விடுதலைப் புலிகள் மட்டுமே உலகத் தமிழர்களின் பன்னாட்டு முகவரி

ஏறத்தாழ 32 ஆண்டு கால விடுதலைப் போராட்டம், சொல்லொணாத இழப்புகள், எழுச்சியும் வீழ்ச்சியும் கலந்த ஒரு கலவையான பயணம், காலத்தை வென்று, விடுதலையின் வெம்மையைத் தணியாமல் காப்பாற்றிக் களத்தில் இருக்கும் காரணி, உலக வல்லாதிக்கங்களுக்கு எதிராகச் சமரில் இருக்கும் ஒரே இயக்கம், அரச ஒடுக்குமுறை மற்றும் பேரினவாத மேலாதிக்கம் கட்டுக்கடங்காமல் திமிறிப் பாய்ந்த போது வரலாற்றுத் தேவையாகத், தன்னியல்பாகத் தோன்றிய ஒரு இயக்கம், உண்மையில் தனித்துவம் மிக்க உலகின் முந்தைக் குடியின் முகவரியாகப் பரிணமித்திருக்கிறது.

Prabakaran உளவியல் ரீதியாக இன்று ஒவ்வொரு தமிழரும் புலிகளை தங்கள் இனத்தின் முற்று முழு முகவரியாகவும், ஏகப் பிரதிநிதிகளாகவும் சிந்தனை செய்தது, உலகின் பல்வேறு நாடுகளில் புலிக்கொடி பறந்த போது வெட்ட வெளிச்சமானது. உளவியல் தாக்கங்கள் மனித இனக் குழுக்களுக்கு எப்போதும் வரலாற்றுத் தேவைகளின் அடிப்படையில் தோன்றும் வாழ்வாதார உரிமைகளின் மீது கட்டமைக்கப்படுகிறது. இன்றைக்கு உலகெங்கும் தமிழர்கள் தங்கள் வாழ்வாதார உரிமைகளில் ஒன்றான உளவியல் அமைதியை பெருமளவில் இழந்திருக்கிறார்கள். சிங்களப் பேரினவாதம் எம்மக்களின் மன அமைதியை குலைக்க முயலும் போதெல்லாம் அந்த வெற்றிடங்களை நிரப்பிச் சமன்படுத்தும் பணியைச் செவ்வனே செய்தவர்கள் விடுதலைப் புலிகள் தான், அவர்கள் மக்களின் நம்பிக்கையை, விடுதலை நோக்கிய அவர்களின் தாகத்தைத் தணியாமல் வைத்திருந்தார்கள். வெற்றியோ, தோல்வியோ விடுதலைப் போராட்டத்தின் சமரில் எமது இன எதிரிகளை நேருக்கு நேர் நின்று எதிர் கொள்ளும் ஆற்றல் இன்றளவும் விடுதலைப் புலிகளுக்கு மட்டும் தான் இருக்கிறது என்பதை யாரால் மறுக்க முடியும்.

தங்கள் குறிக்கோள்களை அடையத் தேவையான தெளிவான சிந்தனைகளோடு அவர்கள் விடுதலையை நோக்கிய பயணம் செய்கிறார்கள், கடந்த மாவீரர் நாள் உரையில் தமிழீழத் தேசியத் தலைவர் தனது உரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்,

" இது எமது மண், இந்த மண்ணிலே தான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். எங்கள் மூதாதையரின் மூச்சுக்காற்று இந்த மண்ணில் கலந்திருக்கிறது"

இந்த வாக்கியங்களின் பின்னால் இருக்கும் மறைபொருள் மிக எளிதானது, நாம் தனி ஈழம் நோக்கியே பயணப்படுகிறோம் என்கிற அந்த எளிதான உரையின் சாரம் அறியாது தனி ஈழம் கேட்கவில்லை என்று திரிக்க முனைவது முற்றிலும் தவறான ஒரு முன்னுதாரணம், இதனை எந்தப் பேராசிரியர் செய்தாலும், அது சரியான நேரத்தில் செய்யப்படும் மிகத் தவறான வரலாற்றுப் பிழையாகவே உட்கொள்ளப்படுமே அன்றி புலமையாகவும் ஆய்வாகவும் அல்ல.

