இன்று நண்பகல் லண்டனில் ஆரம்பமான தமிழ் மக்களின் போராட்டமானது தொடர்ந்தும் கவலை தோய்ந்த எழுச்சியுடன் நடைபெறுகின்றது.
வயது வேறுபாடின்றி மக்கள் அலை அலையாக வந்த வண்ணமுள்ளனர்.
மக்கள் அமர்ந்துள்ள மையப்பகுதியை சூழ காவல் துறையினர் ஒர் வலயமிட்டு மேலும் மக்கள் அங்கு சேர்வதை தடுக்க முயன்ற போது , மக்கள் காவல் துறையினரின் வலயத்துக்கு அப்பால் அமர்ந்து கொண்டனர்.
மாபெரும் மனிதப்பேரவலத்திற்கான சாத்தியம் ஒன்று வன்னியில் தோன்றியுள்ள செய்தி அறிந்தவுடன் பிரித்தானியாவின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் லண்டனின் மையப்பகுதி நோக்கி வரத் தொடங்கி விட்டனர்.
இது பற்றிக் கருத்து தெரிவித்த ஒருவர் “தை 31ல் கூடியதுபோல் லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இங்கு இவ்விடத்தில் கூடினால் பிரித்தனியா அரசு நிட்சயம் எமது கோரிக்கையை ஏற்று , வன்னி மக்களை காத்திடும் “ என்று உணர்ச்சி பூர்வமாகக் கூறினார்.
இது பற்றிக் கூறிய மேலும் ஒருவர் “ இது ஒரு இக்கட்டான சூழ்நிலை , இதில் வாதங்கலுக்கு இடமில்லை , அவலப்படும் மக்கள் காக்கப்படுவதுதான் முக்கியம்.” எனக் கூறியதோடு மக்கள் அனைவரையும் லண்டனின் மையப்பகுதி நோக்கி வருமாறு அழைத்தார்.
உலக வரலாற்றில் இதற்கு முன்னும் பல பாரிய மனித படுகொலைகள் நடைபெற்றுள்ளன. ருவண்டா படுகொலைகள் சூடான் படுகொலைகள் என பட்டியல் இடலாம். இவை நடக்கும் என்பதை உலகம், அவை நடக்கும் முன்னரே நன்கு அறிந்திருந்தது. ஆனாலும் அவை தடுக்கப்படவில்லை. அப்படுகொலைகள் பின்னால் விசாரிக்கப்பட்டன. அவலப்பட்ட மக்கள் பின்னர் சாட்சியம் அளித்தனர். இந்த பட்டியலில் நம் இனமும் சேர்ந்துவிடுமா ? அல்லது உலகப் பந்தில் வாழும் 80 மில்லியன் தழிழ் மக்களிடம் அதனை தடுத்து நிறுத்தும் சக்தி உள்ளதா ? என அங்கு கூடியுள்ள மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இன்று இந்த நிலையில் உலகின் திக்கெட்டும் வாழும் தழிழர்கள் தாம் வாழும் நாடுகளில் தம்மாளான முழு அளவிளான போராடடங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. அப்போராட்டங்கள் ஒரு யுத்த நிறுத்ததம் என்ற தற்போதைய இலக்கை அடையும் வரை தொடரப்படவேண்டும். ஓய்வு ஒழிச்சல் அற்ற , தொய்வு அற்ற போராட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற வைராக்கியத்தோடு மக்கள் குளிரையும் பொருட்படுத்தாது அமர்ந்துள்ளனர்.
Comments