இப்போது இல்லையேல், இனி எப்போதும் இருக்காது

தமிழர்களுக்கு எதிரான சிறிலங்காவின் போரின் பின்னணியில் இந்தியாவின் காங்கிரஸ் அரசாங்கம் பலமாக இருப்பதாகக் கருதப்படுகின்ற சூழலில்

- தமிழ்நாட்டு மக்களினது தமிழீழ ஆதரவு எழுச்சியை மையமாக வைத்து நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலை ஆராய்கின்றார் சென்னனையில் இருந்து தமிழகத்தின் ஒர் இளம் ஊடகவியலாளரான அ.பொன்னிலா.

"எனது உடலைக் கைப்பற்றி ஈழப் போராட்டத்தைக் கூர்மையாக்குங்கள்" என்று முழங்கி ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த வீரமகன் முத்துக்குமாரின் உடல் கொளத்தூர் மூலக் கொத்தளத்தில் கிடத்தப்பட்டிருந்த போது ஏற்பட்ட எழுச்சி தமிழகத்தின் தன்னெழுச்சி.

வழிநெடுகிலும் கண்ணீரும் கம்பலையுமாக மெழுகுவர்த்தியோடு அந்தத் தியாகியை வழியனுப்பிய மக்கள், இந்த எழுச்சி இத்தனை வேகத்தில் அடங்கிப்போகும் என எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.

போராடிய வழக்கறிஞர்கள் மீது தாக்குதல், கல்லூரிகளுக்கு விடுமுறை என காங்கிரஸ், கருணாநிதி அரசு தொடுத்த அடக்குமுறைகளுக்கு பலியானது தமிழகம்.

ஆனால், ஈழத்துக்காக போராடிய போராடிக் கொண்டிருக்கும் நண்பர்கள் ஒன்றை கவனிக்கத் தவறுகிறார்கள்.

அதாவது, இந்தப் போராட்டங்களை இந்திய அரசியல் சட்டமோ அதனை நடைமுறைப்படுத்துகிற நீதிமன்றங்களோ தடுக்கவில்லை.

மாறாக இந்த ஈழத் தமிழர் எழுச்சிப் போராட்டத்திற்கு ஒருவிதமான சட்ட அங்கீகாரத்தை நீதிமன்றங்கள் வழங்கியிருக்கின்றன.

இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை பணிப்புறக்கணிப்பு போராட்டம் அறிவித்தபோது, அதனை சட்டவிரோதம் என அரசு நிர்வாகத்தைக் கொண்டுதான் தமிழக முதல்வர் கருணாநிதி தடுத்தார்.

ஆனால் உச்சநீதிமன்றமோ "மக்களின் உணர்வுகளில் தலையிட முடியாது" என்று சொல்லி பணிப்புறக்கணிப்புக்கு தடைவிதிக்க மறுத்து விட்டது. அன்றைய தமிழகம் தழுவிய பணிப்புறக்கணிப்புக்கு கிடைத்த சட்டப் பாதுகாப்பு.

அதுவே இன்று பெரியார் திராவிடர் கழகத் தோழர்களை குண்டர் சட்டத்தில் அடைத்தது செல்லாது என்று சொல்லிவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

இதோ இப்போது சீமானை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது செல்லாது எனச் சொல்லி அதை இரத்தும் செய்து விட்டது நீதிமன்றம். சீமான் இன்னும் இரண்டொரு நாளில் விடுதலையாகிறார்.

கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் என அனைவரின் விடுதலைக்குமே இத்தீர்ப்பு ஆதாரமான ஒன்றாக மாறியிருக்கிறது. வழக்கறிஞர்களைத் தாக்கிய வழக்கிலும் உச்சநீதிமன்றம் மாநில அரசுக்கு சாதகமாக இல்லை.

இதெல்லாம் சட்டத்தின் நுணுக்கங்கள். ஆனாலும் ஒரு ஜனநாயக எழுச்சியை ஒடுக்க நினைக்கும் கருணாநிதி, காங்கிரஸ் கூட்டுக்கு தொடர்ந்து கிடைக்கும் சவுக்கடி.

