புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ள மக்கள்

வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வெளியேறி, வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள மக்கள் மிகப்பெரும் மனித அவலத்தில் திட்டமிட்டு சிக்கவைக்கப்பட்டுள்ளனர் என அந்த இரு இடங்களில் இருந்தும் 'புதினம்' செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் அனுப்பிவைத்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா அரசின் அறிவித்தலின் படி - இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரம் மக்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக புள்ளி விபரங்களை காட்டியுள்ளது.

ஆனாலும் அவர்களில் பெரும் பகுதியினர் இன்னும் வவுனியாவில் உள்ள நலன்புரி முகாமுக்கு கொண்டுவரப்படவில்லை.


[படம்: அஸோசியேற்ரற் பிறஸ்]

இன்னும் பலர் பற்றிய புள்ளி விபரங்கள் மாத்திரமே உள்ளனவே தவிர அவர்களின் நிலை பற்றி சிறிலங்கா அரசு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

இவர்களில் பலர், வவுனியாவில் - ஆள் நடமாட்டம் அற்ற - ஓமந்தை மகாவித்தியாலயம் அமைந்துள்ள பகுதியில் சிறிலங்கா படையினரால் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை கணக்கு எடுத்துப் பதிவு செய்வதாகக் கூறி சிறிலங்கா படையினர் அங்கு தங்கவைத்து அவர்களைத் தரம் பிரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை அந்த பகுதியில் ஏராளமான இளவயது ஆண், பெண்கள் குடும்பத்தினரிடம் இருந்து பிரிக்கப்பட்டு வேறு எங்கோ கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பல குடும்பங்களில் வளர்ந்த வயதானவர்களையே பிரித்து வைத்து - அவைகளைச் சேரவிடாமல் சிறிலங்கா படையினர் தடுத்தும் வருகின்றனர்.

மாற்றுப் புடவை இன்றி உடுத்த உடையுடன் வந்தவர்களை தான் மீட்டு எடுத்து காப்பாற்றுவதாக சிறிலங்கா அரசு வெளியில் செய்துவரும் பரப்புரைக்கு அமைய அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகள் துளிகூட இன்னும் வழங்கப்படவில்லை.


[படம்: அஸோசியேற்ரற் பிறஸ்]

சிறிலங்கா அரசு மற்றும் படைத்தரப்பு அறிவிப்பு படி - 80 ஆயிரம் வரையான மக்கள் இன்னனும் ஓமந்தையில் பதிவுகளுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதுவித அடிப்படை வசதியும் அற்ற நிலையில் - மக்கள் நடமாட்டம் எதுவும் அற்ற சூழலில் - ஓமந்தை மகாவித்தியாலய கட்டடம் மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள பகுதிளில் அந்த மக்கள் சிறிலங்கா படையினரின் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது மட்டுமல்லாமல் - வவுனியா பகுதியில் இருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களைக் கூடச் சந்திக்க சிறிலங்கா படையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை (20.04.09) தொடக்கம் மாலை ஒருவேளை மாத்திரம் அவர்களுக்கு உணவு வழங்கப்படுகின்றது.

அத்துடன், குடிப்பதற்கு குளிப்பதற்கு இயற்கை கடன்களின் வசதிக்கு தேவையான தண்ணீர் முற்றுமுழுதாக அற்ற நிலையில் உள்ளது.

இதேவேளையில் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மக்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளதாக அறிய முடிகின்றது.


[படம்: அஸோசியேற்ரற் பிறஸ்]

முன்னரே இடம்பெயர்ந்து வந்த 6 ஆயிரம் வரையான மக்களுடன் தற்போது வந்துள்ள மேலும் பல ஆயிரம் மக்களையும் சிறிலங்கா படையினர் ஒரிரு இடங்களிலேயே தங்க வைத்துள்ளதுடன், யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்ட மக்களின் சரியான எண்ணிக்கை இதுவரை சிறிலங்கா படையினரால் வெளியிடப்படவில்லை.

தென்மராட்சியில் - நாவற்குழி பனை ஆராய்ச்சி நிலையம், சாவகச்சேரி இந்துக் கல்லூரி, கொடிகாமம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, திருநாவுக்கரசு வித்தியாலயம், மிருசுவில் திருக்குடும்ப கன்னியர் மடம், கைதடி சைவச் சிறார் இல்லம், கைதடி ஆயுள்வேத மருத்துவமனை மாணவர் விடுதி ஆகிய இடங்களில் இந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கும் அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை.

உடுத்த உடையுடன் வந்த இவர்கள் மாற்றுத்துணி கூட இல்லை.

பாடசாலை தண்ணீர் தொட்டிக்குள் சிறிலங்கா படையினரால் தண்ணீர் நிரப்பி விடப்பட்டு குடிநீராக அருந்தும்படி சொல்லப்பட்டுள்ளனர்.

இருந்தபோதும் - அதனை அள்ளி எடுப்பதற்கு சிறு கிண்ணம் கூட வழங்கப்படாததால், அவர்கள் காற்றில் பறந்து வரும் பிளாஸ்டிக் பைகளை தேடி எடுத்து அவற்றை வைத்து தண்ணீர் அள்ளி குடிக்கும் அவலத்தில் இருக்கின்றனர்.


[படம்: அஸோசியேற்ரற் பிறஸ்]

எல்லா மக்களையும் கட்டடங்களுக்குள் தங்க வைக்க முடியாத இட நெருக்கடி இருப்பதால் - பாடசாலை மைதானங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் - குறிப்பாக குழந்தைகள் - கொளுத்தும் வெயிலின் தாக்கத்தாலும், பசியாலும் துடிக்கின்றனர்.

இந்த கொடுமைகளை நேரடியாகப் பார்த்தும் கூட, இந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி ஏதும் செய்ய முடியாதுவாறு சிறிலங்கா படையினர் தடுத்து வருகின்றனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் படும் கொடுமைகளை வீதியால் செல்லும் ஏனைய தமிழர்கள் கண்டுவிடுவதை அறிந்த சிறிலங்கா படையினர், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடசாலை வேலிகள் மற்றும் மதில்களுக்கு உயரமாக மறைப்பிட்டு வருகின்றதுடன், அந்தப் பகுதிகளுக்கச் செல்லவிடாது மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதேவேளையில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் முற்புற வாயில் கதவைக்கூட தகரம் இட்டு முட்கம்பிகளால் மறைப்பிட்டு வைத்துள்ளனர்.

ஒவ்வொரு நாளும் பிற்பகல் 4:00 மணிக்கு மாத்திரம் ஒருவேளை உணவு வழங்கப்படுகின்றது. ஏனைய நேரங்களில் உணவு வழங்கப்படுவதில்லை.

இதற்குள் - யாழ்ப்பாணத்தில் இப்போது பொக்குளிப்பான், அம்மை நோய் பலருக்கு ஏற்பட்டுள்ளதால் இந்த மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கும் அவை பரவும் ஆபத்து உருவாகின்றது.

இதேநேரம் கடந்த சில நாட்களாக - பலாலி நோக்கி - கடும் காவலுக்கு மத்தியில் - 4 பேருந்துகளில் வன்னியில் இருந்து வந்த இளைய ஆண், பெண்கள் பலர் விசாரணைக்கு என அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலர் கதறி அழுத நிலையில் பேருந்துகளில் ஏற்றப்பட்டு கொண்டுசெல்லப்பட்டதை வீதியோரங்களில் நின்ற பெருமளவு மக்கள் கண்டுள்ளனர்.

Comments