அனைத்துலகத்தின் கவனத்தை உயிரை மாய்த்தே ஈர்க்க வேண்டுமாயின் அதற்கும் தயார்: சுப்பிரமணியம் பரமேஸ்வரன்

தமிழர் தாயகத்தில் அவலப்படும் தமிழ்மக்களுக்கு ஒரு விடிவு கிட்டும்வரை தனது சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தெரிவித்துள்ள சுப்பிரமணியம் பரமேஸ்வரன், அனைத்துலக சமூகத்தின் கவனத்தை தனது உயிரை மாய்த்தே ஈர்க்கும் நிலை வந்தால் அதற்கும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் 11 ஆவது நாளாக சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் வீதியின் ஓரத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தில் இருக்கும் அவர், தனது போராட்டம் குறித்து புதினத்துக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் மேலும் தெரிவிக்கையில்:

எமது மக்களுக்கு ஏதாவது என்னால் முடிந்தவற்றை செய்ய வேண்டுமென நீண்ட நாட்களாக நான் எண்ணியிருந்தேன். அதற்கான சந்தர்ப்பம் சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டமாக எனக்கு கிடைத்திருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் எனது தாயார் மற்றும் சகோதரர்கள் சிறிலங்கா அரசின் தாக்குதலில் உயிரிழந்திருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. மனது நம்ப மறுத்தாலும் எனது மூளை அதனை நம்பவைக்கின்றது.

ஏனெனில் அங்கு நடக்கும் நிகழ்வுகள் அப்படிப்பட்டவையே.

சிறிலங்கா அரசாங்கத்திடம் நான் எதுவித கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. அனைத்துலக சமூகத்திடம்தான் நான் எனது கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறேன்.

இலங்கையில் இன்று நடைபெறும் போரை அனைத்துலக நாடுகள்தான் ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன.

சிறிலங்காவால் இந்த போரை நடத்த முடியாது. அவர்கள் தாங்களே இந்தப் போரை நடத்துவதாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். வன்னியில் இடம்பெறும் போரில் நிகழும் வெற்றி தங்களுடையதல்ல என்பது உண்மையில் அங்குள்ள ஒவ்வொரு சிங்கள இராணுவத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நன்கு தெரியும்.

எனவே நான் இங்கு மேற்கொள்ளும் இந்த போராட்டமானது அனைத்துலக நாடுகளுக்கான போராட்டமே. ஆப்கானிஸ்தானில் நடந்ததையும் ஈராக்கில் நடந்ததையும் நாங்கள் பார்க்க வேண்டும்.

ஈராக்கில் அந்நாட்டு அரச தலைவர் சதாம் உசைனை இராசாயன ஆயுதங்கள் வைத்திருக்கிறார் என்று கூறியே அனைத்துலக சமூகம் அங்கு படையெடுத்தது. அங்கு நடந்தது என்ன?.

ஆனால் இன்று சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் இத்தகையதொரு ஆயுத பயன்பாட்டுடன் கூடிய இனப்படுகொலைக்கு எதிராக அனைத்துலக சமூகம் என்ன செய்துகொண்டிருக்கின்றது?.

வன்னியில் இன்று இரண்டு மாதத்திற்குள் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இன்னும் மக்கள் கொலை செய்யப்பட வேண்டும் என்றா அனைத்துலக சமூகம் எதிர்பார்க்கின்றது?

எனது போராட்டத்தையும் இன்று கொச்சைப்படுத்துகின்றனர். நான் புலிகளால் அனுப்பிவைக்கப்பட்டு உண்ணாநிலைப் போராட்டம் இருக்கும் ஒருவர் என்று கூறுகிறார்கள்.

கடந்த 11 ஆம் நாள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2 இலட்சம் தமிழ்மக்கள் இங்கே வந்தனர். அப்படியானால் அவர்கள் அனைவரும் புலிகளால் அனுப்பப்பட்டவர்களா?.

விடுதலைப் புலிகளின் தலைமையைக் காப்பாற்றுவதற்காகவே இத்தகைய உண்ணாநிலைப் போராட்டங்கள் நடத்தப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது.

விடுதலைப் புலிகளைக் காப்பாற்றத்தான் உண்ணாநிலைப் போராட்டம் இருக்கின்றோம் என்ற தகவலில் உண்மை இல்லை. விடுதலைப் புலிகளுக்கு தங்களைக் தற்காத்துக்கொள்ளத் தெரியும். தமிழ்மக்களை காப்பாற்ற வேண்டும் என்றுதான் நாங்கள் இங்கே உண்ணாநிலைப் போராட்டம் நடத்துகிறோம்.