தமிழீழ விடுதலைப் புலிகள், மாகாண இடைவெளியை உருவாக்கினார்கள் என்கிற ஒரு குற்றச்சாட்டு சிறுபிள்ளைத் தனமானது. ஏனெனில், புலிகள் பல்வேறு மாகாண மற்றும் நிலப்பரப்பின் இடைவெளியைக் குறைத்து தங்கள் தேசத்தின் இயங்கு எல்லைகளை விரிவுபடுத்தினார்கள், ஒரு அகண்ட வெளியில் சங்கமிக்க வேண்டும், மொழி இன அடையாளங்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்கிற பணியைப் புலிகள் சரியாகச் செய்தார்கள், இதனூடே தன்னடையாளங்களில் திளைத்த வேறுபாடுகள் தனிமை கண்டன, அவ்வாறு தனிமை கண்ட அடையாளங்களை சிலர் மாகாணம் என்கிறார்கள், சிலர் மதம் என்கிறார்கள், இவை யாவற்றையும் விலக்கி விட்டுத் தங்கள் பாதையில் புலிகள் பயணப்பட்டு மிகுந்த இழப்புகளுக்கிடையில் ஒரு இரண்டாம் கட்ட அரசியல் நகர்த்தலுக்கு விடுதலையை கொண்டு வரும் சூழலில், புலிகள் மாகாண இடைவெளியை உருவாக்கினார்கள், அகலப்படுத்தினார்கள் என்றெல்லாம் ஆய்வுகள் செய்வது தமிழினத் துரோகமாகவே நோக்கப்படும் பேராபத்து இருக்கிறது.

கடந்த முப்பது ஆண்டுகளில் எந்த அரசியல் இயக்கமும், தனி மனிதனும், கொள்கையும் நிகழ்த்த முடியாத ஒரு தாக்கத்தை இன்று உலகத் தமிழினத்தின் முதுகெலும்பில் செலுத்திய புரட்சியை விடுதலைப் புலிகள் தனியாய் நின்று உறுதி செய்தார்கள், தமிழகத்தில் மட்டுமன்றி, உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஓரணியில் நின்று சாதிக்குழிகளில், மதக்குழிகளில் இருந்து விடுபட்டு பதுங்கு குழிகளில் துயருறும் தங்கள் உறவுகளை நினைத்துப் பதை பதைத்தார்கள், உயிரை மாய்த்துக் கொண்டார்கள் என்றால் இந்த விடுதலை உணர்வை, எமது தேசிய இன மொழி அடையாளங்களை அடைகாத்துக் கொடுத்தவர்கள் விடுதலைப் புலிகளே அன்றி வேறொருவருமில்லை. வெறும் ஆய்வுப் புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டு வித்தை காட்டுவதற்கான களம் அல்ல ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம். அதுதான் எமது இன மற்றும் மொழி அடையாளங்களை எமக்கு மீட்டுக் கொடுத்த பெருங்கொடை.

உலகின் எந்த ஒரு அங்கீகரிக்கப் படாத விடுதலை இயக்கமும் செய்யமுடியாத சாதனையாம் மரபு வழி ராணுவத்தைக் கட்டமைத்த பெருமைக்குரியவர்கள் புலிகள், அழியப் போகும் இனமாக அருகிக் கொண்டிருந்த எம்மினத்தை எந்தச் சிவப்புச் சித்தாந்தமும் செய்ய முடியாத வரலாற்றுச் சாதனையாய் தரை, கடல் மற்றும் வான் படைகளை ஒருங்கே கட்டமைத்த தமிழினத்தின் மீள்வடிவம் தான் புலிகள். களத்தில் நின்று தம் மண்ணையும் மக்களையும் காக்கப் போராடும் ஒரு விடுதலை இயக்கத்தினை விமர்சனம் செய்ய வெறும் புள்ளி விவரங்களும், கோட்பாடுகளும் மட்டுமே போதாது. மண்ணை நேசிக்கவும் அந்த மண்ணிலே எந்த நேரத்திலும் புதையுண்டு போவதற்கும் தயாரான ஒரு உணர்வுப் பெருவெளி வேண்டும், மாறாக வெறும் இதழ்களில் கதைக்கும் புலமை மட்டும் ஒரு போதும் போதாது.

உலகின் மூத்தகுடி என்கிற பெருமையை உறுதி செய்து வடிவம் கொடுத்தவர்கள் புலிகள் தான், அதனால் தான் உலகின் எந்த மூலையில் ஈழ ஆதரவுப் போராட்டம் நடந்தாலும், அதன் ஊடாகப் பட்டொளி வீசி சிலிர்ப்போடு ஒரு புலிக்கொடி ஏனும் சட்டென்று மலர்ந்து விடுகிறது.

