில் வாழும் இளைஞர்கள் ஒருபோதும் இலங்கை இராணுவத்தின் கீழ் வாழ்ந்தவர்களில்லை. இலங்கை இராணுவத்தின் கீழான தமிழ் இளைஞர்களுடைய வாழ்க்கை பற்றி அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். படுகாயமடைந்தவர்களும் அவர்களைக் கவனிப்பவர்களுமே சர்வதேச செஞ்சிலுவைச்சங்க கப்பலூடாக அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள்.

சுகாதார நலன்பேண் நிலைமைகள் சீர்குலைந்து போயுள்ளன. ஒரேயொரு தற்காலிக வைத்தியசாலையே அங்கு இயங்கி வருகின்றது. இராணுவ நடவடிக்கைகள் காரணமாக உடையார்கட்டு, சுதந்திரபுரம், தேவிபுரம் வைத்தியசாலைகள் மூடப்பட்டு விட்டன. புதுமாத்தளனிலுள்ள பாடசாலைக் கட்டிடமே தற்போது தற்காலிக வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளது. அதற்குள் தான் சத்திர சிகிச்சைக் கூடமும் உள்ளது. அப்பாடசாலையின் விளையாட்டு மைதானம் சவச்சாலையாக மாறியுள்ளது.

வைத்தியசாலை பதிவுகளின்படி ஜனவரி 2009இலிருந்து மார்ச்16ஆம் திகதி வரை 500க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக மார்ச் 16 அன்று முல்லைத் தீவு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களைச் சேர்ந்த வைத்திய அதிகாரிகளான ர்p.வரதராஜா மற்றும் ரி.சத்தியமூர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலைக்கு எடுத்து வரப்படாமல் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் பற்றி எந்தப் பதிவுகளும் மேற்கொள்ளப்படாமலே போகிறது. வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்ட காயமடைந்தவர்களுள் பலர் அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தாலேயே மரணமாக நேர்கின்றது.

வைத்தியரான சத்தியமூர்த்தி அம்மக்களின் மிகுந்த நேசிப்பக்குரியவராக இருக்கிறார். காயமடைந்தவர்களை எடுத்துவர சாரதிகள் தயங்குகிற போது அவரே அம்புலன்ஸை எடுத்துச் சென்று விடுகிறார். காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துவர முடியாதபோது அவர்களுடைய குடிசைகளுக்கு அவரே சென்று விடுகிறார். பண்டேஜ் மற்றும் பாட் என்பன அங்கில்லை. பழைய துணிகளைக் கொண்டு பண்டேஜை அவர் தயாரித்துக் கொள்கிறார். முறிவுகளுக்கு பனைமர மட்டையை பாட்டாக உபயோகிக்கிறார். இப்போது அங்கு எரிபொருள் இல்லாமை காரணமாக மாட்டு வண்டில்களிலேயே காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு எடுத்து வரப்படுகின்றனர்.

அங்குள்ள சிறுவர்களின் நிலைமை மிக மோசமானதாக இருக்கிறது. 65ஆயிரம் சிறுவர்கள் உளரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் சிவமனோகரன் மற்றும் எட்மன்ட் ரெஜினால்ட் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இவ்வருடம் வன்னியில் 288 பாடசாலைகள் திறக்கப்படவே இல்லை. 7800 சிறுவர்கள் பாடசாலை செல்லும் வாய்ப்பை இழந்துள்ளனர். காப்பிணித் தாய்மார்களுக்கான போதிய மருத்துவப் பராமரிப்பின்மை காரணமாக சிசுமரண வீதம் அதிகரித்து வருகின்றது.

மார்ச் முதலாம் திகதிக்கும் 26ஆம் திகதிக்குமிடையில் 15 வயதுக்குட்பட்ட 49 சிறுவர்கள் ஷெல் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அறிக்கைகளை மேற்கோள்காட்டி நியூ சண்டே எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் 431 சிறுவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுள் மூன்றிலொரு பகுதியினர் தலையிலும் முகத்திலும் ஷெல் துண்டுகள் தாக்கியதில் காயமடைந்தவர்களாவர். 212 சிறுவர்கள் கை மற்றும் கால்களில் ஷெல்தாக்குதல் காரணமாகக் காயமடைந்தவர்கள்.

18 மாதங்களேயான இ.சந்திரகுமார் என்ற குழந்தை இனி ஒருபோதும் இயல்பாக நடக்க முடியாது. அவரது வலது கால் மார்ச் 14ஆம் திகதி அகற்றப்பட்டிருக்கிறது. சிவதர்சினியின் குழந்தை பாதுகாப்பு வலயத்துள் பட்டினி காரணமாக இறந்துள்ளது.
இங்குள்ள குழந்தைகள் தாலாட்டுப் பாடல்களைக் கேட்கவில்லை. அவர்கள் கேட்பதெல்லாம் இறந்து கொண்டிருப்பவர்களின் மரண ஓலத்தைத் தான்.
மீனா கந்தசாமி
கவிஞர், எழுத்தாளர், செயற்பாட்டாளர். சென்னை.
நன்றி: நியூ சண்டே எக்ஸ்பிரஸ்

Comments