விடுதலைப் புலிகள் மக்களைத் தடுத்துவைத்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் கூறுகின்றது. வன்னியில் சில நூறு புலிகளே இருப்பதாகவும் அவர்களில் 90 சதவீதமானோர் காடுகளுக்குள் சென்றுவிட்டதாகவும் கூறும் சிறிலங்கா இராணுவத்தினர், அங்குள்ள மக்களை விடுதலைப் புலிகளே தடுத்து வைத்திருப்பதாக கூறுகின்றனர். லட்சக்கணக்கான மக்களை அரசாங்கம் கூறுவதுபோல சில போராளிகளால் தடுத்து வைத்திருக்க முடியுமா?. இதனை எப்படி நம்ப முடியும்?.

அதாவது, இது அனைத்துலக சமூகத்தை ஏமாற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் போடும் நாடகமாகும். இந்த நாடகத்தை எதற்காக அனைத்துலக சமூகம் நம்பிக்கொண்டிருக்கிறது என்பதுதான் இன்றுள்ள முக்கியமான கேள்வியாகும்.

அதேநேரம், சிங்கள மக்கள் மீது சிறிய குண்டு வீசினால் கூட அதனை அனைத்துலக சமூகத்திற்கு அவர்களால் இலகுவாக எடுத்துச் செல்ல முடிகிறது. ஆனால் தமிழ்மக்களது நிலை அப்படிப்பட்டதல்ல. எங்களுக்கு அத்தகைய வசதி வாய்ப்புக்கள் இல்லை. எங்களுடைய கருத்தை அனைத்துலகம் கேட்கவும் இல்லை.

எனவே போராட்டத்தின் மூலம்தான் அனைத்துலகத்தின் கவனத்தை எங்களால் ஈர்க்க முடிகிறது. எங்களது உயிரை மாய்த்தே அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டுமாயின் அதனையும் நாங்கள் செய்வோம்.

நாங்கள் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கின்ற போதும் இங்குள்ள அரசியல்வாதிகள் இன்னமும் முற்றுமுழுதாக எங்களுடைய இந்த விடயத்தில் கவனம் செலுத்தவில்லை என்பது மேலும் வேதனையளிக்கிறது. இதுவரை பிரித்தானியாவின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னை இங்கே வந்து சந்தித்து சென்றுள்ளனர். தமது ஆதரவை தருவதாக அவர்கள் வாக்குறுதி தந்துள்ளனர்.

என்னுடன் இணைந்து சாகும்வரை போராட்டத்தை தொடங்கிய மாணவனுக்கு சில உறுதிமொழிகளை அவர்கள் வழங்கியதன் அடிப்படையிலேயே நாங்கள் நீரை அருந்தியவாறு போராட்டத்தை தொடர்வதற்கு சம்மதித்தோம்.

எனினும் எமது இலக்கை அடையும்வரை போராட்டத்தை நான் தொடர்வேன். எனது வாழ்க்கை இங்கே முடிந்தாலும் இந்த போராட்டம் தொடரப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு வரும் வரைக்கும் இந்தப் போராட்டம் தொடரவேண்டும்.

வன்னி மக்களுக்கு ஒரு செய்தியை நான் கூற விரும்புகிறேன். ஆகக் கூடுதலான துன்பத்தையே தற்போது நீங்கள் தற்போது அனுபவித்து வருகிறீர்கள். இதற்கு மேல் எந்தவொரு துன்பமும் வரப்போவது கிடையாது. உங்களுக்கு எந்த துன்பமும் இனிமேல் வரக்கூடாது என்பதற்காகவே நாங்கள் இங்கே சாகும்வரை போராட்டம் நடத்துகிறோம் என்றார் அவர்.

இவரது இந்த உண்ணாநிலைப் போராட்டத்திலும் அங்கு தமிழ்மக்களால் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்திலும் நாளாந்தம் இரவு-பகல் பாராது ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக தமது கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு நிற்கும் அந்த மக்கள் , உண்ணாநிலையில் இருந்து உடல் தளர்வுற்றுள்ள பரமேஸ்வரனை கண்ணீர் மல்க இருகரம் கூப்பி வணங்கி வருகின்றனர்.

இவரை பார்வையிடுவதற்காக வெளிநாட்டவர்களும் வருகை தருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Comments