விடுதலைப் புலிகள் ஆடம்பர வாழ்வை விரும்புகிறார்கள், அவர்கள் பொருளாதார மேம்பாடுகளில் கிடைத்த மேல்தட்டு வர்க்கச் சிந்தனைகளில் உழல்கிறார்கள் என்ற போலியான வறட்டுக் குற்றச்சாட்டு புலிகளின் மீது சுமத்தப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகள் தடை செய்து ஆயுத உதவியின் மூலம் போரின் கடும் பிடியில் சிக்க வைக்கப்பட்டிருக்கும் ஒரு விடுதலை இயக்கத்தை நோக்கி வைக்கப்படும் இது போன்ற குற்றச்சாட்டுகள், உளவியல் பற்றிய தாக்கங்களை அறிந்தவர்களுக்கு வெறும் நகைச்சுவை மட்டுமே, ஏனெனில் எந்த நேரமும் மரணம் தன்னை நோக்கி வரலாம் என்கிற உறுதியான மன நிலையில் இருக்கும் போராளி எவனும் வாழ்வின் பொருளாதாரச் சுவைகளை நுகரும் எண்ணம் கொண்டிருக்க இயலாது, உணவே நாம் சார்ந்திருக்கும் பொருள் இல்லை என்கிற ஒரு புதிய வரலாற்றில் "விடுதலை உணர்வே வாழ்க்கை" என்ற தமிழ்ச் சிந்தனையை வடிவமைத்தவர்கள் புலிகள். அவர்கள் மீது வைக்கப்படும் ஆடம்பர வாழ்வுக் குற்றச்சாட்டுகளை முன்னெடுக்க எந்த முகாந்திரமும் இல்லை. அதிகாரப் பூர்வமற்ற மனைவியருக்குப் பிறந்த பிள்ளைகளும் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்று அலைந்து திரியும் இன்றையத் தலைவர்களின் நடுவில் தலை மகவையும் வான் படைக்குத் தலைமை தாங்க வைத்திருக்கும் ஒரு தலைவனைப் பற்றிய அவதூறு என்றே இதனைப் பொருள் கொள்ள முடியும்.

காலம் வெகு வேகமாக மாறித் தன் சாதகக் காற்றை ஈழ விடுதலையின் பக்கம் அடித்து வரும்போது, மாகாண இடைவெளி பற்றியும் தோட்டத்துச் சமவெளி பற்றியும் பேசித் திரிவது ஒரு வரலாற்றுப் பிழையன்றி, இனத் துரோகமும் ஆகும். ஈழ விடுதலை என்கிற அந்த மந்திரச் சொல், உலகெங்கிலும் தமிழர்களைத் தங்கள் சாதி, மத, நிலப்பரப்பு அடையாளங்களை துறக்க வைத்திருக்கிறது. ஆரியம், திராவிடம் என்கிற கால இடைவெளியைக் கூட கழற்றி எரிந்திருக்கும் இந்த தமிழுணர்வு முன்னெப்போதும் நிகழவில்லை என்றே சொல்ல முடியும், இன்று ஒவ்வொரு உணர்வுள்ள தமிழ் மறவனும் ஒரு போராளியாய் மாறித் தன்னால் ஆன போராட்ட வடிவங்களை முன்னெடுக்கத் துணிந்திருக்கிறான். வரலாற்றில் இது நமக்குக் கிடைத்த பொற்காலம். இந்த வாராது வந்த மாமணியை, தமிழர்களின் இன மொழி அடையாளங்களை மீட்டெடுக்கும் ஒரே கருவியான தமிழ் தேசியத்தை அதன் கட்டமைப்பாளர்களான தமிழீழ விடுதலைப் புலிகளை நமது வழமையான பானைக்குள் நண்டு விட்ட கதையாய் சிதைத்து விடாமல் காக்க வேண்டிய தார்மீகக் கடமை சாமான்ய மக்களை விடவும் ஊடகங்களில் இயங்கும் வாய்ப்புப் பெற்றவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. மாற்றுக் கருத்துக்களும், ஆய்வுகளும் செய்வதற்கு ஒரு காலம் இருக்கிறது, அந்தக் காலம் வரும்போது எனக்குள்ளும் இருக்கும் சில மாற்றுக் கருத்துக்களை தயங்காமல் எடுத்துரைப்பேன், அதுவரையில் உதவி செய்யாவிடினும், உபத்திரவம் செய்யாமல் இருப்பதே சாலச் சிறந்தது சித்தாந்தவாதிகளுக்கு.

தமிழராய் ஒன்றிணைவோம், தமிழ்த் தேசியத்தைக் கட்டமைப்போம்
புலிகளின் தாகம் என்றில்லை, ஒட்டுமொத்தத் தமிழினத்தின் தாகமும் தமிழீழத் தாயகம் தான்.
விடுதலைப் புலிகள் மட்டுமே இன்றைய வாழும் தமிழர்களின் பன்னாட்டு முகவரி, உலக அடையாளம்.

- அறிவழகன் கைவல்யம்(arivazhagankaivalyam@gmail.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்

Comments