முல்லைத்தீவில் பட்டினியால் மேலும் ஒரு சிறுமி மரணம் எத்தியோப்பிய நிலையில் ஈழம்

நேற்று முன் தினம் ஒரு சிறுமி பட்டினி காரணமாக இறந்துள்ளதாக தெரியவருகிறது. இச் சிறுமியின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நிலவிவரும் கடும் உணவு தட்டுப்பாடு காரணமாக இச் சிறுமி பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது அவர் இறந்து விட்டதாகவும் இரட்டைவாய்கால் பகுதியில் வசித்துவரும் அவர் தாயார் சுகந்தினி தெரிவித்துள்ளார்.

சர்வதேச அமைப்புகள் கைவிட்ட நிலையில், உலக உணவுத்திட்டத்தின் உணவுகள் இவர்களுக்கு சென்றடையாத நிலையில் இங்கு இன்னும் பலர் பட்டினிச் சாவை எதிர்நோக்குகின்றனர்.

குறிப்பாக சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு தற்போது ஒரு வேளை கஞ்சி கொடுக்கபடுவதாகவும் அறியப்படுகிறது. சிறுவர்களும் மக்களும் நீண்டவரிசையில் காத்திருந்து கஞ்சியை பெற்றுக்கொள்ளும் படங்கள் நெஞ்சை உலுக்குகின்றன. சொந்த காணி, வயல்வெளிகள் வேளான்மை, என தலை நிமிர்ந்து, சொந்தத் தொழில் புரிந்து எவரிடமும் கை ஏந்தாமல் வாழ்ந்துவந்த எமது தமிழினம் தற்போது ஒருவேளை கஞ்சிக்கு அல்லாடுவதா ? தாய் தந்தையை இழந்து உற்றார் உறவினர்களை பிரிந்து அநாதைகளாக பல சிறுவர்கள் காணப்படுவதாகவும் இவர்களின் நிலையே இன்னும் மோசமாக இருப்பதாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படங்கள் அனைத்தும் வன்னியில் இருந்து நேற்றைய தினம் (17.04.2009) பெறப்பட்டவை. காப்புரிமை அற்றவையாக நாம் இதனை பிரசுரித்துள்ளோம். ஆகையால் உறவுகளே, இந்த படங்களை உங்கள் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித ஆர்வலர்கள் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களிடம் காட்டி ஆவனை செய்யுமாறு அதிர்வு இணையம் தாழ்மையுடன் வேண்டி நிற்கிறது.

Comments