கடந்த சில மாதங்களாக சோர்ந்து போய்க்கிடந்த தமிழக போராளிகளுக்கு இது தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு.

நூறு பெண்கள் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் இருக்கிறார்கள். மீண்டும் காங்கிரஸ் அலுவலகத்துக்கு முன் பெண்கள் மறியல் செய்கிறார்கள். சென்னைக்கு வெளியிலும் பலர் போராடுகிறார்கள்.

இதோ மீண்டும் பதின்மூன்றாவதாக ஒரு இளைஞன் தீக்குளித்திருக்கிறான். இந்த பதின்மூன்று பேரும் எதற்காகச் செத்தார்கள்?.

அவர்களைக்கொண்டு போய் புதைக்கவா? ஒவ்வொரு முறை எரிந்து விழும் போதும் விதையாக நினைப்பவர்களை நாம் விதைக்காமல் புதைக்க நினைத்ததன் விளைவு. போராட்டங்கள் நீர்த்துப் போயின.

பிணங்களைக் கொண்டு அரசியல் செய்து ஆட்சிக்கு வந்ததுதான் காங்கிரஸ் கட்சியின் வரலாறு. நாம் அரசியலுக்காக அல்ல ஈழ மக்களின் விடிவுக்காக. அங்கே செத்து மடிந்து கொண்டிருக்கும் நம் சொந்த மக்களுக்காக, போராடுவதற்கான ஒரு வாய்ப்பாக இந்தத் தருணங்கள் நமக்கு உருவாகி வருகிறது.

நாம் இதில் தோற்றுப் போவோம் என்றால் அன்றைக்கு மழையில் நனைந்து, பதவி விலகல் கடிதங்களைப் பெற்று, கவிதை எழுதி, கண்ணீர் விட்டு, கடைசியில் காலை வாரியபோதும் நாம் ஏமாந்த தமிழர்கள்தான் என்பது உண்மையாகிவிடும்.

இதோ ஒரு முருகதாஸ் புலத்தில் நெருப்பை மூட்டினான். இன்று புலத்தில் ஈழ மக்கள் லட்ச லட்சமாய் திரண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

முப்பதுக்கும் அதிகமான நாடுகளில் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பின் கொடியை புலம்பெயர் தமிழர்கள் சுமந்து அலைகிறார்கள். இரவு-பகலாய் அனைத்துலக சமூகத்தின் முகத்திற்கு முன்னால் ஒரு இனத்திற்கு இழைப்பட்ட அநீதியை முன்வைத்து நியாயம் கேட்கிறார்கள்.

இத்தனைக்கும் அவர்கள் எந்தப் புலிக்கொடியை தங்கள் தோள்களில் சுமக்கிறார்களோ அந்த புலிக்கொடி அந்த நாடுகளில் தடைசெய்யப்பட்ட கொடி என சிலர் ஈழ மக்களை பயமுறுத்துகிறார்கள்.

மேற்குலகம் அந்தப் போராட்டங்களை முற்றுமுழுதாக தடை செய்யவில்லை. கரிசனையோடு பதில் சொல்கிறது. பட்டும் படாமலும் பேரினவாத அரசிடம் கெஞ்சிக் கொண்டிருக்கின்றது.

அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ்,கனடா, நோர்வே என எல்லா நாடுகளும் ஈழத் தமிழர்கள் மீது கவலை கொள்ளும் போது ஒரு சின்னஞ் சிறு தீவு ஏன் அந்த மேற்குலகின் குரலை உதாசீனப்படுத்துகிறது என தமிழக மக்களாகிய நாம் நினைத்துப் பார்த்ததுண்டா?.

ஆமாம் தென்கிழக்கில் நமது தாய்நாடான இந்தியாதான் இப்போதைய சண்டியர். அதுதான் இலங்கைப் போரை முட்டுக்கொடுத்து நடத்துகிறது. இதை நான் சொல்லவில்லை சிறிலங்கா சுகாதாரத்துறை அமைச்சர் சிறிபால டி சில்வாவே வெளிப்படையாக பல தடவைகள் கூறியிருக்கிறார்.

