மாவீரன் முத்துக்குமாருக்கு நினைவு மண்டபம்

Muthukumar ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள அரசின் இனவெறிப் போரை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தீக்குளித்து ஈன்னுயிர் நீத்த மாவீரன் முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில் நினைவு மண்டபம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன.

ஈழத்தமிழர்களின் இன்னல்களை விளக்கியும், “இனத்துரோகக் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டோம்” என்று 1 இலட்சம் கையெழுத்துகளை திரட்டியும் “தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம்” என்ற பெயரில் இளந்தமிழர் இயக்கம் சார்பில் கடந்த 25.02.09 தொடங்கி 0.6.03.09 வரை தமிழ்நாடு முழுக்க பரப்புரைப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இப்பயணத்தின் முடிவில் சேலத்தில் 6.03.09 அன்று நடந்த “இன எழுச்சி மாநாட்டில்” மாவீரன் முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில் மணி மண்டபம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இவ்வறிவிப்பிற்கு முத்துக்குமாரின் தந்தை குமரேசன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் திரு.த.வெள்ளையன், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. பழ.நெடுமாறன் ஆகியோரை சந்தித்து இளந்தமிழர் இயக்கம் ஆதரவு திரட்டியது. அவர்களும் இம்முயற்சிக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தருவதாக உறுதியளித்துள்ளனர்.

இது குறித்து உலகத் தமிழர்களுக்கு மாவீரன் முத்துக்குமாரின் தந்தை ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தமிழர்களுக்கு வணக்கம். எனது மகன் முக்குமார், வீரத்தமிழ்மகன் மாவீரன் என்ற உயர்ந்த தகுதியை அடைந்திருப்பதில் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. தமிழ் இனத்திற்காக அவன் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டது அவனது இழப்பையும் கடந்த பெருமிதத்தை எங்களுக்கு வழங்கியுள்ளது.

தேர்தல், சாதி அரசியலைத் தவிர்த்து, புரட்சிகர மாற்று அரசியலை தமிழக இளைஞர்களும், மாணவர்களும் முன்னெடுக்க வேண்டும் என்பது முத்துக்குமாரின் இறுதிக் கடித வேண்டுகோள். இந்த வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்று இளந்தமிழர் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் மார்ச் 6ம் தேதி சேலத்தில் நடத்திய இன எழுச்சி மாநாட்டில் “வீரத்தமிழ் மகன் மாவீரன் முத்துக்குமாருக்கு நினைவு மண்டபம் எழுப்புவோம்” என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் செயலாகும்.

இளந்தமிழர் இயக்கத்தினர் முத்துக்குமாருக்கான நினைவு மண்டப அடிப்படைப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். அவர்களது முன்முயற்சியில் எங்கள் குடும்பத்தினருக்கு முழு சம்மதம் உள்ளது. இந்த நினைவு மண்டபம் தமிழர் வரலாற்றில் அழியாப் பணிகளை மேற்கொள்ளும் அறிவு மையமாகச் செயல்படும் என்று இளந்தமிழர் இயக்கத்தினர் உறுதி தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்த சமூகமும் இந்த முயற்சியில் கைகோர்த்துச் செயல்பட வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.

நாள் 04.04.09.
இடம் திருச்சிராப்பள்ளி

அன்புடன்,
S.குமரேசன்

இவ்வாறு அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முத்துக்குமாரின் தந்தை வெளியிட்ட கடிதத்திற்கு ஏற்ப, விரைவில் மணி மண்டபம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு அதற்கான முறையான அறிவிப்புகள் வெளியிடப்படும்.

தோழமையுடன்,
க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழர் இயக்கம்

Comments