இதை நமது தாய்நாடான இந்தியாவும் மறுக்கவில்லை.

ஆமாம், தென்னாசியாவில் இந்தியாவை மீறி தற்கால உலகச் சூழலில் மேற்குலகம் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட முடியாது நண்பர்களே! அதனால்தான் அது எல்லாவற்றையும் வேகமாக முடிக்க நினைக்கிறது.

5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களைக் கொன்றொழித்த பிறகும் போர் நிறுத்தம் பற்றி சிறிலங்காவிடம் இந்தியா வாய் திறக்கவே இல்லை!

சோனியாவை கருணாநிதி வற்புறுத்துவாராம்; கடிதம் எழுதுவாராம்; சோனியா போரை நிறுத்த வேண்டும் என கருணாநிதிக்கு கடிதம் எழுதுவாராம்; அறிக்கைகள் கொடுப்பார்களாம்.

ஆக, இந்த நாடகங்கள் பலவீனமான தமிழகத் தலைமையை கேலிக்குள்ளாக்கியிருப்பதோடு, ஈழத் தமிழர் கொலையில் இந்த மௌனமும் ஒரு பிரதான காரணமாக இருப்பதை நாம் இன்னும் உணரவில்லையா?.

நமக்கு தேர்தல் முடிந்து யாருக்கு எத்தனை மந்திரிப் பதவி என்றெல்லாம் பங்கு போட்டு பின்னர் கடைசியில் ஈழத் தமிழர்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம் என்றால் அப்போது ஒப்பாரி வைக்க ஈழம் ஒரு இடுகாடாக மட்டுமே இருக்கும்.

தோழர்களே!

போராடுவதற்கான வாய்ப்புக்கள் எப்போதும் வராது. எப்போதாவதுதான் வரும் கிட்டத்தட்ட 13 பேர் தீக்குளித்து மாண்டது நாம் போராட வேண்டும் என்றுதான்.

நாம் மீண்டும் மீண்டும் அவர்களைக் கொண்டு போய் புதைக்கிறோம். ஈழ எழுச்சியையும் சேர்த்துத்தான்.

இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் குண்டர்களால் கொல்லப்பட்ட அப்பாவி சீக்கிய மக்களுக்காக எரிந்த நெருப்பு இன்றும் எரிகிறது பஞ்சாப்பில்.

அந்த நெருப்பின் வெளிப்பாடே ப.சிதம்பரம் மீது வீசப்பட்ட செருப்பு.

மன்மோகன் பதறுகிறார்; சோனியா பம்முகிறார்; ஆனால் தமிழன் என்றால் இவனை எப்படியாகிலும் ஏமாற்றலாம் என்கிற எண்ணமும் துணிச்சலும் இருப்பதால்தான் ஈழத்துக்கான எழுச்சிகளை அடக்கி ஒடுக்கிறார்கள்.

போராடுவதற்கான, வீதிக்கு வருவதற்கான, வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் தவறவிட்டால் இனி எப்போதும் நம்மால் போராட முடியாது.

ஈழ மக்களைக் கொன்று எல்லா தமிழர் தாயகங்களையும் ஆக்கிரமித்து கடைசியில் பிரபாகரன் பற்றிய விருப்பங்களையும் வெளியிடுகிறார்கள் துரோகிகள்.

அன்பார்ந்த மாணவர்களே! வழக்கறிஞர்களே! பெண்களே! அக்கறையுள்ள அரசியல் தலைவர்களே! இப்போதும் நீங்கள் போராடத் தவறினீர்கள் என்றால் இனி எப்போதும் உங்களால் போராட முடியாமல் போகலாம்.

இன்று ஈழத்தில் வீசப்படும் குண்டுகள் நாளை நம்மீதும் வீசப்படாது என்பதற்கு ஒரு உத்திரவாதமும் இல்லை. அப்போது நமக்காக குரல் கொடுக்க இந்த உலகத்தில் ஒரு நாதியும் இருக்காது.

உங்கள் கருத்துக்களை இந்த முகவரிக்கு அனுப்பலாம்: aponnila@gmail.com

Comments